பொதுவாக தொழிலாளர்கள் பற்றி மற்றவர்கள் பார்க்கும் பார்வைக்கும் தந்தை பெரியார் பார்க்கும் பார்வைக்கும் அடிப்படை யிலேயே வேறுபாடு உண்டு. தந்தை பெரியார் இதோ கூறுகிறார்.
“தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் மிருகங்கள் போல் நடத்தப்படுகிற பாட்டாளி கூலி ஏழை மக்கள் தான் எனக்கு கண் வலியாய் இருப்பவர்கள். அவர்களை சம மனிதர்களாக ஆக்குவது தான் எனது கண் நோய்க்கு பரிகாரம்”. (‘விடுதலை’ – 15.10.1967) என்று இன்றைக்கு 56 ஆண்டுகளுக்கு முன்னாலே தந்தை பெரியார் கண்ணீர் வடிக்கிறார்.
1952இல் எஸ்.ஆர்.எம்.யூ. துவக்க விழா பொன்மலையில் நடைபெற்ற பொழுது அவர் ஆற்றிய உரையும் கவனிக்கத்தக்கது. “இவ்வளவு பாடுபட்டும் இன்னும் இந்தக் காலத்திலும் பார்ப்பான் இருக்கின்றான். பறையன் இருக்கிறானே. உலகிலெல்லாம் மார்க்சியம் பரவின இந்தக் காலத்திலும் இத்தகைய பேதங்கள் இருக்கிறதே. அந்த ஜாதிகளில் ஒன்று தானே தொழிலாளி ஜாதி.
பார்ப்பான் ஆதிக்கம் குறையவில்லையே – குறையவில்லை என்பதோடு மட்டுமல்ல; இந்த பேதங்கள் இந்த சுயராஜ்ய குடியரசிலே இன்றும் அனேகமாகப் பலப்படுத்தப்படுகின்றனவே!
தொழிலாளிக்கு அடி உதை – அதோடு மட்டுமா தொழிலாளர் குடும்ப பெண்கள் எத்தனை பேர் கற்பழிக்கப்பட்டார்கள். எத்தனைப் பெண்டுகளை மயிரை பிடித்து இழுத்து தெருவில் கொண்டு வந்து போட்டு அடித்தார்கள். இவ்வளவு பாடுகள் படச் செய்தும் அவர்களது கஷ்டம் நீங்கவில்லையே!
குறைந்த கஷ்ட நஷ்டத்தில் அதிகப்படியான லாபத்தை அல்லவா பெற வேண்டும் – இதை நினைத்தால் எனக்கு மனம் பதறுகிறது. நம் மக்கள் இப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என்கின்ற ஆத்திரத்தால் சில சமயங்களில் ரத்தக் கொதிப்பு ஏற்படுகிறது. எத்தனை நாளைக்கு இப்படி நடந்தாலும் சூத்திரனும், அதாவது தொழிலாளர்களாக சூத்திரனும் பார்ப்பான் முதலாளி ஆகவும் தானே இருப்பான்” என்று தந்தை பெரியார் ரத்தக்கண்ணீர் வடிக்கிறாரே!
இந்த நிலைமை மாற வேண்டாமா? தொழிலாளி வீட்டு பிள்ளை தொழிலாளியாகத் தான் இருக்க வேண்டுமா? அவனுக்குக் கல்வி வேண்டாமா? உத்தியோகம் வேண்டாமா? பொருளாதாரத்தில் நிமிர்ந்து நிற்க வேண்டாமா? தன்னெழுச்சி பெற வேண்டாமா? என்பதுதான் நாம் நடத்துகின்ற மாநாட்டினுடைய அடி நாதம் ஆகும்.
தாம்பரத்தில் நடைபெற்ற திராவிடர் தொழிலாளர் கழக மாநில மாநாட்டில் ஒரு முக்கியமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது “அடிப்படையில் ஒதுக்கப்பட்டு காலம் காலமாக உரிமையற்றவர்களாக வாழ்ந்து வரும் அடிமட்டத் தொழிலாளர் வீட்டுப் பிள்ளைகள் படித்து முதல் தலைமுறையாக கல்வி உரிமை பெற்று, மருத்துவம் போன்ற படிப்புக்குள் செல்ல ஆர்வம் காட்டும் இந்தக் காலகட்டத்தில் அந்த முயற்சியின் குதிகால் எலும்பை முறிக்கும் வகையில் நீட் தேர்வைத் திணித்திருப்பது. ஏற்கெனவே ஆதிக்கம் பெற்ற உயர் ஜாதி அரசியலின் திட்டமிட்ட சூழ்ச்சி – என்பதை மாநாடு திட்டவட்டமாக தெரிவிக்கிறது. ஒன்றிய அரசு உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மாநாடு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.”
தொழிலாளர் மாநாட்டில் இதுபோன்ற தீர்மானங்கள் என்பது திராவிடர் கழகத்திற்கே உரித்தான தனித்தன்மையாகும். இன்னொரு முக்கிய தீர்மானம் கவனிக்கத்தக்கது. “விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்த மாட்டோம் என்று தமிழ்நாடு அரசு தீர்மானத்தை நிறைவேற்றியது போன்று தொழிலாளர்களின் நலனை பாதிக்கக்கூடிய ஒன்றிய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்துவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு சட்டமன்றத்தில் நிறைவேற்ற தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று மாநாடு கேட்டுக் கொள்கிறது.”
இந்தத் தீர்மானத்தின் நோக்கம் என்ன – ரூபாய் மதிப்பு இழப்புக்கு பின்னால் சிறு – குறு தொழிற்சாலைகள் முடக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர் தோழர்கள் வீதிக்கு வந்தனர். அவர்களுடைய வாழ்வே கேள்விக்குறியாகிவிட்டது. இந்த நிலைமையில், மேலும் ஒரு புதிய அபாயகரமான சட்டத்தை ஒன்றிய பி.ஜே.பி. அரசு நிறைவேற்றி உள்ளது. இதற்கு முன் வரை 100 தொழிலாளர்கள் வரை பணியாற்றும் தொழிற்சாலைகளை மூடுவதற்கு அரசின் அனுமதி தேவையில்லை. ஆனால் இப்பொழுது ஒன்றிய பி.ஜே.பி. அரசு கொண்டுவந்துள்ள சட்டம் என்ன தெரியுமா? அதை 300ஆக உயர்த்தியுள்ளது இதன் பொருள் என்னவென்றால் 300 பேர் வரை பணியாற்றும் தொழிற்சாலைகளை மூடி ஏன்? எதற்கு? என்று கேள்வி இல்லாமல் – காரணம் சொல்லாமல் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பி விடலாம். நடு ரோட்டில் நிற்க வைக்கலாம். என்பது எவ்வளவு பெரிய கொடுமை. இதனைத் தான் தாம்பரம் திராவிடர் தொழிலாளர் கழக மாநில மாநாடு ஒரு தீர்மானமாக வலியுறுத்தி உள்ளது
இப்படி ஒவ்வொரு தீர்மானமும் இந்தக் காலகட்டத்திற்கு மிகுந்த அவசியமான தீர்மானங்களாகும். கிராமங்களில் விவசாயம் என்பது கிட்டத்தட்ட வீழ்ச்சி அடைந்து விட்டது. ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பு கிடையாது. இந்த நிலையில் ஒன்றிய ஆட்சியில் இருந்த அய்க்கிய முற்போக்கு அரசு ஓர் அருமையான திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது. அதுதான் “மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம்”. நூறு நாட்களுக்கு வேலை கொடுக்கும் திட்டமாகும். இதனால் ஓரளவு கிராம மக்கள் வாழ்விலே நிம்மதிப் பெருமூச்சு ஏற்பட்டது. அந்தத் திட்டத்தை மேலும் வளர்க்க வேண்டிய ஒன்றிய அரசு அதனை குலைக்கும் வகையில் செயல்பட முற்பட்டு இருப்பது மனிதாபிமானமற்ற செயல் அல்லவா? இதையும் தாம்பரம் திராவிடர் தொழிலாளர் கழக மாநாடு சுட்டிக்காட்டி இருக்கிறது.
இப்படி எல்லா வகையிலும் தாம்பரம் திராவிடர் தொழிலாளர் கழக நான்காவது மாநில மாநாடு சிறப்பான வெற்றியை பெற்றிருக்கிறது. இந்த வெற்றிக்கு காரணமான இயக்கத் தோழர்களையும் கடும் உழைப்பையும், ஆதரவளித்த பொது மக்களையும் திராவிடர் கழகம் சார்பில் பாராட்டுகின்றோம். நன்றி செலுத்துகின்றோம்.