‘‘ஓசைகள் எல்லாம் துறந்து, காண்கின்ற காட்சிக்குள் நான் மூழ்கினேன்…..’’ என்ற விஜய் சேதுபதியின் பாடல் வரிகளுக்கு ஏற்றது போல், காண்கின்ற அனைத்து காட்சிகளுக்கும் உயிர் கொடுத்து, நினைவுப்பெட்டகமாக மாற்றும் ஒரு திறமை ஒளிப்பட கலைஞர்களுக்கே உள்ளது. ஆண்களுக்கு மட்டுமே என்று சொல்லும் சில துறைகளில் பெண்களும் தங்களுக்கென ஒரு இடத்தை உருவாக்கி வருகின்றனர்.
அதில் இந்த ஒளிப்பட துறையும் ஒன்று. ஒரு பொருளை ஒரு சாதாரண மனிதனின் பார்வையிலிருந்து வேறுபட்டு காணும் விந்தையினை இந்த துறைக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத இரு பெண்கள் சாத்தியப் படுத்திக் காட்டிஉள்ளனர். அந்த இரட்டை சகோதரிகள் கார்த்திகா மற்றும் ப்ரதீபா. ‘கார்த்திகா போட்டோகிராபி’ என்ற பெயரில் இவர்கள் ஒளிப் பட நிறுவனம் ஒன்றை நிர்வகித்து வருகிறார்கள்.
‘‘போட்டோகிராபி எங்களின் கனவு. ஆனால், அதற்காக நாங்கள் தனியாக படித்தோமா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்வோம். நாங்கள் படித்தது எம்.காம். நாங்கள் கையில் கேமரா எடுத்த போது எங்கள் வீட்டில் அதற்கு மறுப்புத் தெரிவித்தார்கள். ஆனால் எங்களின் ஆர்வத் தைப் பார்த்து ஆதரவு கொடுக்க ஆரம்பித்தார்கள்” என்று கூறிய சகோதரிகள், தங்களின் கனவினை எவ்வாறு நடை முறைப்படுத்தினார்கள் என்பதை விவரித்தனர்.
இதுதான் எங்களின் துறை என்று நாங்கள் முடிவு செய்து கேமரா ஒன்றை வாங்கினோம். முதலில் ஆர்வத்தில் வாங்கிவிட்டாலும், இந்த துறையில் எங்களால் சாதிக்க முடியுமா என்று நம்பிக்கை இல்லை. கேமரா வாங்கிய காசினை திரும்ப சம்பாதிக்க முடியுமா என்று தெரியவில்லை. அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்றுகூட தெரியாது. யுடியூப் பார்த்துத் தான் கற்றுக் கொண்டோம். ஆனால் அனைத்து வீடியோவிலும் ஒளிப்படம் மற்றும் வீடி யோக்கள் எப்படி எடுக்க வேண்டும் என்று ஒரே மாதிரிதான் விளக்கி இருந்தார்கள். இடத்துக்கு ஏற்ப லைட்டிங் அமைப்பது பற்றி சுத்தமாகப் புரியவில்லை. நண்பர்கள், தெரிந்தவர்களிடம் கேட்ட போதும் எங்களுக்கு விளங்கவில்லை. பிறகு தான் முடிவு செய்தோம்.
இதை புத்தகத்தைப் பார்த்து கற்றுக் கொள்ள முடியாது. அதைப் பற்றி தெரிந்து கொள்ள செயல்முறை விளக்கமாகத்தான் கற்றுக் கொள்ள முடியும் என்று புரிந்தது. நாங்கள் செய்யும் ஒரு சின்ன மாற்றம் கூட இதில் பெரிய விளைவை ஏற்படுத்தும் என்பதை தெரிந்து கொண்டு, ஒவ்வொரு முறையும் எந்த மாதிரி லைட் வைக்க வேண்டும், ஸ்பீட் எவ்வளவு இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு விஷயத்தையும் கற்றுக் கொண்டோம். அதன் பிறகு தான் கல்லூரி விழாக்கள் மற்றும் திருமணங்கள் என ஒளிப்படம் எடுக்க ஆரம்பித்தோம். மறைந்த காமெடி நடிகர் விவேக் அவர்களையும் இரண்டு முறை நாங்கள் ஒளிப்படம் எடுத்திருக்கிறோம். ஆரம்பத்தில் இரண்டு ஆண்டுகள் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், கண்களில் படுவதை படம் பிடித்து எங்களின் சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவு செய்து வந்தோம். அதைப் பார்த்து எங்களுக்கு ஆர்டர் வர ஆரம்பித்தது’’ என்ற ப்ரதீபாவைத் தொடர்ந்தார் கார்த்திகா.
‘‘எங்களுக்கு உதவியாளர் யாரும் கிடையாது. வரும் ஆர்டர்களை ஆல்பமாகவும், சி.டியாகவும் மாற்றி கொடுக்கும் வரை நாங்கள் இருவருமே தான் பார்த்துக் கொண்டோம். ஒவ்வொரு ஆர்டரை முடித்து கொடுக்கும் போதும், ஒரு பிள்ளையைப் பெற்று வளர்த்தெடுப்பது போல இருக்கும்.
‘‘ஒரு ஃபோர்ட்போலியோ எடுப்பது என்றால் அதற்கு நிறைய செலவு செய்ய வேண்டும். வசதி படைத்தவர்கள் மற்றும் பிரபலங்களால் முடியும். ஆனால் அவ்வளவு செலவு செய்ய முடியாதவர் களுக்கும் தங்களை அழகாக ஒளிப்படம் எடுக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அவர்களால் முடிந்த தொகையை மட்டும் பெற்றுக் கொண்டு ஒளிப்படம் எடுத்து தருகிறோம்’’ என்றவர் இதில் உள்ள பிரச்சினைகள் பற்றி பேச ஆரம்பித்தார். ‘‘இது எங்களுக்கு பிடித்த வேலை மற்றும் எங்களை தேடி வரும் போது மகிழ்ச்சியாக இருக்கும். எங்களை அவர்கள் வீட்டுப் பெண்கள் போலதான் நடத்துவார்கள். அதைப் பார்க்கும் போதெல்லாம் மனசுக்கு நெகிழ்ச்சியாக இருக்கும்.
‘‘நாங்கள் பூஜ்ஜியத்தில் இருந்து தான் ஆரம்பித்தோம். இன்று பலருக்கு ஆலோசனை வழங்கி வருகிறோம். நாங்கள் இருவரும் சேர்ந்து செய்வதால் ஒருவருக்கொருவர் மனநிலை அறிந்து சேர்ந்து செயல்படுறோம். எங்கள் இருவரில் ஒருவர் இல்லாமல் வேறு ஒருவர் இருந்து இருந்தால் எங்களால் இவ்வளவு தூரம் பயணித்து இருக்க முடியுமா என்று தெரியவில்லை. எல்லாவற்றையும் விட எங்கள் வீட்டில் எங்களுக்கு கொடுத்த சுதந்திரம், எங்கள் மேல் உள்ள நம்பிக்கை.
இது எதுவும் இல்லாமல் நாங்கள் இந்த இடத் திற்கு வந்திருக்க முடியாது. நாங்கள் ஒளிப்படக் கலைஞர்கள் தான். ஆனால் எங்களை நாங்கள் ஒளிப்படம் எடுத்துக் கொண்டதில்லை’’ என்ற சகோதரிகள் சிறந்த பெண் ஒளிப்பட கலைஞர்கள் மற்றும் சிறந்த திருமண ஒளிப்படக் கலைஞர்கள் என்று விருதினை பெற்றுள்ளனர்.