நாம் பகுத்தறிவையே ஆயுதமாகக் கொண்டு, இந்திய மத ஏகாதிபத்தியத்துடன் கடினமான போர் துவக்கி னோம். நமது எதிர்கள், புராணங்களையும் பழைய பழக்க வழக்கங்களையும் ஆயுதங்களாகக் கொண்டு நம்மைத் தாக்கினர். நாம் மக்கள் சமூக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது என்றோம். அவர்கள் உயர்வு தாழ்வு, மத சாஸ்திர புராண இதிகாச ஆதாரம் பெற்று நெடுநாட்களாக இந்த நாட்டிலே நிலவிச் சக்கரவர்த்திகளாலும் ஒப்புக் கொள்ளப்பட்டுக் காப்பாற்றப்பட்டு வந்தது என்றனர். அறிவு, ஆராய்ச்சி, அனுபவம் இவைகளையே உறுதுணையாகக் கொண்டு சமூக வாழ்வை நடத்த வேண்டுமென்று நாம் கூறினோம். – மனு சொன்னபடி நடப்பதே மதக் கட்டளை என்றனர் அவர்கள். நாம் அடிமை மனப்பான்மையை வளர்க்கும் புராண ஆபாசங்களையும், வகுப்பு எதேச்சதிகாரத்தை வளர்க்கும் சாஸ்திரக் கொடுமையையும் விளக்கினோம். அந்தப் பணியில் தீவிரமாக ஈடுபட்டதில், மக்கள் மனதில் அதிலும் இளைஞூர்கள் மனதில் நமது இயக்கம் நன்கு பதிந்துவிட்டது. எவ்வளவு தீவிரமான கொள்கையாக இருப்பினும், அதை வரவேற்க ஆரம்பித்தது வாலிப உலகம். சமதர்மத்தைப் போதித்தோம்; வாலிப உலகம் பூரிப்படைந்தது. இந்நிலையிலே, தமிழ்நாட்டு அரசியல் உலகிலே மாற்றங்கள் ஏற்பட்டன.
– அறிஞர் அண்ணா
(12.12.1937 அன்று நாமக்கலில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டின் தலைமை உரை)