காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை – தென்கலை
பிரிவினரிடையே மீண்டும் தகராறு: வரதராஜ பெருமாள் என்ன செய்கிறார்?
காஞ்சிபுரம், அக். 3- காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வடகலை, தென்கலை பிரிவினரிடையே மீண் டும் தகராறு ஏற்பட்டது.
வாக்குவாதம்
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் துப்புல் வேதாந்த தேசிகர் மங்களா சாசன உற்சவம் நேற்று ((2.10.2025) நடைபெற்றது. இதற்காக காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வருகை தந்த வேதாந்த தேசிகர் முன்பு தாத்தாச்சாரியார்கள் வகையறாவினர் மற்றும் வடகலை பிரிவினர் ஸ்தோத்திர பாடல் பாடுவது மரபு.
இந்த நிலையில் நேற்று வேதாந்த தேசிகர் முன்பு தாத்தாச்சாரியார்கள், வடகலை பிரிவினர் ஸ்தோத்திர பாடல் பாடிய நிலையில் மணவாள மாமுனிகளை ஆச்சாரியாராக கொண்ட தென்கலை பிரிவினரும் ஸ்தோத்திர பாடல் பாட முற்பட்டனர்.
இதன் காரண மாகவேதாந்த தேசிகரை ஆச்சாரியராக கொண்ட வடகலை பிரிவினர், தென்கலை பிரிவினரை ஸ்தோத்திர பாடலை பாட எவ்வாறு அனுமதிக்கலாம் என கோவில் நிர்வாக அறங்காவலரும் உதவி ஆணையருமான ராஜலட்சுமியிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
நீதிமன்றத்தில்….
இதை தொடர்ந்து விஷ்ணு காஞ்சி காவல்துறை ஆய்வாளர் சங்கர சுப்பிரமணியம் தலைமையில் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டதை தொடர்ந்து வடகலை பிரிவினரிடம் விசாரணை மேற்கொண்டு சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற தேசிகர் சாற்றுமுறை உற்சவத்தின் போது ஸ்தோத்திர பாடல் பாட தென்கலை பிரிவினருக்கு கோவில் நிர்வாகம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தி
ருந்தது.
கோவில் நிர்வாகம் தடை விதித்திருந்த நிலையில் இந்த ஆண்டு எப்படி பாடலாம் என வடகலை பிரிவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கோவில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த ஆண்டு போட்ட தடை உத்தரவை உதவி ஆணையர் ரத்து செய்துவிட்டதாக தெரிவித்தார். அதற்கான உத்தரவை வழங்க வேண்டும் என கேட்டு வடகலைப்பிரிவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து வடகலை பிரிவினர் நீதிமன்றத்தில் முறையிட போவதாக கூறியதையடுத்து தென்கலை பிரிவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.