ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டும் ஒன்றிய பிஜேபி அரசும்!

3 Min Read

மூன்று முறை ஒன்றிய அரசால் தடை செய்யப்பட்ட ஓர் அமைப்பு ஆர்.எஸ்.எஸ். என்பது உலகம் அறிந்த செய்தி!

எதற்காகத் தடை செய்யப்பட்டது? பிரிட்டிஷ் அரசை எதிர்த்து வன்முறைகளில் சுயராஜ்யம் பெறும் நோக்கத்தில் இறங்கியதற்காகவா?

அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. ஹிந்துத்துவாவின் மூல வித்தகரான சாவர்க்கார் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் எழுதிய மன்னிப்புக் கடிதங்கள் அளவற்றவை – தண்டனிட்டு மண்டியிட்டதைத் தவிர அவருடைய ‘சாதனை’(?) வேறு ஒன்றும் கிடையாது.

காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்ட போது முதல் தடவையாக ஆர்.எஸ்.எஸ். தடைப்பட்டது. சுட்டுக் கொன்ற கொலை காரனான நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸா, இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும்; அவர் ஆர்.எஸ்.எஸ்.தான் என்று காந்தியார் படுகொலையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கோட்சேயின் சகோதரர் கோபால் கோட்சே சத்தியம் செய்து பேட்டி ெகாடுத்துள்ளார்.

சரி அவர்களின் கூற்றுப்படியே பார்த்தாலும், கோட்சே ஆர்.எஸ்.எஸ். இல்லை, இந்து மகாசபையைச் சேர்ந்தவராக இருந்தாலும் அடிப்படையில் வேறுபாடு எதுவும் கிடையாதே!

அதனால்தான், காந்தியார் படுகொலை செய்யப்பட்ட போது சுட்டுக் கொன்றவன் யார் என்பது முக்கியமல்ல; அவன் வெறும் ஒரு துப்பாக்கியே! என்றார் தந்தை பெரியார்.

காந்தியார் படுகொலைக்குப் பின்பலமாக எந்த சக்தி ஆதாரமாக இருந்ததோ, அதை அழித்து ஒழிக்க வேண்டும் என்றார்.

உண்மை தானே! நிஜத்தை விட்டு விட்டு, நிழலோடு சண்டை போடுவது முட்டாள்தனம்தானே!

அன்றைக்குத் தந்தை பெரியார் குறிப்பிட்ட நிஜத்தோடு சண்டைபோடும் பணியைத்தான் இன்று வரை திராவிடர் கழகம் செய்து கொண்டுள்ளது.

பாபர் மசூதி இடிப்பின் போதும்கூட, ஆர்.எஸ்.எஸ். மற்றொரு முறை தடை செய்யப்பட்டது. எப்படி சுற்றிச் சுற்றி வந்தாலும் ஆர்.எஸ்.எஸ். என்பது வன்முறையை ஆயுதமாகக் கொண்டு இயங்கக் கூடிய ஓர் அமைப்பு என்பதில் அய்யமில்லை.

அப்படிப்பட்ட ஓர் அமைப்பின் நூற்றாண்டையொட்டி, ஒன்றிய பிஜேபி அரசு அஞ்சல் தலை வெளியிடுவதும், ரூபாய் நாணயம் வெளியிடுவதும்.  எதைக் காட்டுகிறது?

அதோடு மட்டுமல்ல, வன்முறை அமைப்பு என்று தெரிந்திருந்தும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அரசுப் பணியில் சேரலாம் என்று ஒன்றிய அரசு அனுமதி கொடுக்கும் அளவுக்கு, வன்முறை ஆயுதத்துக்கு மாலை போட்டு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.

இதன் விளைவு எங்கே போய் முடியும் என்பதை நினைத்தால், சமூக நலனிலும், அமைதி தவழும் நாடாக விளங்க வேண்டும் என்று கருதுகின்றவர்களும் மிகவும் கவலைப்பட வேண்டிய ஒன்றாகும்.

அதிகார பலம் ெகாண்ட ஒன்றிய பிஜேபி அரசு தன் தாய் நிறுவனமான ஆர்.எஸ்.எஸ். என்னும் வன்முறை முரட்டுக் காளையைக் கொம்பு சீவி கட்டவிழ்த்து விட்டுள்ளது.

ஆட்சியையும் அதிகார பலத்தையும் கையில் வைத் திருப்பதால் சிறுபான்மையினருக்கு எதிராக சட்டங்களை இயற்றிக் கொண்டு இருக்கிறது.

குடியுரிமையும் இன்றி வாழ சிறுபான்மையினர் தயாராக இருக்க வேண்டும் என்று  மேனாள் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கே.எஸ். சுதர்சன் சொன்னார்.

இப்பொழுது ஒன்றிய அரசு ‘குடியுரிமை சட்டம்’ என்ற பெயரால் பல தலைமுறைகளாக இந்தியாவில் குடியிருக்கும் இஸ்லாமியர்களைக் குறி வைத்துள்ளது.

நூறாண்டு கண்ட ஆர்.எஸ்.எஸ். என்று பெருமை பேசு கிறார்களே, இந்த ஒரு நூற்றாண்டில் ஒரே ஒரு தடவை சமூக நீதிக்காக குரல் கொடுத்ததுண்டா?

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால்,  சமூகநீதி எதிர்ப்புக் களத்தில் முண்டாசு கட்டி முனைப்பாகவே இருந்தது இப்ெபாழுதும் இருக்கிறது.

மக்கள் தொகையில் பெரும் பகுதியினரான பிற்படுத்தப் பட்டவர்களுக்கு ஒன்றிய அரசுத் துறைகளில் மண்டல் குழுப் பரிந்துரைப்படி 27 விழுக்காடுக்கு வழி வகுத்த பிரதமர் வி.பி.சிங் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்தது இந்தப் பிஜேபி தானே!

நீட்டைத் திணித்ததும் EWS என்ற பெயரால் பொருளா தாரத்தில் நலிந்த உயர் ஜாதியினருக்கு (அதாவது பெரும்பாலும் பார்ப்பனர்களுக்கு) 10 விழுக்காடு இடஒதுக்கீடுக்கு வழி செய்தது இந்த ஒன்றிய பிஜேபி அரசுதானே!

இவ்வளவுக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப் புரையில் சமூகநீதிக்கு முதல் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

அதே போல அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூரான மதச் சார்பின்மை, சோசலிசம் என்பவற்றின் வேரை வீழ்த்துவதிலே கண்ணும் கருத்துமாகவும் இருப்பதை அறிவோம்.

ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டை ஒன்றிய அரசே அதிகாரப் பூர்வமாக அஞ்சல் தலை வெளியிட்டும், ரூபாய் நாணயம் வெளியிட்டும் பெருமைப்படுத்துவதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற ஹிந்துத்துவா கொள்கைதானே ஆர்.எஸ்.எஸின் உயிர்த் தத்துவம்.

அந்த ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவை ஒன்றிய அரசு அதிகாரப் பூர்வமாகக் கொண்டாடுகிறது; நெஞ்சு நிமிர்த்தி பிரதமர் புகழாரம் சூட்டுகிறார்.

‘பார்ப்பனர் அல்லாத பெரும்பான்மை மக்களும் சிறுபான்மையினரும்  விழிப்பாக இருக்க வேண்டும். அவர்களை வீழ்த்தாவிட்டால் வீழ்வது நாமே’ என்ற எச்சரிக்கையுடன் செயல்பட ஆயத்தமாக வேண்டும் – வேண்டும் என்பதே நமது அழுத்தமான வேண்டுகோள்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *