கோவை, அக். 2– சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு பெருவிழா மாநாடு – செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் 4.10.2025 அன்று நடைபெறுகிறது.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் தலைமையில், தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்று சிறப்புரை வழங்க உள்ளார்.
விழா ஆல்வார் பேலஸ் மாளிகையில் சுயமரியாதை முழக்கம் கலை நிகழ்ச்சிகளுடன்காலை 830 மணிக்கு கழக கொடி ஏற்றுதல், வரலாற்று கண் காட்சி திறப்பு, நூல்கள் வெளியீடு என தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சிகளில் திராவிட இயக்க ஆளுமைகள் சிந்தனையாளர்கள் ஏராளமானவர்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர்.
அத்தகைய சிறப்பு வாய்ந்த மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாடு முழுவதும் இருந்து திராவிடர் கழகத்தின் இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, பெரியார் பிஞ்சுகள் அனைவரும் மாநாட்டில் பங்கேற்று பேரணியில் வீர நடை போடவும், தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கை முழக்கங்களை எழுப்பவும் கருஞ்சட்டைத் குடும்பங்களாக சங்கமிக்க உள்ளனர்.
இம்மாநாட்டில் பங்கேற்க, கோவை மாவட்ட கழக சார்பில் மாவட்ட தலைவர் ம.சந்திரசேகர் தலைமையில் தனி பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதேபோல பொள்ளாச்சி கழக மாவட்டத்தில் இருந்து ஒரு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் பகுதிகளில் இருந்து மாநாட்டில் பங்கேற்க குடும்பம் குடும்பமாக கழக தோழர்கள் தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.