சுயமரியாதை இயக்கத்தால் ஜாதிச் சாக்கடையிலிருந்து வெளிவந்து சமத்து வத்தைப் பெற்றோம். அதனால் மத நம்பிக்கையிலிருந்து வெளியே வந்து மனிதநேயத்தை வளர்க்கின்றோம். ‘எல்லார்க்கும் எல்லாமும்’ என்ற உயர்ந்த மனப்பான்மையை எட்டி உள்ளோம். இத்தகு உயர்ந்த மனப்பான்மை சுயமரியாதை இயக்கத்தால் பெற்றோம். அதற்கு நன்றி செலுத்தும் எண்ணம் கொண்ட நாம் அனைவரும் அக்டோபர் 4ஆம் நாள் செங்கற்பட்டை அடுத்த மறை மலை நகரில் கருஞ்சட்டைக் கடலாய் ஒன்று கூடுவோம்!
தந்தை பெரியார், அன்னை மணியம் மையார், அறிஞர் அண்ணா, மானமிகு சுயமரியாதைக்காரர் முத்தமிழறிஞர் கலைஞர், தமிழர் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி முதலியோர் ஊட்டி வளர்த்த இனமான உணர்வு பெற்றத் தமிழர்களே! மறைமலைநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் ஒன்று கூட வாருங்கள்!
தமிழின உணர்வு கொண்டோர் ஊக்கம் பெற வாருங்கள்! தமிழர்கள் அனைவரும் சுயமரியாதை இயக்க உணர்வைப் பெற வாருங்கள்!
திராவிடப் பேரினத்து மக்கள் கல்வி கற்று மேன்மை அடையக் கூடாது என்ற இழிந்த எண்ணத்தால் ஆரியர்கள் செய்சூழ்ச்சிகளே கடவுள், மத, சாத்திரக் குப்பைகள். சூத்திரர்களுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்பதே அவர்களின் தர்மம்.
அதர்மத்தை எதிர்த்து 95ஆண்டுகால வாழ்க்கையைக் கொடையாக நமக்களித்த தத்துவப் பேராசான் தந்தை பெரியாரின் உழைப்பால் நாம் உயர்ந்தோம்.
இன உணர்வு கொண்ட தமிழர்களே!
தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தால் நாம் சுயமரியாதை உணர்வு பெற்றோம்; தந்தை பெரியார் ஊட்டி வளர்த்த பகுத்தறிவு உணர்வு பெற்றோம்; அடிமைப்பட்டுக் கிடந்த நாம் திராவிட இயக்கத்தின் சமூக நீதித் தத்துவத்தால் கல்வி உரிமை பெற்றோம்; கல்வி உரிமை பெற்றதனால் வேலை வாய்ப்பு உரிமையும் பெற்றோம். சமூகத்தில் சரிபகுதியான பெண்களைச் சமமாக நடத்தும் பண்பைப் பெற்றோம்.
திராவிட இயக்கத்தின் சமூக நீதிச் சாதனை!
இட ஒதுக்கீட்டுக்காக முதன் முதலில் அரசியல் சட்டத்தைத் திருத்த வைத்தார் தந்தை பெரியார். தந்தை வழியில் தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களும் 76ஆவது சட்டத் திருத்தத் தைச் செய்ய வைத்தார். அதனால்தான் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ் நாட்டில் உள்ள 69 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்குச் சட்டப் பாதுகாப்பு உள்ளது. இந்த சமூக நீதியைப் பெற்றுத் தந்தது திராவிட இயக்கத்தின் சாதனையல்லவா?
போர் மறவர்களாகத் திரள்வோம்!
தந்தை பெரியாரின் தத்துவ வாரிசாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களும் பெரியாரின் தத்துவங்களை நடைமுறைப்படுத்தும் முதலமைச்சராக சமூக நீதிக்கான சரித்திர நாயகர் முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களும் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். பல்வேறு சவால்களைச் சந்திக்க வேண்டிய இந்த காலகட்டத்தில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொண்டு வரலாறு படைப்போம்! தந்தை பெரியார் காண விரும்பிய சமுதாயத்தை உருவாக்கப் போராடும் படைத் தலைவர்கள் பின்னே போர் மறவர்களாகத் திரள்வோம்!
சமதர்மத்தை நிலைநாட்டுவோம்!
இன எதிரிகளான பார்ப்பன, ஆர்எஸ்எஸ், பாரதிய ஜனதா என்ற பாசிசக் கட்சி இவற்றின் மனிதநேயத்திற்கு எதிரான கருத்துகளை, செயல்களை மக்களிடம் அம்பலப்படுத்துவோம். அறிவாயுதம் ஏந்தி பெரியாரின் சமதர்மத்தை நிலைநாட்டுவோம்.
புத்துணர்ச்சி பெற்று வரலாறு படைப்போம் வாரீர்!
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் கலந்துகொள்ள 92வயதில் களப்போராளியாக ஒவ்வொரு நாளும் உழைக்கும் நம் தலைவர் ஆசிரியர் வீரமணி அழைக்கிறார்! கலைநிகழ்ச்சிகள், இன உணர்வு கொண்ட தோழர்களின் உரைவீச்சு, தீர்மானங்கள், கருத்தரங்கம், திராவிட இன எழுச்சிப் பேரணி, மாநாட்டு நிறைவு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களின் வழிகாட்டல் உரை இவற்றையெல்லாம் காண, கேட்க குடும்பம் குடும்பமாக மறைமலைநகருக்கு
வாரீர்! பெரியார் தத்துவ மூலிகைக் காற்றைச் சுவாசித்து புத்துணர்ச்சி பெற வாரீர்! வரலாறு படைப்போம் வாரீர்!