சினிமா நடிகர் விஜய்யைக் காண வந்த ரசிகர்கள் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த கோரச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க நடிகை ஹேமமாலினி உள்ளிட்ட குழுவை பாஜக தலைமை நியமித்தது. இந்த நடவடிக்கையை, உத்தரப்பிரதேசத்தில் (உ.பி.), கும்பமேளா நிகழ்வில் நடந்த மரணங்கள் குறித்து விசாரணைக் குழு அமைக்காத பாஜகவின் நிலைப்பாட்டுடன் ஒப்பிட்டு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது பாஜக ஆளாத மாநிலங்களில் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசின் கட்டுப்பாட்டில் நடைபெற்ற கும்பமேளா நிகழ்வில், கடந்த ஜனவரி 29ஆம் தேதி கூட்ட நெரிசலில் சிக்கி 37 பேர் மட்டுமே உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், பிபிசி ஊடகம் நடத்திய ஆய்வில், உண்மையான பலி எண்ணிக்கை குறைந்தது 82 ஆக இருக்கும் என்று கண்டறியப்பட்டது.
இந்தப் பலி எண்ணிக்கை குறித்த முரண்பாடுகள் இருந்தபோதிலும், இந்த மரணங்கள் குறித்து விசாரிக்க பாஜக சார்பில் எந்த விசாரணைக் குழுவும் அமைக்கப்படவில்லை. மாறாக, உ.பி. முதலமைச்சர் ஆதித்யநாத் மார்ச் மாதம் பேசுகையில், “8 கோடி பக்தர்கள் கும்பமேளாவில் பங்கேற்று இருந்ததால், அவர்களிடம் பதற்றத்தை தவிர்க்க நெரிசல் தொடர்பான செய்திகளையும், தரவுகளையும் பெரிதாக்காமல் பார்த்துக் கொண்டேன்” என்று தெரிவித்தார். அதாவது திட்டமிட்டு உண்மையை மூடி மறைக்கிறார். இந்தச் சூழலில், தமிழ்நாட்டில் நடந்த 41 பேரின் மரணங்களை மய்யமாக வைத்து பாஜக தலைமை உள்நோக்கத்தோடு அரசியல் செய்வது வெளிப்படையாகத் தெரிகிறது.
உ.பி. கும்பமேளாவில் அப்பாவி மக்கள் மரணித்த கோரச் சம்பவம் குறித்து எந்த விசாரணைக் குழுவும் அமைக்காத பாஜக, அரசியலில் முதிர்ச்சியற்ற ஒரு நடிகரின் ரசிகர்களால் தமிழ்நாட்டில் நடந்த மரணம் குறித்து மட்டும் விசாரணைக் குழு அமைத்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது பாஜக ஆளாத மாநில அரசுகளை ‘பிளாக்மெயில்’ செய்யும் உத்தியா என்று அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இதே ேஹமமாலினி கும்பமேளாவில் நூற்றுக்கணக்கானனோர் இறந்தபோது என்ன சொன்னார்? ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் இது போன்ற மரணங்கள் நடப்பது தவிர்க்க முடியாதது என்று சொன்னவர் தானே!
இதேபோன்றதொரு அரசியல் நகர்வு – கடந்த 2022 ஆம் ஆண்டு தஞ்சை – மைக்கேல்பட்டி லாவண்யா தற்கொலை வழக்கில் அரங்கேறியதாக சுட்டிக்காட்டப்படுகிறது. கட்டாய மதமாற்றம் செய்ததாக கத்தோலிக்க கிறித்தவப் பள்ளி மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளைத் தமிழ்நாடு பாஜக முன்வைத்தது. இதை விசாரிக்க அன்றைக்கு பாஜகவில் இருந்த நடிகை விஜயசாந்தி உள்ளிட்டோர் அடங்கிய குழுவை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அனுப்பினார்.
விசாரணைக் குழு ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோது, “கட்டாய மதமாற்றத்தால் தான் லாவண்யா மரணித்தார்” என பாஜக தலைமை எழுதிக்கொடுத்த கதை வசனத்தையே ஒப்புவித்தனர்.
மதுரை உயர்நீதிமன்றம், கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை என்றும், “இதை வைத்து மலிவான அரசியல் செய்வது அற்பத்தனமானது.” என்றும் தீர்ப்பளித்தது. இத்தனைக்குப் பிறகும் தமிழ்நாடு பாஜக தாங்கள் செய்த அரசியல் குறித்து வருத்தம் தெரிவிக்கவில்லை. பாஜக ஆளாத மாநிலங்களில் தேவையில்லாத பதற்றத்தை உருவாக்குவதே இதுபோன்ற விசாரணைக் குழுக்கள் அமைப்பதன் உண்மையான நோக்கம் என்றும், இதைத் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை என்றும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
மாநில அரசே ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியை நியமித்து விசாரணையைத் தொடங்கிய நிலையில், பொறுப்பு வாய்ந்ததாக நடந்து கொள்ள வேண்டிய ஓர் ஒன்றிய அரசு, அரசியல் கண்ணோட்டத்தோடு பா.ஜ.க. சார்பில் விசாரணை நடத்துவது, அதன் சிறுபிள்ளைத்தனத்தைத்தான் வெளிப்படுத்தும்.
இந்த நீதிபதி அருணா ஜெகதீசன் தான் அதிமுக ஆட்சியில் தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு நிகழ்வுக்காகவும் விசாரணை நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் என்பதிலிருந்து, இவர் மீது எந்த அரசியல் சாயமும் பூசிட முடியாது!
கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான் என்ற பழமொழி நினைவிருக்கட்டும்!