வரவேற்க காத்திருக்கிறார்‌ ஆசிரியர்! வாருங்கள் தோழர்களே!

இன்றைக்கு நாம் வாழும் இந்தத் தமிழ்நாடு, திராவிடர் கழகத் தீர்மானங்களால் உருவாக்கப்பட்டது. 1929 – பிப்ரவரி மாதத்தில் செங்கல்பட்டில் முதல் மாகாண மாநாட்டை பெரியார் நடத்தினார். அதன் தீர்மானங்கள் தான் தமிழர்களின் இன்றைய வாழ்வியல்!

நூற்றாண்டு கண்ட களங்கள்!

அதன் தொடர்ச்சியாகச் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டை ஏற்பாடு செய்ய வேண்டும் என, என்றைக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் அறிவித்தாரோ, அன்றைக்கே சுறுசுறுப்பாகி விட்டனர் – தோழர்கள். இன்றைக்கு 65 நாள்களுக்கு முன்னரே, அதாவது 28.07.2025 அன்று முதல் ஆலோசனைக் கூட்டம், மறைமலை நகரில், கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், தாம்பரம், சோழிங்கநல்லூர் ஆகிய மாவட்டங்களிலும் திட்டங்கள் பட்டை தீட்டப்பட்டன. இதில் 5 மாவட்டக் கூட்டங்களிலும் வீ.அன்புராஜ் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் கழக செயல் வீரர்கள் கூட்டம் மறைமலைநகரில் கூடி செயல்பாடுகள் நடத்தப்பட்டன.

தமிழ்நாடே ஆவலுடன் எதிர்பார்க்கும் அந்த மாநாட்டுத் திடலைப் பார்த்து வரலாம் என்றால், அங்கே யாருமில்லை! எப்படி இருப்பார்கள்? ஒவ்வொருவரும் ஒரு களத்தில் நிற்கிறார்கள். கடந்த நூறு ஆண்டுகளில் தோழர்கள் களம் கண்டு, களம் கண்டே பலம் பெற்றதுதான் இந்தத் திராவிடர் இயக்கம்!

ஹிந்தி எதிர்ப்புப் போரில் பெரியாருடன் துணை நின்ற மறைமலை அடிகள் அவர்களின் பெயரால் உருவான மறைமலை நகரில் காத்திருந்த போது, கருஞ்சட்டைத் தோழர்கள் வாகனத்தில் வந்து இறங்கினர். காஞ்சிபுரம் சென்று வந்ததாகக் கூறினர். “ஓ… அறிஞர் அண்ணாவிற்கு அழைப்புக் கொடுக்கப் போனீர்களோ?”, என மகிழ்ச்சிக்காக கேட்டுவிட்டு, மாநாடு குறித்துக் கேட்டோம்.

65 அடி உயரத்தில் அய்யா கொடி!

வரவேற்புக் குழுத் தலைவர் ப.முத்தையன், மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், மாவட்டத் தலைவர் அ.செம்பியன், செயலாளர் ம.நரசிம்மன், பொதுக்குழு உறுப்பினர் அ.பா.கருணாகரன் ஆகியோர் கூறும்போது, “மாநாட்டுப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுவதாகக் கூறினார்கள்.‌ தமிழர் தலைவர், ஆசிரியர் ஏற்றுவதற்காக 65 அடி உயர கொடிக் கம்பம் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

80 அடி நீளத்தில், 30 அடி அகலத்தில் மேடை அமைக்கப்பட்ட விவரங்களையும் கூறினர். தோழர்கள் அமர 140 க்கு 400 என்கிற அளவில் மிகப் பிரம்மாண்ட பந்தலும் தயாராகி வருகிறது. மட்டுமின்றி மேடைக்கு சற்றுத் தொலைவில் 30 க்கு 100 என்கிற அளவில் சுயமரியாதை இயக்க வரலாற்றைப் பறைசாற்றும் கண்காட்சிக் கூடமும் உருவாகி வருகிறது.

திராவிடர் கழகம்

களை கட்டும் கழக நிகழ்ச்சிகள்!

காலையில் நடைபெறும் ஆழ்வார் பேலஸ் மண்டபத்தில் 2500 இருக்கைகளும், மாலை மாநாட்டுத் திடலில் 4000 இருக்கைகளும் தயார் நிலையில் இருக்கின்றன. இந்த இரண்டு இடங்களுமே மறைமலை நகரில் அருகருகே இருப்பதையும் சுட்டிக்காட்டினர். மாலை 4 மணிக்கு நடைபெறும் திராவிடர் இன எழுச்சிப் பேரணி குறித்தும் நினைவு கூர்ந்தனர். மறைமலை நகரில் உள்ள அண்ணா சாலை, புரட்சிக்கவிஞர் சாலை இணையும் இடத்தில் தொடங்கி, (எவ்வளவு பொருத்தம் பாருங்கள்) திருவள்ளுவர் சாலை, எம்.ஜி.ஆர். சாலை வழியாகப் பேரணி மாநாட்டுத் திடலை அடைகிறது.

மொத்தம் ஒன்றரை கிலோ மீட்டர் தூரமுள்ள இந்தப் பேரணியை, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இடையில் பார்வையிடுகிறார். அதற்கான மேடை அமைப்பும் தொடங்க இருக்கின்றது. தாம்பரம் தொடங்கி, செங்கல்பட்டு வரை கழகக் கொடி 1000 கம்பங்களில் அணிவகுக்கக் காத்திருக்கின்றன. தவிர மாநாட்டுத் திடலில் 350 கொடிகளும், பேரணியின் போது 150 கொடிகளுமாக 1500 கொடிகள் செங்கல்பட்டு மாநாட்டை செழிக்க வைக்க இருக்கின்றன.

மகளிரணி மகத்துவம்!

அதேபோல விளம்பரங்களும் களைகட்டி வருகிறது. ஆசிரியர் அறிவித்துவிட்டால், அடுத்த நாளே விளம்பரம் எழுதும் தோழர்களும், சில மாவட்டங்களும் நம் இயக்கத்தில் பிரபலம். அந்த வகையில் தமிழ்நாடு முழுக்க செங்கல்பட்டு மாநாட்டைக் கொண்டு சேர்த்துவிட்டனர். இந்தச் சுற்று வட்டாரங்களில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், தாம்பரம், சோழிங்கநல்லூர் ஆகிய 6 மாவட்டங்களில் மிகச் சிறப்பான விளம்பரம் செய்துள்ளோம்.

தலைமை நிலைய வாட்சப் குழுவிலும், தகவல் தொழில்நுட்பக் குழு மூலமும் கடந்த இரண்டு மாதங்களாகத் தொடர் பரப்புரையைச் சமூக ஊடகங்களில் செய்து வருகின்றனர். மேலும் மகளிரணி சார்பில் கடைவீதி வசூல் மிகப் பெரிய விளம்பரமானது. மதுராந்தகம், செங்கல்பட்டு, மறைமலைநகர், சிங்கப் பெருமாள் கோயில் ஆகிய இடங்களில் காலை முதல் இரவு நான்கு நாட்கள் பயணித்து 62,500 ரூபாய் சேகரித்தனர். அதேபோல தாம்பரம், பல்லாவரம், படப்பை, கூடுவாஞ்சேரி, மண்ணிவாக்கம் ஆகிய பகுதிகளுக்கும் சென்று 40 ஆயிரம் வரை நன்கொடை பெற்றுள்ளனர். ஆக ஒரு வாரத்தில் ஒரு இலட்சம் பெற்ற மகளிரணி மிகுந்த பாராட்டுக்குரியது!

சிறப்பான முன்னேற்பாடுகள்!

வெளியூர் தோழர்கள் குளிப்பதற்கு மண்டபங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தனி அறைகள் வேண்டுவோருக்கு, அதன் விவரங்கள். விடுதலையில் சிறப்புச் செய்தியாக வெளிவந்துள்ளது. மாநாட்டின்  ஒவ்வொரு இருக்கையிலும் ஒரு குடிநீர் பாட்டில், பிஸ்கட் பாக்கெட் உள்ளிட்ட கூடுதல் அம்சங்களும், மதிய உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும்  வாகனங்கள் நிறுத்துமிடம் மற்றும் மாநாட்டுத் திடலில் கழிப்பறை வசதியும் அமைக்கப்படுகிறது.

நமது இந்த மாநாட்டுப் பணிகளில் திருவள்ளுவர் மண்டலச் செயலாளர் மா.சமத்துவமணி, நகரத் தலைவர் திருக்குறள் ம.வெங்கடேசன், செயலாளர் செ.முடியரசன், மாநாட்டு அலுவலகப் பொறுப்பாளர்கள் மு.பிச்சைமுத்து, ஆ.வெங்கடேசன், மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சே.சகாயராஜ், செயலாளர் குழல் லோ.குமரன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மு.அருண்குமார், ப.முருகன் உள்ளிட்ட தோழர்கள் தோள் கொடுத்து வருவதாக, மாநாட்டின் முன்னணி களப்பணியாளர்கள் கூறினர்.

திராவிடர் கழகம்

மாநாட்டை நோக்கிய பேருந்து வரிசைகள்!

சென்ற வாரம் தொழிலாளர் கழக மாநிலச் செயலாளர் மு.சேகர், மாநாட்டுத் திடலில் இருந்ததை அறிந்து, அவரைத் தொடர்பு கொண்டோம். மாநாட்டுப் பணிகள் எவ்வாறு இருக்கின்றன? உங்கள் பங்களிப்பு என்னவாக இருக்கிறது என்று கேட்டோம். “தமிழர் தலைவர், ஆசிரியர் அறிவுறுத்தலின் பேரில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்தும் தோழர்கள் வர, பேருந்துகளை ஆங்காங்கே ஏற்பாடு செய்துள்ளனர்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டம், தென்காசி விருதுநகர் இராஜபாளையம் மாவட்டம், மதுரை மாநகர், புறநகர் மாவட்டம், சிவகங்கை, இராமநாதபுரம், காரைக்குடி மாவட்டம், அறந்தாங்கி, புதுக்கோட்டை மாவட்டம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி மாவட்டம், ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டம், மேட்டுப்பாளையம், ஆத்தூர் மாவட்டம், இலால்குடி, துறையூர் மாவட்டம், திண்டுக்கல், பழனி மாவட்டம், தேனி, கம்பம் மாவட்டம், தாராபுரம், திருப்பூர் மாவட்டம், மேட்டுப்பாளையம், ஊட்டி மாவட்டங்களில் பேருந்துகள் மூலமாக வருவதாகத் தகவல்கள் வந்து கொண்டுள்ளன.

திருச்சி, பட்டுக்கோட்டை, திருப்பத்தூர், கோபிசெட்டிபாளையம், கிருஷ்ணகிரி, தருமபுரி, அரூர், அரியலூர், தஞ்சாவூர், உரத்தநாடு, கும்பகோணம், விருத்தாசலம், கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய மாவட்ட தோழர்களும் பேருந்தில் வருகின்றனராம். தவிர கோயம்புத்தூர் 2, நாகப்பட்டினம் 4, திருவாரூர் 4 என மொத்தம் 37 பேருந்துகள் மறைமலைநகர் நோக்கி வர இருக்கின்றன.

தோழர்களை இயக்கும்
ஆசிரியரின் உத்வேகம்!

தனது கணீர் குரலால் மாநாட்டு விளம்பரத்தைக் காணொலியாகப் பரவவிட்ட, கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் கூறும்போது, தமிழ்நாடு முழுவதும் தோழர்கள் ஆர்வமுடன் உள்ளனர். ஒருவேளை மழை போன்ற இயற்கைத் தடைகள் வந்தாலும், அதற்கும் சேர்த்தே ஏற்பாடுகள் நடக்கின்றன. ஆசிரியரின் சிந்தனை முழுக்க மாநாட்டில் தான் இருக்கிறது.

சுயமரியாதை இயக்க நூற்றாண்டின் தொடக்க விழா ஈரோட்டில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆசிரியர் அறிவிப்பிற்கு இணங்க தமிழ்நாடு முழுவதும் 100 கூட்டங்கள் நடைபெற்றன. சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவை மிகச் சிறப்பாக செய்ய வேண்டும் என்பது ஆசிரியரின் பெரு விருப்பம். அதிலும் குறிப்பாக உலகத் தலைவர் பெரியார் நடத்திய செங்கல்பட்டில் நடத்த முடிவு செய்தது வரலாற்றுச் சிறப்பிற்கு உரியதாகும்.

பல மாவட்டத் தோழர்களும், இந்த மாநாட்டை நடத்த வாய்ப்புக் கேட்டார்கள். அந்தளவிற்கு மாநாடு குறித்த ஆர்வத்தில் தோழர்கள் இருக்கிறார்கள். ஆசிரியரின் உத்வேகம்தான், அனைவரையும் இயக்குகிறது என்றால் அது மிகையில்லை”, என ச.பிரின்சு என்னாரெசு பெரியார் கூறினார்.

மாநாட்டின் சுறுசுறுப்பு!

மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் கூறும்போது, கடலூர், பாண்டிச்சேரி தோழர்கள் பேருந்து மூலம் வருகிறார்கள். தவிர தொடர்வண்டி, வேன், கார் எனப் பல வழிகளிலும் தோழர்கள் மாநாட்டிற்கு வருகிறார்கள். இதுதவிர சென்னையைச் சுற்றியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஆவடி, திருவள்ளூர், சோழிங்கநல்லூர், தாம்பரம், தென் சென்னை, வட சென்னை, திருவொற்றியூர், கும்மிடிப்பூண்டி மாவட்டங்களில் இருந்தும் வருகை தருவார்கள்.

கழகத் தோழர்கள் மட்டுமே பல்லாயிரம் பேர்கள் வரக்கூடும். இதுதவிர திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் தோழமைக் கட்சித் தோழர்களும் வருவார்கள். பேரணியில் பெரியார் சமூகக் காப்பணி, மகளிரணி, இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், தொழிலாளரணி, திராவிடர் கழகம் என்கிற வரிசையில் வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டு களப்பணியில் பொதுச் செயலாளர் மற்றும் தோழர்கள்

கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் நேரில் சென்று மாநாட்டுப் பணிகளை ஒருங்கிணைத்து தோழர்களுடன் களப்பணி ஆற்றி வருகிறார். மாநாட்டு முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். மாநாட்டிற்கு வரக்கூடிய தோழர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகளை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்யும்மாறு அறிவுறுத்தி வழி காட்டுதல் வழங்கி வருகிறார்.

 

மும்பையில் இருந்தும்…

தமிழ்நாட்டில் நடக்கும் பெரிய நிகழ்ச்சிகளுக்குக் கூட மும்பையில் இருந்தும் கருநாடக மாநிலத்தில் இருந்தும் திறள்கிறார்கள் தோழர்கள். அதிலும் மாநாடு என்றால் அவசியம் பங்கேற்போம் என்றார்கள்.

பொக்கிசமாய் கிடைத்த
பொம்மலாட்ட நிகழ்ச்சி!

மிக முக்கியமாக மு.கலைவாணன் குழுவினரின் பொம்மலாட்ட நிகழ்ச்சி, மாநாட்டை விவரித்து 300 இடங்களில் நடைபெற்றுள்ளது. நாளொன்றுக்கு 5 இடங்கள் வீதம், 60 நாள்கள் தொடர்ச்சியாக நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சிகள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், தாம்பரம், சோழிங்கநல்லூர் ஆகிய மாவட்டங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மாநாடு என்ற பேச்சுத் தொடங்கிய நாள் முதல் தன் இருப்பிடத்தை மறைமலைநகருக்கு மாற்றிக் கொண்டார் மாநில ஒருங்கிணைப்பாளர் வீ.பன்னீர்செல்வம்.

ஆசிரியர் காத்திருக்கிறார்!

இதுதவிர விடுதலை நாளிதழில் ஆசிரியர் அவர்களின் அறிக்கைகள், வேண்டுகோள் கடிதங்கள், துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களின் கட்டுரைகள் என சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா, ஒரு வகையில் தொடக்க விழா போல உற்சாகம் கொள்கிறது. ஆம்! ஒரு நூற்றாண்டை முடித்து, இரண்டாவது நூற்றாண்டை நோக்கிய பயணமாகவும் இது அமையவிருக்கிறது!

ஆசிரியர் காத்திருக்கிறார்! அலையலையாய் வந்து சேருங்கள்! நம் தமிழ்நாடு, நம்மிடமே இருக்க, பெரியாரை இன்னும் உயர்த்திப் பிடிப்போம்! வாருங்கள்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *