காணொலி ஆதாரத்தை வெளியிட்டு தமிழ்நாடு அரசு விளக்கம்
சென்னை, அக். 1– கரூரில் கடந்த துயர சம்பவம் குறித்து உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்து காணொலி ஆதாரத்தை வெளியிட்டு தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
கரூர் சம்பவம்
கரூர் சம்பவம் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அரசின் ஊடக செயலாளரும், வருவாய்த் துறை மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளருமான பி.அமுதா, உள்துறை செயலாளர் தீரஜ்குமார், சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார், ஏடிஜிபி பொறுப்பு வெங்கட்ராமன், கூடுதல் போலீஸ் டி.ஏஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் நேற்று (30.9.2025) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.
கரூர் நிகழ்ச்சியில் ஏற்பட்ட சம்பவங்கள் தொடர்பாக காணொலி காட்சி வெளியிட்டனர்.
அவர்களிடம் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர்கள் அளித்த பதில்களும் வருமாறு:
கேள்வி: கூட்டத்துக்கு எத்தனை பேர் வருவார்கள் என்பது குறித்து தமிழ்நாடு உளவுத் துறையால் முன்கூட்டியே கணிக்க முடியவில்லையா?
பதில்: கரூரில் விஜய் கலந்து கொள்ளும் கூட்டத்திற்கு 10 ஆயிரம் பேர் வருவார்கள் என்று அந்தக் கட்சி சார்பாக சொல்லப்பட்டு இருந்தது. மாலை 6 மணிக்கு 20 ஆயிரம் பேர் இருந்தனர்.
பொதுவாக ஒரு கூட்டத்திற்கு 50 பேருக்கு ஒரு போலீசார் பணியமர்த்தப்படுவர்கள். ஆனால் பல மாவட்டங்களில் விஜய்க்கு திரண்டு இருந்த கூட்டத்தின் அடிப்படையில் இந்த கூட்டத்திற்கு 20 பேருக்கு 1 காவலர் என்ற விகிதத்தில் நியமிக்கப்பட்டனர்.
கட்சித் தலைவர் விஜய் வந்தபோது அவருடைய வாகனத்துடன் சேர்ந்து ஏராளமானோர் கூட்டம் நடந்த இடத்தில் திரண்டு விட்டனர்.
கேள்வி: பரப்புரை போது ஏன் மின்சாரம் நிறுத்தப்பட்டது.
பதில்: எந்த இடத்திலும் மின்சாரம் நிறுத்தப்படவில்லை என்பதனை மின்சார வாரியம் சார்பாக தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. தெரு விளக்குகள் எதுவும் அணையவில்லை.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் பேசிக் கொண்டிருந்தபோது மின்சார தடை ஏற்பட்டது என்பதை திட்டவட்டமாக மறுக்கிறோம்.
கேள்வி: காவல் துறையினர் தடியடி நடத்தியதால் தான் இது நடந்ததா?
பதில்: விஜய் 6 மணிக்குத்தான் பிரச்சாரம் நடக்கும் இடத்திற்கு முன்னேறி வருகிறார். ஏற்கெனவே அங்கு இருந்த கூட்டமும் விஜய்யோடு வந்த கூட்டமும் சேர்ந்ததால் முன்னேறி செல்ல முடியவில்லை. எனவே போலீசார் கூட்டத்தை விலக்கிவிட்டு விஜய் வாகனத்தை முன்னேறி அனுப்பி வைத்தனர்.
ஆனால் முன்னதாகவே 50 மீட்டர் தூரத்திற்கு முன்பே நின்று பேச வேண்டும் என்றும், முன்னேறி செல்ல வேண்டாம் என்றும் போலீசார் கேட்டுக் கொண்டனர். ஆனால் விழா ஏற்பாட்டாளர்கள் அதனை கேட்கவில்லை.
கேள்வி: பரப்புரை துவங்குவதற்கு முன்பே நெரிசல் தொடங்கி விட்டதா?
பதில்: 3 மணியில் இருந்தே கூட்டம் அதிகமாகக் கூட தொடங்கிவிட்டது. அவர்கள் நின்று கொண்டு இருந்ததால் சோர்வாகி விட்டனர். குடிப்பதற்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. அதனால் நிறைய பேர் களைப்பு ஏற்பட்டு கீழே உட்கார ஆரம்பித்திருக்கின்றனர். அதுபோக விஜய் வந்த வண்டி பெரியது. எனவே அது முன்னேறி வரவர இருபுறமும் உள்ள மக்கள் இடம் பெயர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் வாகனம் அருகில் நிற்க வேண்டும் என்று முன்னேறியதால் நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.
கேள்வி: கூட்டத்தில் எதற்காக ஆம்புலன்சுகள் அடிக்கடி வந்தன?
பதில்: கூட்டம் நடந்த இடத்தில் 7 ஆம்புலன்ஸ்சுகள் நிறுத்தப்பட்டு இருந்தன. 7.14 மணி முதல் அழைப்புக்கு 7.20 மணிக்கு ஆம்புலன்ஸ் சென்றிருக்கிறது. 2ஆவது அழைப்பு 7.15 நிமிடத்திற்கு வந்தது. அங்கு 7.23 நிமிடத்திற்கு ஆம்புலன்ஸ் சென்றிருக்கிறது. 108 ஆம்பலன்ஸ்சுகளில் 6 ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்பட்டன. எந்த கூட்டத்திற்கும் அமைப்பாளர்களுக்கு என்று ஒரு சில நிபந்தனைகள் இருக்கிறது. பெரிய கூட்டத்திற்கு 10 ஆயிரம் பேருக்கு மேல் வருகிறார்கள் என்று அமைப்பாளர்களே ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்திருந்தார்கள். 2 ஆம்புலன்ஸ்கள் கட்சித் தலைவர் வண்டிக்கு பின்னாலேயே வந்து கொண்டிருந்தன. அதுமட்டுமல்லாமல் கட்சிக்காரர்களே 5 ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்திருந்தார்கள். மொத்தம் 7 ஆம்புலன்ஸ்களை கட்சிக்காரர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். 6 – 108 ஆம்புலன்ஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்த சம்பவம் தெரிந்த பிறகு தான் கூடுதலாக ஆம்புலன்ஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. காவலர்கள் ஃபோன் வேலை செய்யவில்லை என்றவுடன் வயர்லெஸ் மூலமாக தகவல் தெரியப்படுத்தியிருக்கிறார்கள். அதன் பிறகு அரசாங்க வழியாக 108 ஆம்புலன்ஸ் வந்திருக்கிறது. மேலும், கட்சிக்காரர்கள் ஆம்புலன்ஸ் அருகில் இருந்தபடியால் முதலில் வந்திருக்கிறது. 9.45 மணிக்கு தனியார் ஆம்புலன்ஸ் வைத்து உடனடியாக மக்களை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.