கரூர் நகர காவல் நிலைய எஃப்.அய்.ஆர்.
செப்டம்பர் 27, 2025 (சனிக்கிழமை) கரூரில் நடை பெற்ற தமிழக வெற்றிக் கழகத் (த.வெ.க.) தலைவர் விஜய்யின் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கரூர் நகர காவல் நிலையம் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில், கட்சியின் அமைப்பாளர்கள், நடிகரும்-அரசியல்வாதியுமான விஜய்யின் கரூருக்கான வருகையை திட்டமிட்டு தாமதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பல மணி நேரம் தண்ணீர் மற்றும் மருத்துவ உதவி இன்றி காத்திருந்த மக்கள் வெப்பம் மற்றும் கூட்ட நெரிசலால் சோர்வடைந்து, அதன் விளைவாக ஏற்பட்ட நெரிசல் பலர் உயிரிழப்பிற்கு காரணமானது என எஃப்அய்ஆர் கூறுகிறது.
இந்த எஃப்அய்ஆர், கரூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் ஜி. மணிவண்ணன் அவர்களால் சுயமாகவே சனிக்கிழமை இரவு பதிவு செய்யப்பட்டது. பாரதீய நியாயச் சட்டம் மற்றும் தமிழ்நாடு அரசுச் சொத்துக்கள் (சேதம் மற்றும் இழப்பு தடுப்பு) சட்டத்தின் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் த.வெ.க. மாநில பொதுச் செயலாளர் ‘புஸ்ஸி’ ஆனந்த், மாநில இணைச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், மற்றும் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
எஃப்அய்ஆரின் படி, விஜயின் வேலுச்சாமிபுரம் தேர்தல் பிரசாரத்திற்காக கரூர் மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் சுமார் 500 காவல்துறையினர், ஹோம் கார்டுகள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குமுறைக்கு நியமிக்கப்பட்டனர். விஜய் மதியம் 12 மணிக்கு வருவார் என்ற செய்தி பரவியதால், காலை 10 மணி முதலே மக்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் பெருமளவில் திரளத்தொடங்கினர்.
விஜயின் கூட்டத்திற்கு காவல்துறையினர் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதி அளித்திருந்த போதிலும், கட்சித் தலைவர்கள் திட்டமிட்டு அவரின் வருகையை நான்கு மணி நேரம் தாமதப்படுத்தினர். இதன் மூலம் தங்களின் அரசியல் வலிமையை வெளிப்படுத்தும் நோக்கம் இருந்ததாக எஃப்அய்ஆர் கூறுகிறது. இதனால் பல மணி நேரம் காத்திருந்த மக்கள் சோர்வடைந்தனர்.
வேலுச்சாமிபுரம் மெயின் ரோடு, கோவை ரோடு, முனியப்பன் கோயில் சந்திப்பு, திருக்கம்புலியூர் ரவுண்டானா, மதுரை-சேலம் பைபாஸ் சாலை ஆகிய இடங்களில் காலை 10 மணி முதலே மக்கள் மற்றும் ஆதரவாளர்கள் திரளத்தொடங்கினர். மதியழகன் மனுவில் 10,000 பேர் வருவார்கள் எனக் குறிப்பிடப் பட்டிருந்தபோதிலும், கூட்டத்தில் 25,000-க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர்.
எஃப்அய்ஆர் படி, விஜய் மாலை 4.45 மணியளவில் வேலாயுதம்பாளையம் மற்றும் தவிட்டுப்பாளையம் எல்லையின் வழியாக கரூரில் நுழைந்தார். அவர் திட்டமிட்டு தாமதப்படுத்தி, அனுமதி இன்றி சாலை ஊர்வலத்தில் ஈடுபட்டு, பொதுமக்கள் மற்றும் வாகனப் போக்குவரத்துக்கு தடங்கல் ஏற்படுத்தினார் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்கு முனியப்பன் கோயில் சந்திப்பை அடைந்து, பிறகு வாகனத்தை தவறான பாதையில் செலுத்தி, மாலை 7 மணிக்கு வேலுச்சாமிபுரம் சந்திப்பில் பெரும் கூட்டத்தில் நிறுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.
எஃப்அய்ஆர் மேலும் கூறுவதாவது, ஆய்வாளர் மற்றும் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆகியோர் ‘புஸ்ஸி’ ஆனந்த், நிர்மல் குமார் மற்றும் மதியழகனுக்கு பலமுறை எச்சரிக்கை வழங்கினர். இவ்வளவு பெரும் கூட்டம் காவல்துறையினரால் கட்டுப்படுத்த இயலாத அளவுக்கு இருந்ததால், எதிர்பார்ப்புகள் காரணமாக சிக்கல்கள், மூச்சுத்திணறல், காயம், உயிரிழப்பு போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளதாக அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் அவர்கள் கேட்க மறுத்தனர். மதியழகனும், பிற நிர்வாகிகளும் கூட்டத்தை முறையாக கட்டுப் படுத்தவில்லை. இதனால் மக்கள் கடைகள் மீது அமைக்கப்பட்ட சாய்வு இரும்புத்தகடுகள் மற்றும் அருகிலுள்ள மரங்களில் ஏறினர். இதனால் இரும்புத் தகடுகள் மற்றும் கிளைகள் முறிந்து விழுந்து, கீழே நின்றிருந்தவர்களின் மீது விழுந்தன. இதனால் மூச்சுத் திணறல் மற்றும் விசித்திரமான நிலைமை ஏற்பட்டதாக எஃப்அய்ஆர் கூறுகிறது.
‘தி இந்து’ ஆங்கில ஏட்டில் வெளிவந்த செய்திகளின் தமிழாக்கம்: