இன்னும் திருந்தவில்லை!

கரூரில் 41 உயிர்கள் பலியானதற்குக் காரணமாக இருந்த நடிகர் ஒருவர் மூன்று நாட்களுக்குப் பின் வாய்த் திறந்திருக்கிறார். அதற்கு வாய்த் திறக்காமலேயே இருந்திருக்கலாம்.

41 உயிர்கள் பலியானதற்குக் காரணமாக இருந்த தலைவர்கூடத் தான் மன்னிப்புக் கேட்பது பிறகு இருக்கட்டும்; உடனடியாக அனுதாபம் கூடத் தெரிவிக்கவில்லை; இத்தனை மனித உயிர்கள் – குழந்தைகள், பெண்கள் பலியானதற்குக் காரணமாக இருந்தவர் அங்கிருந்து  (கரூரிலிருந்து) சென்னையில் பண்ணை வீட்டுக்குப் பறப்பதில் தான் அவசரம் காட்டினார்; திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் அவரைத் துரத்திக் கொண்டு ஓடிய நிலையிலும், அதனைப் பொருட்படுத்தாமல் வேக வேகமாக விமானத்தில் ஏறுவதில்தான் வேகம் காட்டினார்.

அவரை விடுங்கள்! அவர் நடத்துவதாகக் கூறப்படும் கட்சியின் பொறுப்பாளர்களாவது பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளுக்குச் சென்று குறைந்தபட்சம் அனுதாபம் தெரிவிக்கவில்லை. குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும் என்பார்கள்; அத்தகையவர்கள் எங்கே கைது செய்யப்படுவோமோ என்ற அச்சத்தில் தலைமறைவாகி இருக்கிறார்கள்.

தற்போது இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், வீடியோ ஒன்றை நடிகர் விஜய் வெளியிட்டுள்ளார்.

அதிலாவது தன்னால் ஏற்பட்ட உயிர்ப்பலிகளுக்கு மன்னிப்புக்  கேட்க வேண்டாமா?

ஆனால் என்ன சொல்லியிருக்கிறார்? ‘‘எங்கள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் எங்கள் கட்சியைச் சேர்ந்த சமூக வலைதளங்களைச் சேர்ந்த நண்பர்கள்மேல் எஃப்.அய்.ஆர். போட்டு  புடிச்சிக்கிட்டு இருக்காங்க. சி.எம். சார் என்னைப் பழி வாங்கிக் கொள்ளுங்கள். அவங்கமேல கை வைக்காதீங்க. அப்பொழுதுகூட தன் கட்சிக்காரர்கள்மீது தான் கவலை – சாகடிக்கப்பட்டவர்கள்மீது கவலையில்லை. நான் வீட்டுல இருப்பேன், இல்லைனா ஆபிஸ்ல இருப்பேன். என்னை என்ன வேணுமானாலும் பண்ணுங்க. நண்பர்களே, தோழர்களே, நம்மோட அரசியல் பயணம் இன்னும்  வலிமையாகவும், தைரியமாகவும் தொடரும்’’ என்று தெரிவித்திருக்கிறார்.

குதிரை குழியும் பறித்ததோடு அல்லாமல், குப்புறத் தள்ளிய கதையாகவல்லவா இருக்கிறது!

இவர் நடத்திய நிகழ்ச்சிகள் அனைத்திலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். முதல் மாநாடு நடைபெற்ற விக்கிரவாண்டியில் 440 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தடுத்து நடந்த மதுரை, விழுப்புரம், திருச்சி, அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம் முதலிய ஊர்களிலும் உயிர் இழப்புகளும், உடல் நலப் பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன.

இப்பொழுது அவர் முதலில்  பிரச்சாரம் தொடங்கிய நாமக் கல்லில்கூட 34 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இப்படித் தொடர்ந்து இவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் மக்கள் பாதிக்கப்பட்டதைத் தெரிந்த நிலையில், நியாயமான மனிதாபிமானம் உள்ளவராக இருந்தால், தன்னுடைய பிரச்சாரக் கூட்டத்தில் சில வரைமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் திட்டமிட்டிருக்க வேண்டாமா? கட்சியின் சார்பில் தொண்டர் படைகளை அமைத்துக் கூட்டத்தைக் கட்டுப்படுத்த உரிய ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டாமா?

தன்னுடைய பிரச்சாரக் கூட்டத்தில் இத்தனைப் பேர் சாகிறார்கள், மயக்கம் அடைகிறார்கள், உடல் உறுப்பு முறிவு களுக்கு ஆளானார்கள் என்ற கணக்கு அதிகரிக்க அதிகரிக்கச் செய்வதன் மூலம் தன்னுடைய செல்வாக்கைப் பார்த்தீர்களா என்று காட்டும் மனப்பான்மையோடு இருப்பதாகவே தெரிகிறது. பிறர் துன்பத்தில் மகிழ்ச்சி காணும் (Sadist) மனிதராக இருப்பாரோ என்றுதான் கருத வேண்டும்!

இப்பொழுது கூட என்ன சொல்லுகிறார்?

தன்னைப் பழி வாங்க நினைக்கிறார் முதலமைச்சர் என்று அல்லவா குற்றஞ்சாட்டுகிறார். இதில் பழி வாங்க என்ன இருக்கிறது? முதலமைச்சர் நினைத்திருந்தால், சம்பவம் நடந்த அன்றே நடிகர் விஜய்யைக் கைது செய்திருக்கலாமே!  செய்தியாளர்கள் விஜய்யைக் கைது செய்வீர்களா என்று கேட்டபோதுகூட முதலமைச்சர் நீதிபதி தலைமையில் தனி நபர் விசாரணை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர் அறிக்கை வந்த பின் நடவடிக்கை எடுப்பதுபற்றி முடிவு செய்யப்படும் என்று எவ்வளவு அரசியல் நாகரிகத்தோடு கண்ணியமாகப் பதில் சொல்லியிருக்கிறார்.

எடுத்த எடுப்பிலேயே முதல் அமைச்சராக உயரத் தாண்டத் (High Jump) துடிக்கும் இந்த நடிகர் எங்கே?  மனிதநேயத்துடன் நாகரிகத்துடன் நடந்து கொண்ட நமது முதலமைச்சர் எங்கே?

ஒரு கூட்டத்தைக் கட்டுப்படுத்தி, ஒழுங்கு முறையில் நடத்த வக்கற்ற ஒருவர் ஒரு நாட்டின் முதலமைச்சரானால், நாட்டின் கதி என்னாகும்?

அரசியல் கட்சி நடத்த விரும்பினால், முதலில் தன் கட்சியினரை அரசியல்படுத்த வேண்டாமா? அதற்காக ஒரு துரும்பைக் கிள்ளிப் போட்டதுண்டா?

சினிமா ரசிகர் மன்றங்களைச் சேர்ந்தவர்களை எடுத்த எடுப்பில் அரசியலுக்குள் கொண்டு வந்தால், அதன் விளைவு என்னாகும் என்பதற்கு அடையாளம்தான் கரூர் அவலம்!

இன்னமும் அவர் பாடம் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. இப்பொழுது என்ன சொல்லி இருக்கிறார்? ‘‘நமது அரசியல் பயணம் இன்னும் வலிமையாகவும், தைரியமாகவும் தொடரும்’’ என்று காணொலியை வெளியிட்டுள்ளார்.

அப்படி என்றால் இன்னும் பல கரூர்களும் தொடரும்; பிணங்கள் விழும், குழந்தைகளும், பெண்களும் பிணமாவார்கள் என்று சொல்ல வருகிறாரா?

இப்பொழுது இவரை ஆதரிப்பவர்கள் யார் யார் என்பதைப் பார்த்தால், ‘இவரின் பின்னணியும், தூண்டுதலும் எந்த சக்தியாக இருக்கும்’ என்ற பூனைக்குட்டி கோணிப்பையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வருகிறது.

என்ன பந்தயம் கட்டுகிறாய்? இன்னும் கெட்டுப் போகிறேன் என்று ஒருவர் சொல்வாரேயானால் யார்தான் என்ன செய்ய முடியும்?

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *