* சட்டரீதியாக ஓர் அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைக் ‘கொஞ்சமும் தயக்கமில்லாமல்’ முதலமைச்சர் எடுக்க வேண்டும்!
* சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பொய்களைப் பரப்புவது குடிநீரில் விஷத்தைக் கொட்டும் கொடூரமாகும்!
அமைப்புகள், இயக்கங்கள், கட்சிகள், சமூக அக்கறை கொண்டோர்
இளைஞர்களை சரியாக வழிநடத்துவதற்கான
தங்கள் சமூகக் கடமைகளைச் செய்ய முன்வர வேண்டும்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
கரூரில், 41 உயிர்கள் பலியானதற்குச் சட்டரீதியாக ஓர் அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைக் ‘கொஞ்சமும் தயக்கமில்லாமல்’ முதலமைச்சர் எடுக்க வேண்டும்! சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பொய்களைப் பரப்புவது குடிநீரில் விஷத்தைக் கொட்டும் கொடூரமாகும்! அமைப்புகள், இயக்கங்கள், கட்சிகள், சமூக அக்கறை கொண்டோர் இளைஞர்களை சரியாக வழிநடத்துவதற்கான தங்கள் சமூகக் கடமைகளைச் செய்ய முன்வர வேண்டும் என்றும், ஒரு முதலமைச்சர் எப்படி செயல்படவேண்டும் என்பதில் நமது முதலமைச்சர் உயர்ந்து நிற்கிறார் என்றும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
கரூரில் நடைபெற்ற த.வெ.க. தலைவர் நடிகர் விஜய்யின் பிரச்சாரத்தின்போது, அடங்காத கூட்டத்தின் விளைவாக நடந்த நெரிசலில் சிக்கி, 41 உயிர்கள் பலி யாகிய சோகம் நம் அனைவர் நெஞ்சங்களில் இருந்தும் இன்னும் அகலவில்லை; ஒருபோதும் அகலாது. இதிலி ருந்து கற்க வேண்டிய பாடங்கள் ஏராளம். ஆனால், அப் பாடத்தை உரியவர்கள் கற்கவில்லை என்பதுடன், அதற்கு மாறாக இன்னும் மோசமாக நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான் தற்போதைய வேதனைக்கும், வன்மையான கண்டனத்திற்கும் உரிய நிலவரம் ஆகும்.
புகழும், திரைப்பட அறிமுகத்தால் இளைஞர்களிடம் கிடைத்த ஈர்ப்பும், மக்களைத் திரட்டும் ஆற்றலும் மட்டுமே ஓர் அரசியல் கட்சியை நடத்துவதற்கும், ஒரு தலைவராவதற்குமான தகுதிகள் அல்ல; இக்கட்டான சூழல்களில் ஒருவர் எப்படி அதை எதிர்கொள்கிறார் என்பதை வைத்துத் தான் ஒருவருடைய தலைமைப் பண்புகளை மதிப்பிட முடியும்.
வரலாற்றில் இதுவரை நடந்திராத பெருந்துயரம்
தாங்கள் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில், வர லாற்றில் இதுவரை நடந்திராத பெருந்துயரம் நடந்தி ருக்கும் சூழலில், அக் கட்சியிடமிருந்தோ, அதன் தலை வரிடமிருந்தோ, அல்லது அதன் முக்கியப் ‘பதவி’களில் (அவர்களைப் பொறுப்பாளர்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்?) இருப்போரிடமிருந்தோ இதுவரை பொறுப்புமிக்க ஏதாவது ஓர் அறிக்கை வந்திருக்கிறதா?
செய்தியாளர்களைச் சந்திக்க மறுத்து த.வெ.க. தலைவர் நடிகர் விஜய், விமான நிலையத்திற்குள் புகுந்தவர், பத்திரமாக வீடு போய்ச் சேர்ந்ததும், நள்ளிரவுக்கு மேல் இரங்கல் செய்தி ஒன்றை வெளியிடுகிறார். அதன் பின் எந்தச் செய்தியும் இல்லை!
ஆனால், அதற்கு மாறாக இளைஞர்கள் பெரிதும் புழங்கும் சமூக ஊடகங்களில் திட்டமிட்டு நடந்திருப்பது என்ன?
கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர்
பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்
நடிகர் விஜய்யின் ரசிகர்கள் என்ற பெயரில் இன்ஸ்டா கிராம், ‘எக்ஸ்’ தளங்களில் இயங்கும் ஏராளமான நபர்களும், முகங்கள் அற்ற வெற்று அய்.டி.களும் (ID) பெரும் ‘புரளிப் புயலை’யே உருவாக்கியிருக்கிறார்கள். (அதில் உண்மையான பெயர்களும் இருக்கலாம்; ஒருவரே பல கணக்குகளை வைத்திருக்கும் போலிக் கணக்குகளாக இருக்கலாம். இதுதான் வாய்ப்பு என்று தமிழ்நாட்டின் எதிர்க்கட்சிகளும் இதில் புகுந்து புரளிகளையும், பொய்ச் செய்திகளையும், அவதூறுகளையும் பரப்புவதையும் காணவே முடிகிறது. இதற்காக முதலில் கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர் என்பதே அதற்குத் தக்க சான்று ஆகும்.)
அவற்றில் சில காணொளிகளைக் கடந்த இரண்டு நாள்களிலும் காண நேர்ந்தது. எவ்வளவு பொய்ச் செய்தி கள், அடிப்படையற்ற அவதூறுகள்! கொஞ்சமும் பொறுப்பற்ற, நேர்மையற்ற, புரிதலற்ற, வன்முறையைத் தூண்டும் வகையிலான, வக்கிர புத்தி கொண்ட பதி வுகள், பேச்சுகள், கமெண்டுகள் (கருத்துப் பகுதி) என்று குப்பை மேடாகக் காட்சியளிக்கின்றன சமூக ஊடகங்கள்.
இந்தச் சமூக ஊடகங்களில் பல ‘வியூஸுக்காக’வும் (பார்வையிட்டவர்களின் கணக்கு), ‘லைக்’குக்காகவும் (விருப்பம் தெரிவித்தவர்கள்), அதில் ஏற்படுகிற தற்காலிக ‘புகழ் வெளிச்சப் போதை’க்காகவும் எதையும் எழுதுகிற, பேசுகிற, செய்கிற ‘வெம்பி’ப் போனவர்களின் ஊடகமாகச் சீரழிந்திருப்பதைச் சமூக அக்கறை கொண்டோர் தொடர்ந்து கவனித்து எச்சரித்தே வருகிறார்கள் என்றா லும், அதன் மோசமான விளைவுகளை இந்த நிகழ்வு பளிச்சென்று வெளிப்படுத்தியிருக்கிறது.
பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் உள்ள கூட்டணியால், தி.மு.க.வை வீழ்த்த ஏற்பாடு செய்யப்பட்ட ‘பி டீம்’தான் நடிகர் விஜய் என்கின்ற ‘மாயமான்’ என்பதை முழுமையாக வெகுவிரைவில் நாடு அவர்களைப் புரிந்துகொள்ளும் வகையில், சமூக ஊடக அவதூறு அவர்கள் ஆதரவோடு நடத்தப்படும் ‘அங்குரார்ப்பணம்’ விளக்குகிறது.
வருத்தம் தெரிவித்தோ, பொறுப்பேற்றோ ஒற்றைச் செய்தி கூட அவர்களிடமிருந்து வரவில்லை!
நடந்த நிகழ்விற்கு அடிப்படையில் பொறுப்பேற்க வேண்டியவர்கள் யார்? அந்தக் கூட்டத்தை நடத்துவதற்கு அனுமதி கேட்டு, அதை ஒருங்கிணைத்தவர்கள் தானே! அக் கூட்டத்திற்கு ஆயிரக் கணக்கில் மக்கள் வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தவர்கள் தானே – அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டியவர்கள் – அவர்கள் தானே! இதுவரையிலும், நடந்த நிகழ்வுக்கு வருத்தம் தெரிவித்தோ, பொறுப்பேற்றோ ஒற்றைச் செய்தி கூட அவர்களிடமிருந்து வரவில்லையே!
அல்லது, அரசையோ, காவல்துறையையோ, யாரையோ குற்றம் சாட்டுவது என்று அவர்கள் முடிவெடுத்தாலும், அதையாவது நேர்மையாக, வெளிப்படையாக, அக் கட்சி யின் தலைமையோ, கட்சியின் அதிகாரப் பூர்வ செய்தி வெளியீடோ செய்திருக்க வேண்டுமல்லவா?
கோர நிகழ்வு நடந்து நாம் இதை எழுதும் வரையிலான இந்த 60 மணி நேரம் வரை இது குறித்து அக் கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி என்று ஒற்றை வரி கூட வெளிவரவேயில்லையே!
ஓர் அரசியல் கட்சிக்கு உரிய அடிப்படைப் பண்பு என்று எதுவுமே இல்லையா?
மாறாக என்ன நடந்திருக்கிறது? சமூக ஊடக வெளி யெங்கும் பொறுப்பற்ற பேச்சுகளும், காணொளிகளும் அவர்களின் கூட்டங்களில் விட்டுச் சென்ற செருப்பு களைப் போல விரவிக் கிடக்கின்றன. என்ன மோசமான போக்கு இது? ஓர் அரசியல் கட்சிக்கு உரிய அடிப்படைப் பண்பு என்று எதுவுமே இல்லையா?
அவ்வூடகங்களில் வரும் எவற்றுக்கும் தாங்கள் பொறுப்பல்ல என்று கை கழுவிவிட்டு, அதே நேரத்தில் அவை உருவாக்கும் பிம்பத்தின் பின்னால், நடிகர் விஜய் மீது இரக்கத்தைப் பரவ விடும் போலியான அல்லது முட்டாள்தனமான காட்சிப் பதிவுகளின் பின்னால், அவர்கள் முன்வைக்கும் அவதூறுகளுக்குப் பின்னால் ஒளிந்துகொள்வது என்பது கோழைத் தனம் அல்லவா? பொறுப்பற்ற தன்மையல்லவா? அரசியல் கட்சிக்கு என்றல்ல, அடிப்படை மனிதப் பொறுப்புணர்வுக்கே கூட அது முரணானது அல்லவா?
இத்தனை மோசமான, பொறுப்பற்ற ஓர் அமைப்பையோ, கட்சியையோ தமிழ்நாட்டில் இதுவரை யாரும் சந்தித்திருக்க முடியாது. செய்வதை எல்லாம் தப்புத் தப்பாகச் செய்துவிட்டு, எந்தப் பொறுப்பையும் ஏற்காமல் ‘கையைக் கழுவி’விட்டுத் திரிவது மட்டுமல்ல… ரத்தக் கறை படிந்த தங்கள் கைகளை நீட்டி, பொறுப்புடன் செயல்பட்ட அரசை நோக்கிக் காட்டுவது ஆகப் பெரிய ‘யோக்கிய பொறுப்பற்றதனம்’ அல்லவா?
எவ்வளவு அவதூறுகள்! இளைஞர்கள் மத்தியில் அவையெல்லாம் கொஞ்சம் கூட புரிதலற்ற நிலையைத் தோற்றுவிக்கும் என்பது மட்டுமல்லாமல், அவர்களை மீண்டும் மீண்டும் தவறாக வழிநடத்தும் வகையிலேயே அமைந்திருப்பதை எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும்?
உடனடியான சட்ட ரீதியான நடவடிக்கைகள் மிகுந்த அவசியமாகின்றன. நேற்று மிகச் சிலர் (மூன்று பேர்) மட்டுமே கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவதூறு பரப்பியோர் அனைவரையும் கைது செய்ய முடி வெடுத்தால் ஆயிரக்கணக்கில் கைதுகள் நடந்திருக்க வேண்டும். ஆனால், மிகுந்த பொறுப்புணர்வோடும், அக்கறையோடும், தவறாக வழிநடத்தப்படுகிற, தவறான பாதைக்குச் செல்கிற இளைஞர்களை எச்சரிக்கை செய்கின்ற தொனியிலும் தமிழ்நாடு அரசு இந்தக் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
நமது முதலமைச்சர் அவர்கள்
பன்மடங்கு உயர்ந்து நிற்கிறார்
ஒரு தலைவர் என்பவர் எப்படி இருக்க வேண்டும், ஓர் ஆட்சியாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்த ஒரு நிகழ்வின் மூலமே, நமது முதலமைச்சர் அவர்கள் பன்மடங்கு உயர்ந்து நிற்கிறார். அவரது பக்குவமும், அனுபவமும் எப்படிப்பட்டது என்பதை வியந்து பார்க்க வைக்கிறது. ஒரு முதலமைச்சர் எப்படிப் பணியாற்றவேண்டும் என்பது பொழுது விடிவதற்குள் உலகுக்கு நிரூபித்த ஒப்பற்ற முதலமைச்சர்மீது அவதூறு பரப்பி, புரியாத மக்களிடையே பொல்லாங்கு பரப்புவதா?
இரண்டு நாள்களுக்கு முன்பே (28.9.2025) அறிக்கை எழுதியுள்ளேன்.
இந்த நேரத்தில் அக் கட்சியின் மற்றொரு முக்கிய பதவியில் இருக்கும் ஒருவர், இந்த நிகழ்ச்சிகளைத் திட்டமிடும் இடத்தில் இருக்கும் ஒருவர் வெளியிட்டிருந்த ஓர் ‘எக்ஸ்’ தளச் செய்தி கடும் கண்டனத்திற்கும், உடனடி சட்டப்பூர்வமான நடவடிக்கைக்கும் உரியதாகும்.
ஏற்கெனவே புரிதலற்று, கட்டுப்பாடு அற்று, இந்தப் பெரும் கோரத்தில் பங்காளிகளாக இருக்கும் அந்த நடிகரின் ரசிகர்களைத் தூண்டிவிடும் வகையில் அவர் வெளியிட்டிருந்த பதிவை, கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், அடுத்த சில மணிநேரத்தில் நீக்கியிருக்கிறார். இத்தகையோர் சமூக அரசியல் தளங்களில் இருக்கக் கொஞ்சமும் தகுதியற்றவர்களாவார்கள்.
கருத்துச் சுதந்திரம் அல்ல;
வன்முறையைத் தூண்டுதல்!
ஓரிடத்தில், ஒரு பொதுக் கூட்டத்தில், மாநாட்டில் தாங்கள் போற்றும் ஒரு நடிகரிடம் கூட அடங்காத ஒரு கூட்டத்தை, மக்களுக்குப் பேராபத்தை விளைவிக்கும் வகையிலும், அமைதியைச் சீர்குலைக்கும் வகையிலும், சட்டம் ஒழுங்கைச் சிதைக்கும் வகையிலும் திருப்பிவிட முயலும் பயங்கரவாதம் இது! மனித உயிர்கள் அவ்வளவு மலிவானதா?
உரிய சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுக்க ஒருபோதும் தயங்கக் கூடாது! இதற்குப் பெயர் கருத்துச் சுதந்திரம் அல்ல; வன்முறையைத் தூண்டுதல்!
இந்த மிக முக்கியமான சூழலில் அ.இ.அ.தி.மு.க.வின் தலைமையும், பா.ஜ.க.வின் பதவி இழந்த தலைவர் ஒருவரும் பொறுப்பற்ற வகையில் பேசுவது கண்டிக்கத்தக்கது. அவதூறு பரப்புவதும், வன்முறையைத் தூண்டுவதும் கருத்துச் சுதந்திரம் அல்ல; அரசியல் உரிமை அல்ல. அதற்கெல்லாம் ஆதரவு தெரிவிக்கக் கூடாது.
தமிழ்நாட்டு அரசியலில் ஏற்பட்டிருக்கும் அவலநிலை
முன்பு ஓர் அரசை நடத்தியவருக்கு அதற்குரிய பக்குவம் இருக்க வேண்டும். ‘‘தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடந்ததைத் தொலைக்காட்சியில் பார்த்துத் தெரிந்து கொண்டேன்’’ என்று சொன்னவர்களிடம் பெரிதாக எதையும் நாம் எதிர்பார்த்துவிட முடியாது தான்.
ஆனால், அரசின் தலைவராகப் பொறுப்பான இடத்திலிருந்து முதலமைச்சர் நாட்டு மக்களுக்கும், குறிப்பாக, தவறாக இளைஞர்கள் சிலர் தீய வழிகளில் அகப்பட்டுவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுடனும் முதலமைச்சர் உரையாற்றுவதையும், நடவடிக்கை எடுப்பதையும் விமர்சித்து, அரசியல் செய்கிற சூழல் இது இல்லை. அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தருவதன் மூலம் தங்களின் பக்குவத்தையும், நாகரிகத்தையும் காட்டக் கிடைத்த வாய்ப்பை வழக்கம் போல அவர் தவறவிட்டிருக்கிறார். மாறாக நடந்துகொண்டிருக்கிறார் என்பது தமிழ்நாட்டு அரசியலில் ஏற்பட்டிருக்கும் அவல நிலையாகும்.
கருத்துரிமை – பரப்புரிமை என்பது சமூகநலன் – பொது ஒழுக்கச் சிதைவுத் தளமாகிவிடக் கூடாது. கற்பனைக் கதைகளைப் பரபரப்புச் செய்திகளாக்கி, கோணல் புத்தியுடன் பரப்புவது, கரூர் நிகழ்வில் சதி என்றெல்லாம் பொய்யுரைகளை சமூக ஊடகங்களில் பரப்புவது, குடிநீரில் விஷத்தைக் கொட்டிக் கலப்பதற்கு ஒப்பாகும்.
பொய்த் தகவல்களைத் தருவதில் கூட இரண்டு ரகம் உண்டு.
- Misinformation – தெரியாமல் தவறுதலாகச் செய்வது.
- Disinformation – வேண்டுமென்றே அவதூறு பரப்புவது, திசைதிருப்பும் நோக்கத்தோடு பொய்யையும் புரட்டையும் பரப்புவது.
சில சமூக வலைதளங்களின் பின்னால் ஒளிந்து கொண்டு இரண்டாவது வகையில் திட்டமிட்டுப் பொய்ச் செய்திகளைப் பரப்புவதை எதிர்த்து, பொறுப்புமிக்க சமூக ஊடகச் செய்தியாளர்களும், கருத்தாளர்களும், அவ் ஊடகங்களை நடத்துவோரும் தங்கள் கடமையைச் செய்யவேண்டிய தருணம் இது!
உடனடியாகத் தடுப்பது அவசரம் – அவசியம்!
விஷமச் செய்திகள், பொய் புனை சுருட்டுகள் தயாரிக்கும் கூடமாகச் செயல்படும் சமூக ஊடகங்கள் மீது தமிழ்நாடு அரசின் கடும் நடவடிக்கை பாய வேண்டும். புரியாத அப்பாவிகளைக் குழப்பும் செயல்களை உடன டியாகத் தடுப்பது அவசரம் – அவசியம்!
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இவ் விவகாரத்தில் மிகக் கவனமாக, சரியான தொடர் நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்கள். சட்டரீதியாக ஓர் அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைக் ‘‘கொஞ்சமும் தயக்க மில்லாமல்’’ முதலமைச்சர் எடுக்க வேண்டும் என்று அவரைக் கேட்டுக் கொள்வதுடன், இந்தச் சூழலில் (இனியேனும்) ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும், மற்ற அமைப்புகளும், இயக்கங்க ளும், கட்சிகளும், சமூக அக்கறை கொண்டோ ரும் அந்த இளைஞர்களை சரியாக வழிநடத்துவதற்கான தங்கள் கடமைகளைச் செய்ய வேண்டும்; அரசுக்கு உறுதுணையாக நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
தலைமைப் பண்புக்குத் தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்ளத் தெரியாதவர், வெறும் சினிமாக் கவர்ச்சியையும், தன்னிடம் உள்ள பண பலத்தையும் தூண்டிலாக வைத்துப் பதவிக்கு வரத் துடிக்கும் அரசியல் அனுபவ மற்ற ஒருவரின் பரிதாப அரசியல் படலம் இது! இந்தப் போக்கு நாட்டை எங்கே கொண்டுபோய் விடுமோ என்று தெரியவில்லை.
தொண்டர்களைக் கட்டுப்படுத்த வக்கற்றவர்கள் வாய் வீச்சு, எழுதிக் கொடுத்த வசனங்களால் அவர்கள் இதுபோன்ற பரிதாப நிலைக்குத்தான் தள்ளப்படுவார்கள்!
பாடுபட்டு உழைக்கும் மக்கள் சிந்திப்பார்களாக!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
30.9.2025
(பொய்ச் செய்திகளும், அவற்றின் உண்மையான நிலவரத்தையும் தனியே பட்டியலிட்டுள்ளோம். காண்க 8 ஆம் பக்கம்).