திருச்சி, செப். 30- திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகப் பணித்தோழர்கள் கூட்டமைப்பின் சார்பில் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 147 ஆவது பிறந்தநாள் விழா 26.09.2025 அன்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது.
பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை தலைமையில் பணித்தோழர்கள் கூட்டமைப்பின் தலைவர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி மற்றும் பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் முனைவர் வனிதா ஆகியோர் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சிக்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் செல்வி ரெத்தினா வரவேற்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் தந்தை பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை இணை பேராசிரியர் முனைவர் வ. நாராயண நம்பி தந்தை பெரியார் அவர்களின் சமூக நீதிக் கொள்கைகள் குறித்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அவர் தமது உரையில்:-
தந்தை பெரியார் பிறந்த புரட்சி மண்ணாக ஈரோடு இருந்தாலும் அவர்கள் விரும்பி கொள்கைத் தடம் பதித்த இடம் திருச்சி தான் என்றும் அதிலும் அய்யா அவர்களில் முழு. தொண்டறத்தால் உருவான தந்தை பெரியார் கலை மற்றும் அறிவியல் வளாகத்தில் கல்வி கல்லூரியிலிருந்து இப்பெரியார் நூற்றாண்டு ஆசிரியப்பெருமக்கள் முன் உரையாற்றுவதில் மிக்க மகிழ்ச்சியடைவதாகவும் உரையாற்றினார்.
மேலும் தமிழ்நாடு ஜாதி, மத, இன பூசல்களின்றி அமைதி பூங்காவாக திகழ்கின்றது என்றால் அது தந்தை பெரியார் என்ற மனிதநேயத் தலைவர் பிறந்ததால்தான் என்றும் அரசியலில் தந்தை பெரியார் அவர்கள் இல்லையென்றாலும் அவர் இல்லாமல் அரசியல் இல்லை. இன்றைக்கு தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகள்தான் அரசின் செயல்திட்டங் களாக இடம்பெறுகின்றன என்றும் உரையாற்றினார். மேலும் நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம் போன்ற சமுதாய மாற்றத்தை ஏற்படுத்திய இயக்கங்களில் தந்தை பெரியார் அவர்கள் புரிந்த மனிதநேயத் தொண்டை பணித்தோழர்கள் மத்தியில் எடுத்துரைத்து, பிறந்தநாள் கொண்டாடிய பணித்தோழர்களுக்கு சிறப்பு செய்ததுடன் வல்லம், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சிறந்த ஆசிரியர் விருது பெற்ற பெரியார் மெட்ரிக் பள்ளியின் தமிழாசிரியர் திலகவதிக்கு பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகப் பணித்தோழர்கள் கூட்டமைப்பின் செயலர் கவுதமன் மற்றும் பொருளாளர் செல்வி கல்லூரியின் உதவிப் பேராசிரியர் அ.ஷமீம் நன்றியுரையாற்றினார். பணித்தோழர்கள் அனை வருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு தந்தை பெரியார் அவர்கள் பிறந்த திராவிட மாதம் மகிழ்ச்சிகரமாக கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.