சென்னை, செப்.30- சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீக்காயங்களை விரைவாக குணப்படுத்தும் உயர் அழுத்த பிராணவாயு சிகிச்சையால் நடப்பாண்டில் 351 பேர் பயனடைந்துள்ளனர்.
பிராணவாயு சிகிச்சை: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனைத்து விதமான தீக்காயங்களுக்கும் உயர்ரகசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் நோயாளிகள் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். அந்தவகையில், உடலில் நீண்ட நாட்களாக குணமாகாமல் இருக்கும் காயங்களை சரிசெய்ய இந்த மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உயர் அழுத்த பிராண வாயு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த 8 மாதத்தில் பிராணவாயு சிகிச்சை மூலம் 351 பேர் பயனடைந்துள்ளனர்.
351 பேர் பயன்: இதுகுறித்து, மருத்துவமனையின் தீக்காய பிரிவு தலைவர் மருத்துவர் மகாதேவன் கூறியதாவது:- கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கடந்த 8 மாதத்தில் நாள்பட்ட தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட 351 பேருக்கு உயர் அழுத்த பிராணவாயு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை சுமார் ஒரு மணி நேரம் வரை நடைபெறும். இதனால், சிகிச்சையின் போது நோயாளிகளுக்கு களைப்பு தெரியாமல் இருக்க, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை சிகிச்சையின் போது தொலைக்காட்சியை பார்த்து ரசிக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சிகிச்சையின் போது, முதலில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பெரிய கண்ணாடி பெட்டியில் வைத்து முழுவதுமாக மூடப்படுவார்கள். பின்னர், உயர் அழுத்த பிராண வாயுவை கண்ணாடி பெட்டியில் செலுத்தி சிகிச்சை தொடங்கப்படும். கருவியின் உள்ளே இருக்கும் நோயாளியிடம் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் வெளியில் சிறிய மைக் மூலம் பேசுவார்கள். அதன் அடிப்படையில் எவ்வளவு நேரம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று நேரத்தை கணக்கிட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.