ஹனோய், செப். 30- வியட்நாமை புவலாய் சூறாவளி தாக்கியது. கடும் மழையால் வியட்நாம் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டோடியது. வீடுகள், பள்ளிகள், அரசு அலுவலகக் கட்டடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பல மாகாணங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்தன. காற்றின் வேகத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் மேற்கூரைகள் சேதமடைந்து உடைந்து விழுந்தன. புயல் மற்றும் மழை காரணமாக ஏற்பட்ட சம்பவங்களில் சுமார் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 17 மீனவர்கள் காணாமல் போன நிலையில் மீட்புக் குழுவினர் அவர்களை தேடி வருகின்றனர்.
லுப்தான்சா விமான நிறுவனத்தில்
4 ஆயிரம் பேர் ஆட்குறைப்பு
4 ஆயிரம் பேர் ஆட்குறைப்பு
பிராங்பர்ட், செப். 30- லுப்தான்சா விமான நிறுவனம் 4000 வேலைகளை குறைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. ஜெர்மனியின் மிகப்பெரிய விமான நிறுவனமான லுப்தான்சா அய்ரோப்பாவில் 2ஆவது பெரிய விமான நிறுவனமாக திகழ்கிறது.
லுப்தான்சா விமான நிறுவன கிளைகளில் சுமார் 25 ஆயிரம் பேர் பணிபுரிகிறார்கள். இந்த நிலையில் வரும் 2030க்குள் 4 ஆயிரம் பேரை ஆடகுறைப்பு செய்து அதிக லாபம் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று லுப்தான்சா தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் ஆட்டோமேஷன் மூலம் செயல் திறனை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து லுப்தான்சா நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்து ஆரம்ப வர்த்தகத்தில் 2 விழுக்காடு உயர்ந்தன. லுப்தான்சா வெளியிட்டுள்ள அறிக்கை:
டிஜிட்டல் மயம் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் ஏராளமான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் மூலம் வர்த்தகம் மற்றும் செயல்பாட்டுத் திறன் அதிகரிக்கும். பெரும்பாலான வேலை குறைப்பு ஜெர்மனியில் தான் இருக்கும். இந்த மாற்றங்களின் மூலம் நிறுவனத்துக்கு பெரும் லாபம் ஏற்படும்.
போஸ் நிறுவனம் 13 ஆயிரம் ஊழியர்களை
பணி நீக்கம் செய்ய முடிவு
பணி நீக்கம் செய்ய முடிவு
பெர்லின், செப். 30- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரிகளை உயர்த்தி தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் காரணமாக வாகன சந்தையில் மந்தமான சூழல் நிலவி வருவதால் வாகன உற்பத்தியும் வெகுவாக சரிந்துள்ளது. இதனால் டெஸ்லா, பிஒய்டி ஆகிய நிறுவனங்கள் ஆள்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டன. இந்நிலையில், போஸ் நிறுவனமும் 13 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் முடிவை எடுத்துள்ளது.
இந்தியாவுக்கு நெருக்கடி
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றதில் இருந்து தாறுமாறாக முடிவுகளை எடுத்துக் கொண்டிருக்கிறார். இதனால் அமெரிக்கா உள்பட உலகம் முழுவதும் பாதிப்புகள் நிலவிக் கொண்டிருக்கின்றன. முக்கியமாக இந்தியாவை குறிவைத்து அதிகளவு நடவடடிக்கை எடுத்து வருகிறார். விசா விவகாரம் தொடங்கி வரி உயர்வு வரை உள்ள நடவடிக்கைகளை எடுத்து இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கிறார்.
இந்தியாவுடன் நட்பு நாடாக இருந்ததில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், டிரம்ப் மறுபக்கம் பாகிஸ்தான் நாட்டுடன் நட்பு பாராட்டி வருகிறார். சமீபத்தில் ஹெச் 1 பி விசாவில் டொனால்ட் டிரம்ப் அறிவித்த அதிரடி மாற்றங்கள் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தின. அதிபராவதற்கு முன்பு டிரம்புடன் நெருக்கமாக இருந்த தொழிலதிபர் எலான் மஸ்க் உள்ளிட்டோரே அவருடன் கருத்து வேறுபாட்டில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதிர்ச்சி தரும் நடவடிக்கை
இந்தியா மீது ஏற்கெனவே 50 விழுக்காடு வரி உயர்வை சுமத்தி நெருக்கடி கொடுத்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். இந்நிலையில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யும் மருந்துகளுக்கு 100 விழுக்காடு வரியும், சமையல் அலமாரி உள்ளிட்ட பொருட்களுக்கு 50 விழுக்காடு வரியும் விதித்து அறிவித்துள்ளார். அதனுடன் மேலும் சிலவற்றுக்கு வரி உயர்வை அறிவித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இந்நிலையில், டொனால்ட் டிரம்பின் வரி உயர்வு காரணமாக செலவு அதிகரித்துள்ளதால் வாகன உற்பத்தி தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாகக் கூறி 13 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய போஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
வாகன உதிரி பாகங்கள் தயாரித்து வருகிறது போஸ் நிறுவனம். உலகில் முன்னணி நிறுவனங்களில் அதுவும் ஒன்றாகும். ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் உலகம் முழுவதும் இருந்து 4 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், வாகன சந்தையில் தற்போது மந்தமான சூழல் நிலவி வருவதால் வாகன உற்பத்தி சரிந்துள்ளது.
இந்த உற்பத்தி சரிவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ள கட்டணங்களால் ஏற்பட்ட செலவு அதிகரிப்பும் ஒரு காரணம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வாகன உற்பத்தி சரிந்துள்ளதால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டும் வகையில் டெஸ்லா, பிஒய்டி ஆகிய உற்பத்தி நிறுவனங்கள் ஆள்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், போஸ் நிறுவனமும் உலகம் முழுவதும் உள்ள அந்நிறுவனத்தின் கிளைகளில் பணியாற்றி வரும் 13 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்யும் முடிவை எடுத்துள்ளது.