கிராம தேவதை தொடர்பான ஒரு கன்னட மொழித் திரைப்படம் முதல் பாகம் வெளிவந்து வெற்றி பெற்ற நிலையில், தற்போது இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. இந்தச் சூழலில், அதில் நடித்த சில நடிகர்கள் மாரடைப்பாலும், சுற்றுலா சென்றபோது ஆற்றில் நீச்சல் தெரியாத காரணத்தாலும் நீரில் மூழ்கி இறந்தனர்.
உடனே, இதற்குக் காரணம் அந்தக் கிராம தேவதைதான் என்றும், படப்பிடிப்பின் போது இந்த நடிகர்கள் இறைச்சி சாப்பிட்டதால் அச் சாமி தண்டித்துவிட்டது என்றும் சிலர் பேசி வருகின்றனர். இது தொலைக்காட்சிகளிலும் செய்தியாக வந்துவிட்டது.(கும்பமேளாவிலும், கும்பகோணம் மகாமகத்திலும் நடந்த மரணங்களை எந்தப் பட்டியலில் சேர்ப்பதோ!)
இந்த நிலையில், கருநாடகாவில் உள்ள இந்து அமைப்பினர் இந்தத் திரைப்படம் ஓடும் திரையரங்குகளுக்கு அருகில் இறைச்சி விற்கக் கூடாது என்றும், படம் பார்க்க வருபவர்கள் விரதமிருந்து வாருங்கள் என்றும் கைப்பிரதிகள் கொடுத்து வருகின்றனர்.
கருநாடகாவில் முற்போக்குச் சிந்தனை கொண்ட சித்தராமையா முதலமைச்சராக உள்ளார்.
முந்தைய பாஜக அரசு, குறிப்பிட்ட சில நாட்களில் (இந்து மதப் பண்டிகைகள், விரத காலம், திங்கள் – சிவனுக்கு உகந்த நாள், வெள்ளி – தேவிக்கு உகந்த நாள் என) பள்ளி மாணவர்களுக்கு முட்டை வழங்கக் கூடாது, அதற்குப் பதிலாக வாழைப்பழம் கொடுங்கள் என்று கூறி இருந்தது.
சித்தராமையா ஆட்சிக்கு வந்தவுடன், இதனை எல்லாம் நடைமுறைப்படுத்த வேண்டாம் என்றும், விருப்பப்பட்ட குழந்தைகளுக்கு நாள்தோறும் முட்டை வழங்குங்கள் என்றும் சமூகநலத்துறைக்கு ஆணையிட்டார்.
அப்படி இருந்தும், இந்து அமைப்பினர் வற்புறுத்தியதால் சில பள்ளிகள் முட்டை வழங்க மறுத்தன. அரசாங்கம் அந்தப் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.
பாஜக ஆளும் மாநிலங்களில், பள்ளியில் மதிய உணவு வழங்க இஸ்கான் (ISKCON) என்ற அமைப்போடு ஒப்பந்தம் போட்டிருந்தனர். இஸ்கான் அமைப்பு பார்ப்பனர்களால் நிருவகிக்கப்படும் மற்றும் பகவத் கீதையை மட்டுமே நெறியாகக் கொண்டு இயங்கும் அமைப்பு. அந்த அமைப்பைப் பொறுத்தவரை இந்திய அரசமைப்புச் சட்டம் எல்லாம் அவர்களின் நிர்வாகத்தின் வாசலுக்கு வெளியேதான்.
இவர்கள் முள்ளங்கி, உருளைக்கிழங்கு, கேரட், சேனை உள்ளிட்ட, புரதமும், ஊட்டச்சத்தும் மிகுந்த உணவுகளான, பூமிக்கு அடியில் விளையக்கூடியவற்றைச் சமைக்கப் பயன்படுத்த மாட்டார்கள். அதேபோல், வெங்காயம், பூண்டு, முருங்கை, புதினா உள்ளிட்ட சில காய்கறிகளையும் உணவில் சேர்க்க மாட்டார்கள். கடல் உப்பைச் சேர்க்க மாட்டார்கள். அதேபோல், பெருங்காயம், சோம்பு (பெருஞ்சீரகம்) உள்ளிட்ட சில மசாலாக்களையும் சேர்க்க மாட்டார்கள்.
இவை எதுவுமே சேர்க்காமல் தயாரிக்கப்படும் உணவில், வளரிளம் பிள்ளைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் எதுவுமே இருக்காது என ஊட்டச்சத்து மருத்துவ நிபுணர்களே எச்சரித்துள்ளனர்.
எடப்பாடி தலையிலான முந்தைய அதிமுக அரசு, 2020–ஆம் ஆண்டு சென்னையில் மய்யப் பகுதியில் அமைந்துள்ள கிரீம்ஸ் சாலையில் 20,000 சதுர அடியும், பெரம்பூர் பேரக்ஸ் பகுதியில் 35,000 சதுர அடியும் கொண்ட நிலங்களை இஸ்கான் அமைப்புக்குப் பள்ளிகளில் உணவு வழங்க சமையற்கூடத்திற்கு அரசு தாரை வார்த்துக் கொடுத்தது.
அன்றைய தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது சிபாரிசின் மூலம் ரூ. 5 கோடியை நிதியாக அதற்கு அள்ளிக் கொடுத்திருக்கிறார். இவை எல்லாம் அரசுப் பணம், மக்களின் பணம்.
நல்ல வாய்ப்பாக ‘திராவிட மாடல்’ அரசு அதனை மாற்றி அமைத்துள்ளது. சமூக நலத் துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை மூலமாக (Rural Develpment & Panchayatraj Dept) மூலம் நிர்வகிக்கப்படுகிறது. உணவு சமைக்கும் பணி பெரும்பாலும் சமையல் அம்மாக்கள் (Cook cum Helpers) எனப்படும் உள்ளூர்ப் பெண்கள் குழுக்கள் மூலம் நடத்தப்படுகிறது.
சில இடங்களில் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் நேரடி மேலாண்மை செய்கின்றன. மேலால் சமூக நலத் துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை மூலம் ஒருங்கி ணைக்கப்படுகிறது.
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலும், இஸ்கான் என்ற அமைப்பிடம் இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது.
கடந்த அதிமுக ஆட்சியிலும் (எடப்பாடி) இஸ்கான் அமைப்பிடம்தான் ஒப்படைக்கப்பட்டு இருந்தது.
‘இஸ்கான்’ என்பதன் விரிவாக்கம் (International Society for Krishna ConsciousNess) அதாவது ‘‘சர்வதேச கிருஷ்ண சைதன்ய அமைப்பு’’ என்பதாகும். இந்தப் பெயரில் இருந்தே இந்த அமைப்பு எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ளலாமே!
ஆன்மிகத்தின் பெயரில் மக்களின் உணவிலும் வளரிளம் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சிதைக்கும் ஹிந்துத்துவ அமைப்பினரின் சூழ்ச்சியின் பின்னணியில் பல காரியங்கள் நடைபெற்று வருவது கூர்மையாகக் கவனிக்கத்தக்கதாகும்.