கரூர் த.வெ.க. கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் 41 பேர் மாண்ட துயரம்:
மக்களைக் குழப்பும் நோக்கில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு, பரப்பப்படும்
- காவல்துறை அனுமதித்த இடம் தான் பிரச்சினையா?
‘த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்பட்ட இடம் தான் கூட்ட நெரிசலுக்குக் காரணம். இவ்வளவு பேர் கூடக் கூடிய ஒரு நிகழ்ச்சிக்குக் காவல்துறை திட்டமிட்டு மிகச் சிறிய இடத்தை ஒதுக்கியது’ என்பது அரசை நோக்கி வைக்கப்படும் அவதூறுகளில் முதன்மையானது.
இது முற்றிலும் உண்மைக்கு மாறானது. த.வெ.க.வினர் திட்டப்படி முதலில் இந்தத் தேதியில் (செப்.27, 28) சென்னை, திருவள்ளூர் பகுதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திடீரென அதற்குப் பதிலாக அந்த நாளில் நாமக்கல்லிலும், கரூரிலும் விஜய் பிரச்சாரம் செய்யப்போவதாக அறிவித்தனர்.
(தி.மு.க.வின் முப்பெரும் விழாவும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சாரமும் அங்கு நடைபெற்றதால் உடனடியாகத் தன்னுடைய கூட்டத்தைக் காட்ட முடிவெடுத்து, அங்கு இடம் மாற்றப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.)
27-ஆம் தேதி நடத்தவிருந்த பிரச்சாரத்திற்கு 25-ஆம் தேதிதான் விண்ணப்பிக்கின்றனர். அதிலும் அவர்கள் முதலில் நான்கு இடங்களைத் தேர்ந்தெடுத்து அதில் ஒன்றைக் கேட்கவிருப்பதாக 24, 25-ஆம் தேதிகளில் வந்த செய்திகள் தெரிவித்தன. அவர்கள் கேட்க முடிவு செய்திருந்ததாக செய்தி வெளியான இடங்களில் இந்த வேலுச்சாமிபுரமும் ஒன்று!
ஆனால் காவல்துறையிடம் அனுமதி கோரும் கடிதம் வாயிலாக த.வெ.க.வினர் முதலில் கேட்ட இரண்டு இடங்களான லைட் ஹவுஸ் ரவுண்டானா பகுதி – ஒரு பக்கம் பெட்ரோல் பங்க்கும், மறுபக்கம் ஆற்றுப் பாலமும் உள்ள இடம்; மற்றொரு இடமான உழவர் சந்தை சாலை மிகவும் குறுகலானது, இவர்கள் கூட்டத்திற்கு ஏற்றதல்ல. எனவே, எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்திற்கு வழங்கப்பட்ட இடமான வேலுச்சாமிபுரம் என்ற அகலமான நான்கு வழிச்சாலையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதை த.வெ.க.வினர் ஏற்றுக் கொண்டனர்.
- காவல்துறையினரின் எண்ணிக்கை?
10000 பேர் கூடுவார்கள் என்று த.வெ.க.வினர் சொன்ன நிலையில், 20 பேருக்கு ஒருவர் வீதம் 500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆனால், த.வெ.க.வினர் சொன்னதற்கு மாறாக 25000 பேர் வரை கூடியிருந்ததாகச் சொல்லப்படுகிறது. இவர்கள் ஏற்கெனவே கூடியிருந்தோர்
இவர்களைத் தவிர, நாமக்கல்லில் இருந்து நடிகர் விஜய் வந்த சொகுசுப் பேருந்தைத் துரத்திக் கொண்டே வந்த இளைஞர்கள் சில ஆயிரம் பேர்களாவர். அவர்களும் சேரச் சேர கூட்டம் இன்னும் அதிக நெரிசலடைந்தது.
காவல் துறையினரிடம் சொன்ன தகவலுக்கு மாறாகக் கூட்டத்தைக் கூட்டியதுடன், அது குறித்து கூட்டம் நடை பெறும் முன்பே அதன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்பட த.வெ.க. நிர்வாகிகளுக்குக் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தும் அதை அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. இதற்கு முன் நடந்த நாமக்கல் கூட்டத்திலேயே தள்ளுமுள்ளு நடந்து 20 பேர் காயமடைந்துள்ளனர். காவல் துறையின் உயர் அதிகாரிகளைக் கூட கூடியிருந்த கூட்டம் மதிக்கவில்லை என்பதற்கு யார் பொறுப்பு?
காவல் துறை தடியடி நடத்திக் கலைத்திருந்தாலோ, கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தியிருந்தாலோ அதைக் கலவரமாக மாற்றி அரசியல் ஆதாயம் தேடுவதற்கு இவர்கள் முற்பட மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அரசும், காவல்துறையும் கடந்த கூட்டங்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் குறித்து, மேடையிலேயே ‘மிரட்டப் பார்க்கிறீர்களா?’ என்று பேசி கூட்டத்தைத் தூண்டிவிட்டவர் தானே நடிகர் விஜய்.
இப்போது காவல்துறை ஏன் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்த வில்லை என்பது உண்மைக்கு மாறான குற்றச்சாட்டு ஆகும்.
மேலும், காவல்துறையினரின் ஒத்துழைப்பு காரணமாகவே கூட்டத்திற்குள் தன்னால் நுழைய முடிந்தது என்றும், அதற்காகக் காவல்துறைக்கு நன்றி என்றும் நடிகர் விஜய் அதே கூட்டத்தில் பேசிய காணொலி வெளியாகியுள்ளது. பிரச்சினை ஏற்பட்ட பிறகு திடீரென்று காவல்துறையின் மீது குற்றம் சாட்டுவது ஏன்?
- நேரம் செல்லச் செல்லக் கூட்டம் அதிகமானது ஏன்?
‘காலை 8.45 மணிக்கு நாமக்கல்லில் பேசுவார்’ என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சென்னையிலிருந்து கிளம்பியதே காலை 8.45-க்குத் தான். அதன் பின்னர் மதியம் 3 மணிக்குக் கரூரில் பேசுவார் என்று காவல்துறையிடம் சொல்லிவிட்டு, 12 மணிக்கே கரூரில் விஜய் பேசுவார் என்று அவர்களது சமூக ஊடகத்தில் தகவலைச் சொல்லி, காலை முதலே கரூரில் அனைவரையும் காக்கவைத்தது த.வெ.க.வினர் தான்.
இதனால், கடும் வெயிலில், நடுச் சாலையில் காலை முதலே கூட்டம் கூடி நின்றது. மாலை ஆக ஆக செய்தியைக் கேள்விப்பட்டு மேலும் கூட்டம் அதிகமானது. இரவு 7 மணிக்கு அவர் வர வர, நாமக்கல்லில் இருந்து பின் தொடர்ந்து வந்த கூட்டம் இணைந்து கொண்டது. இதனால் கூட்டம் மிகக் கடுமையான நெருக்கடிக்குள் மாட்டியது. விஜய் வாகனம் நகர, நகர கூட்டமும் அதனுடன் சேர்ந்து நகர்ந்து நெரிசல் மிகக் கடுமையாகி மூச்சுவிடக் கூட இடமில்லாமல் போனது.
பேச்சைக் கேட்பதற்கு அல்ல, நடிகர் விஜய்யைப் பார்க்க வந்த கூட்டம் தான் அது! ஆனால், கூட்டத்திற்குள் நுழைந்தது முதல் வாகனத்திற்குள் அவர் விளக்கை அணைத்து வைத்ததால், அவரைப் பார்க்க முண்டியடித்து கொண்டு அவரை நெருங்கிச் செல்ல கூட்டத்தினர் முயன்றதுதான் நெரிசலை இன்னும் உச்சத்திற்குக் கொண்டு சென்றது.
- மின் இணைப்பு நிறுத்தப்பட்டதா?
மின்சாரக் கம்பங்களில், குறிப்பாக டிரான்ஸ்பார்மரில் ஏறி நின்ற போது சில நிமிடங்கள் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. அப்படி நிறுத்தாவிடில் நிலைமை என்ன என்பதை எண்ணிப் பார்க்க இயலவில்லை.
கூட்ட நெருக்கடியில், அங்கு கூட்டத்திற்காக வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டர் அறையின் தகடுகளை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர். இதனால் அங்கு ஜெனரேட்டர் வைத்திருந்தவர்களால் மின் நிறுத்தம் செய்யபப்ட்டுள்ளது. அதனால், ஒரு சில விளக்குக் கம்பங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இதைத் திட்டமிட்ட செயலாகக் கூறுவது முற்றிலும் உள்நோக்கமுடையது. இதைவிடப் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது என்பதே உண்மை.
இது தொடர்பான தெளிவான விளக்கத்தை மின்வாரியம் வழங்கியுள்ளது. காணொலியில் நடப்பதைக் கண்டுகொண்டிருந்த எல்லோருக்குமே இது தெரியும்.
- ஆம்புலன்ஸ்கள் வந்தது ஏன்? எப்படி?
உயர்நீதிமன்ற நீதிபதியின் அறிவுறுத்தலின்படி, பாதுகாப்புக்காக த.வெ.க.வினர் முன்கூட்டியே ஆம்புலன் சுகளை வாடகைக்கு அமர்த்தியுள்ளனர். கூட்ட நெரிசல் அதிகமானதன் காரணமாக சிலர் மயக்கமுற, அவர்களை அழைத்துக் கொண்டு ஆம்புலன்சுகள் விரைகின்றன. ஆனால், அதைக் கூட அறியாத நடிகர் விஜய், அதை ஒரு பிரச்சினையாகக் கூட்டத்தில் பேசியிருக்கிறார். ஆம்புலன்சு ஓட்டுநர்கள் சிலர் கடுமையாகக் கூட்டத்தில் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்த இந்தப் போக்கு விபரீதமான விளைவை ஏற்படுத்தி யிருக்கிறது.
- உடனடியான நடவடிக்கைகள் எடுத்ததும், அரசும், அமைச்சர்களும் விரைந்தது எப்படி?
நிலைமை கட்டுக்கடங்காமல் போவதைக் கவனித்த பிறகு அரசு செயல்படாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா?
அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான கரூர் செந்தில் பாலாஜி அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு விரைகிறார். மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உரிய ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்துகிறார். பக்கத்து திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவரான அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உடனடியாகக் களத்திற்குச் செல்கிறார். முதலமைச்சர் உடனடியாக அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டி, அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு, அடுத்த கட்டத்திற்கு முடுக்கிவிட்டதுடன், நேரடியாக தனி விமானம் மூலம் கரூர் விரைகிறார். இவ்வளவையும் ஓர் அரசு செய்யாமல் வேறு யார் செய்வார்? விரைந்து எடுத்த நடவடிக்கைகளுக்கு எதிராக அவதூறு பரப்புவதை எப்படி ஏற்க முடியும்?
ஓர் அரசு எப்படி இயங்கும், எப்படி அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்துச் செயல்படும் என்பதைக் கூட புரியாதவர்கள் தான் அரசியலில் இறங்கி அடுத்த நொடியே முதலமைச்சராகி விட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.
- இறந்தோர் பற்றிய அறிவிப்பும், காயமடைந்தோருக்கான மருத்துவமனை சிகிச்சைகளும், மருத்துவர்கள் பற்றிய அவதூறும்!
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களின் வழிகாட்டுதலில், பக்கத்து மாவட்டங்களிலும் இருந்து மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் கரூர் விரைந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கின்றனர். மருத்துவமனைக்கு அழைத்து வரும்போதே உயிரிழந்தோர் எண்ணிக்கை தான் அதிகம். மருத்துவமனைக்கு வந்த வர்களுக்கு தீவிர சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டது. யார் யார் இறந்தார்கள், அதில் யார் யார் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள் என்று அதிகாரிகள் முறைப்படி அறிவித்துக் கொண்டே இருந்தனர். எல்லாமே வெளிப்படையாக உடனுக்குடன் ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்பட்டே வந்தன. ஆனால், மருத்துவர்களைப் பற்றியும் மனசாட்சி இன்றி அவதூறுகளைப் பரப்பி வருகின் றனர். (மருத்துவர்களுக்கு எதிரான இந்த வன்முறைத் தூண்டலுக்கு எதிராக சட்டம் இருக்கிறது. அதன் அடிப் படையில் தனி வழக்கு தொடுக்கப்பட வேண்டும்.)
- இறந்தவர்கள் எல்லோரும் கூட்டத்துக்கு வந்தவர்கள் தானா? எங்கிருந்தோ எடுத்து வந்து போடப்பட்ட பிணங்களா?
கூட்டத்துக்கு வந்து நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந் துள்ள நிலையில், அக் கட்சியின் பதவியில் உள்ள ஆதவ் அர்ஜூனா என்பவர், இந்த அவதூறுகளுக்கெல்லாம் உச்சம் வைத்தது போல், “இறந்தவர்கள் அந்தக் கூட்டத்திற்கு வந்தவர்களா? அல்லது முன்பே இறந்தவர்களையும், மருத்துவமனையில் இறந்தவர்களையும் இந்தப் பட்டியலில் சேர்த்துவிட்டார்களா?” என்று தனது வழக்குரைஞர் மூலம் ஊடகங்கள் மத்தியில் கேள்வி எழுப்பியிருக்கிறார். இத்தகைய அப்பட்டமான அவதூறை ஒருபோதும் எவராலும் ஏற்கவே முடியாது.
எல்லோர் மனமும் பதறி அழுதபடி, மருத்துவமனைக்கு ஓடி ஆறுதல் சொல்லும் மனிதாபிமானிகளுக்கு மத்தியில், சுடுகாட்டைத் தேடிப் போய் அரசியல் செய்ய நினைக்கும் இந்த மனப்பான்மை அருவெறுப்பானது அல்லவா?
- உடற்கூராய்வு இரவில் நடக்காதா?
உடற்கூராய்வுகள் மாலை வேளைக்குப் பிறகு நடக்காது. இங்கு எப்படி உடனுக்குடன் நடந்தது என்று ஒரு பொய்ச் செய்தி பரப்பப்பட்டது. தேவை கருதியும், முக்கியத்துவம் கருதியும் இரவு வேளையிலும் உடற் கூராய்வுகள் நடப்பது உண்டு. 1991 மே மாதம் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்ட போது, அன்று இரவே சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது என்பதைப் பலர் மறந்திருக்கக் கூடும். அவரது உடல் மட்டுமல்ல.. அவருடன் சேர்த்துக் கொலையுண்டவர்கள் பலரது உடற்கூராய்வும் அப்போதே நடைபெற்றது.
2021-ஆம் ஆண்டு நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் இரவிலும் உடற்கூராய்வுகள் நடத்த எந்தத் தடையும் இல்லை. 40க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கும் ஒரு நிகழ்வில் அவரவர் குடும்பத்தினரிடம் உரிய நேரத்தில் உடல்கள் சென்றடைய வேண்டாமா? அவர்கள் அடைந்த துன்பத்தை இன்னும் காலதாமதம் மூலம் அதிகரித்து அரசியல் செய்ய விரும்புகிறார்களா?
- அமைச்சரும், மற்றவர்களும் அழுதது நடிப்பா?
கரூர் நெரிசலில் 10 குழந்தைகள் மடிந்திருக்கிறார்கள். குழந்தைகளை அழைத்துவரக் கூடாது. கர்ப்பிணிப் பெண்கள் வரக் கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும்போது, அதை மீறி அழைத்துவந்தது குற்றம். அதையும் தாண்டி அழைத்துவந்து, நெரிசலுக்குள்ளாக்கி அவர்களைக் கொன்றது யார்? நாளெல்லாம் குழந்தைகளுடன் பழகி, கடந்த சில நாள்களுக்கு முன் அவர்களை வைத்து கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று நிகழ்ச்சி நடத்தி, அதில் அவர்கள் பேசியதையெல்லாம் கண்டு நெகிழ்ந்து, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கண்ணீர் உகுத்ததை அனைவரும் அறிவர். இரும்பு இதயம் கொண்டோரையே கலங்க வைக்கும் இந்தக் கரூர் கொடூரத்தை நேரில் கண்டால், கலங்காதார் யார்? பதவி வெறி பிண்டங்களால் வேண்டுமானால் கலங்காமல் இருக்க முடியும்.
- முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அவதூறுகள்:
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தி.மு.க.வின் மாவட்டச் செயலாளர் மட்டுமல்ல. கரூர் எம்.எல்.ஏ.வும் ஆவார். கூட்டம் நடந்த இடத்திலிருந்து ஊடகங்களின் வழியாக செய்திகள் கிடைத்ததும், அடுத்த நடவடிக்கை எடுக்கக் கடமைப்பட்டவரும் அவரே. இதே நபர்கள், அவர் அங்கு வராவிட்டால் என்ன சொல்லியிருப்பார்கள் – ஏன் வரவில்லை என்று கேட்டிருப்பார்கள். அவர் மீது அபாண்டமாகப் பழி சொல்லி, தங்களின் குற்றத்தை மறைத்துக் கொள்ளலாம் என்று கருதுவது மிக மோசமான நடத்தையாகும்.
- ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது கண் துடைப்பா?
கரூரில் நடந்த கோரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையத்தை உடனடியாக அமைத்து உத்தரவிட்டது தமிழ்நாடு அரசு. இத்தகைய நிகழ்வுகள் நடக்கும்போது, உண்மையான நிலையை அறிந்து நடவடிக்கை எடுக்க இத்தகைய ஆணையங்களை அரசு அமைத்து, அதன் அடிப்படையில் செயல்படும்.
இப்போது எடப்பாடி பழனிச்சாமி, நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தைக் குறை கூறுகிறார்; கண் துடைப்பு என்கிறார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு, அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதைக் குறித்து, இதே நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்கள் தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தவர் இதே எடப்பாடி பழனிச்சாமி தான். அப்படியென்றால், அதுவும் கண் துடைப்பு நடவடிக்கைக்குத் தான் என்கிறாரா திரு.பழனிச்சாமி?
ஆணையத்தின் முடிவின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் உறுதியளித்திருக்கிறார். அதைக் குறை சொல்வது சரியான எதிர்க்கட்சிக்கு அழகல்ல!