ராமநாதபுரம், செப்.30 கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு நடிகர் விஜய்யும், அவரது கட்சியினரும் தான் பொறுப்பேற்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் ஒரு திருமண நிகழ்வில் பங்கேற்ற ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது: “சமீபத்தில் கரூரில் திமுகவின் முப்பெரும் விழா நடைபெற்றது. அங்கு வந்த மக்கள் எந்தவிதமான சிறு அசம்பாவிதமும், காயமும் அடையாமல் அவரவர் ஊர்களுக்குத் திரும்பிச் சென்றார்கள். காரணம், வந்தவர்கள் ஒரு ஒழுங்கைக் கடைப்பிடித்தார்கள்,”
“நடிகர் அரசியலில் குதிக்கும்போது, அவரது கூட்டத்திற்கு அரசியல் மயமாக்கப்பட்ட தொண்டர்கள் வருவதில்லை; ரசிகர்கள் தான் வருகிறார்கள். கரூர் சம்பவம் மிகவும் துயரமானது. அங்கு நடந்தது பாதுகாப்புக் குறைபாட்டில் தான் என்று கூறுவது அபாண்டமானது மற்றும் காழ்ப்புணர்ச்சியுடன் கூடிய குற்றச்சாட்டு.” “காவல்துறையினரால் தான் இந்த சம்பவம் நடைபெற்றது என்று கூறுவது மிகப் பெரிய அநியாயம், அக்கிரமம்,”
“முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது உடல்நிலையையும் கூட கருதாமல், இரவோடு இரவாக கரூர் சென்று உரிய நிவாரண நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளது,” என்று குறிப்பிட்டார்.