கரூரில் நடிகர் விஜய் பேசிய கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் கைக் குழந்தைகள், பெண்கள் உட்பட திடீர் மரணம் அடைந்த கொடூரம் மனிதப் பண்பு உள்ள ஒவ்வொருவரையும் உலுக்கி எடுத்து விட்டது – உலகெங்கும் என்றுகூட சொல்லலாம் – இந்த மரணச் செய்திப் பரவி திடுக்கிட வைத்து விட்டது.
தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரையில் ஒரு நிமிடம்கூட தாமதியாமல் போர்க்கால நடவடிக்கையின் அடிப்படையில் ஆக்கரீதியான பணியில் ஈடுபட்டு விட்டது; முதலமைச்சர் விரைந்து இரவோடு இரவாக கரூர் சென்றடைகிறார். அமைச்சர்கள் ஓடோடிச் சென்று உரிய பணிகளில் ஈடுபட்டனர். அரசு மருத்துவமனைகளுக்கு மட்டுமல்ல, தனியார் மருத்துவமனைகளுக்கும் கட்டளைகள் பறந்தன.
செய்தியாளர்களை சந்தித்தபோதுகூட மாண்புமிகு முதலமைச்சர் எடுத்த எடுப்பிலேயே கரூரில் நடந்த துயர நிகழ்வை அரசியல் ஆக்காமல் தேவையானவற்றைப் பற்றிக் கேளுங்கள் என்று சொன்னது – எவ்வளவுப் பெருந் தன்மை – மனிதநேய உணர்வு!
ஆனால் அதே நேரத்தில் பல அரசியல் கட்சிகள் இதிலும் அரசியல் ஆதாயம் தேடும் கண்ணோட்டத்தோடு ஆளும் அரசின்மீது அபாண்டமான குற்றச்சாட்டுக் கணைகளை ஏவுவது – மனம் இருக்கும் இடத்தில் மரம் முளைத்து விட்டதோ! என்று எண்ணத் தோன்றுகிறது.
ஒரு முதலமைச்சர் தகவல் தெரிந்த அக்கணமே ஆக வேண்டிய அத்தனை உதவிகளையும் மேற்கொள்ளச் செய்து, பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கப் பறந்து செல்லுகிறார்.
கரூர் துயர நிகழ்வுக்குக் காரணமாக இருந்த புதிய கட்சி ஒன்றின் தலைவர், அரசியலில் காலடி எடுத்து வைத்தவுடனேயே ‘முதலமைச்சராக வேண்டும்’ என்று துடிக்கிறார் – என்ன செய்தார்? கரூரிலிருந்து சென்னைக்குத் தன் பண்ணை வீட்டிற்குத் திரும்புகிறார் – விரைகிறார்.
இந்த உண்மைகள் எல்லாம் தெரிந்திருந்தும் அரசின்மீது அபாண்ட பழி சுமத்துவது நியாயம்தானா? அரசியல் இலாபம் தேடத் துடிப்பது அறச்செயல்தானா?
த.வெ.க. பிரச்சாரத்துக்காக விண்ணப்பித்த மூன்று இடங்களில், மிகப் பெரிய இடத்தைத் தேர்வு செய்து காவல்துறை அனுமதி கொடுத்த நிலையில், மக்கள் அதிகம் கூடும் என்று தெரிந்திருந்தும், சிறிய இடத்தைக் கொடுத்தது ஏன்? காவல்துறையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் சரியில்லை – போதுமான கட்டுப்பாடு (கன்ட்ரோல்) இல்லை – என்றெல்லாம் வாய்ப் புளித்ததோ, மாங்காய்ப் புளித்ததோ என்ற தோரணையில், மனம் போன போக்கில் எல்லாம் சேற்றை வாரி இறைக்கலாமா?
மின் விளக்குக் கம்பங்களிலும், மரக்கிளைகளிலும் ரசிகர்கள் அளவுக்கு அதிகமாக ஏறுவது, தொற்றுவது எல்லாம் யாரைச் சார்ந்தது?
இலேசான தடியடிப் பிரயோகம் செய்ததற்கே குறை கூறுபவர்கள், சற்றுக் கடுமையாகக் காவல்துறையினர் நடந்து கொண்டிருந்தால், எப்படி எல்லாம் தூற்றுவார்கள்… என்பதை எண்ணிப் பார்த்தால் இப்படியும் ஓர் அரசியலா என்று வேதனைப்பட வேண்டியுள்ளது.
நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் அடிப்படையில் காவல்துறை நடந்து கொண்டுள்ளது. ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், அதற்குக் கட்சியும், அதன் தலைவரும் தான் பொறுப்பு என்று நீதிமன்றம் எச்சரித்ததே – அதைப்பற்றி யாரும் வாயைத் திறக்காதது ஏன்?
ஒரு நபர் ஆணையத்தை உடனடியாக முதலமைச்சர் அறிவித்து விட்டார்; இந்நிலையில் சி.பி.அய். விசாரணை தேவை என்று அரசியல் கட்சித் தலைவர் கூறுகிறார். ஏதோ தானும் இருக்கின்றேன் என்று காட்டிக் கொள்ள இதுதான் சந்தர்ப்பமா?
கட்சிக்காரர்களை அறிவுறுத்தி, உடனே பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்லுங்கள் – வேண்டிய உதவிகளைச் செய்யுங்கள் – இதில் அரசியல் தேவையில்லை என்று எந்த எதிர்க்கட்சி வரிசையில் உள்ள தலைவர்கள் சொன்னார்கள்?
சில ஊடகங்கள் தாங்கள் சார்ந்த கட்சியின் அடிப்படையில், ஆளும் அரசுக்கு எதிராக உள்ளவர்களைத் தேடிப் பார்த்து, பேட்டி வாங்கி ஒலிபரப்பியதையும் பார்க்க முடிந்தது.
ஊடகங்களுக்குத் தர்ம நியாயம் என்ற ஒன்று கிடையவே கிடையாதா?
தமிழ்நாடு அரசு மூவர்மீது வழக்குப் பதிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது; அதன் முடிவு என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும்; இனி இதுபோன்ற அவலங்கள் நடைபெறக் கூடாது; நடைபெறுவதற்கு இடம் அளிக்கவும் கூடாது.
கட்சியை ஆரம்பிப்பது மட்டும் போதாது; முதலில் தலைவர்களுக்குக் கட்டுப்பாடு அவசியம்; குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும்.
கட்சிப் பொறுப்பாளர்களுக்கு உரிய வகையில் முன்கூட்டியே ஆற்ற வேண்டிய பணிகளை வரையறுக்கச் செய்ய வேண்டும்.
தொண்டர் படையை ஏற்படுத்த வேண்டும்.
அசம்பாவிதம் நடந்தால் தானே வந்து பொறுப்பு ஏற்க வேண்டும். அதுதான் ஆரோக்கிய அரசியலுக்கு அடையாளம்!