மருத்துவர் கோ.சா.குமார்
குழந்தைகள் நல மருத்துவர்,
மருத்துவ சட்ட ஆலோசகர்,
இந்திய மருத்துவச் சங்கம், சென்னை
ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் குழந்தைகளை நல்ல அறிவுள்ள, அன்புள்,ள திறமையான, அழகான, ஆரோக்கிய மான குழந்தையாய் வளர்க்க வேண்டும் என்ற நோக்கம் இருப்பது தெரிந்ததே. ஆனால் முழுமை யாக நடைபெற கடைப்பிடிக்க வேண்டிய சில சிறிய கடமைகளையும் தகவல்களையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் ஒரு குழந்தை பிறந்தவுடன் முதல் அய்ந்து வயதிலேயே அந்தக் குழந்தையின் மூளை வளர்ச்சி பெரும்பாலும் நிறைவடைந்து விடுகிறது. இன்றைய காலகட்டத்தில் எதிலும் நாம் போட்டி போட்டுக் கொண்டு வாழ்க்கையை (COMPETITIVE WORLD)கடைப்பிடித்தால் தான் பெற்றோர் ஆசைப்படும்படி குழந்தைகளை முழு நிறைவாக வளர்க்க முடியும்.
பெரும்பாலும் இப்பொழுதெல்லாம் அரசு மருத்துவமனைகளிலேயே தனியார் மருத்துவமனைக்கு நிகரான பாதுகாப்பான பிரசவங்களும் மற்றும் குழந்தை பராமரிப்பும் நல்ல முறையில் நடக்கின்றன. ஒரு குழந்தை பிறந்தவுடன் அதனை ஒரு குழந்தை நல மருத்துவர் முழுமையாக பரிசோதித்து அதன் எடை, நீளம், தலை சுற்றளவு, மற்றும் குழந்தையின் செவித்திறன் கோளாறுகள் ஏதாவது இருக்கிறதா போன்ற அடிப்படை குறிப்புகளை கவனித்த பிற்பாடு குழந்தை தாயிடம் தரப்படுகிறது. குழந்தைகளுக்கு ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்ற அறிவுரையும் அதன் அவசியமும் வலியுறுத்தி குழந்தைகளை நல்ல முறையில் பராமரிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
தாய்ப்பால் கொடுப்பதின் அவசியத்தை மருத்துவத்துறையும் மருத்துவர்களும் மருத்துவ சுகாதார செவிலியர்கள் முழுவதும் கவனம் செலுத்தி அதன் அவசியத்தை வற்புறுத்தும் காரணத்தினாலேயே இப்பொழுதெல்லாம் குழந்தைகளுக்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இல்லாமல் நல்ல ஆரோக்கியமாக அறிவு வளர்ச்சியுடன் குழந்தைகள் இருக்கின்றன.
குழந்தைகள் பிறந்ததிலிருந்து வளரும் வரை இந்திய குழந்தைகள் நல மருத்துவ சங்கம் அரசுக்கு பரிந்துரைத்த அட்டவணைப்படி தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பு ஊசியால் தடுக்க முடிந்த, நோய்களையும் கிருமித் தொற்றுகளையும் மற்றும் அனைத்து வியாதிகளையும் தடுக்க வேண்டும் ஆரம்பத்தில் தடுக்க தவறினால் பிற்காலத்தில் உடல் ஊனம் முதற்கொண்டு மூளை காய்ச்சல் வரை ஏற்படும் அபாயங்கள் உள்ளன. குழந்தை பிறந்தது முதல் 14 வயது ஆகும் வரை தடுப்பூசி அட்டவணையில் உள்ளது போல காலத்திற் கேற்ப முறையான பருவத்தில், சரியான நேரம், சரியான இடத்தில், தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறையும் தடுப்பூசி போடும் பொழுது அந்தப் போடும் காலத்திற்கேற்ற உங்கள் குழந்தையின் வளர்ச்சி மற்றும் எடை உள்ளதா என்று சரி பார்த்துக் கொள்வது. குழந்தையை உடல் வளர்ச்சிக்கும் மூளை வளர்ச்சிக்கும் ஏற்ப ஒரு பக்குவமான முறையில் வளர்ப்பதற்கு தூண்டுகோலாகும்.
காய்ச்சல்: ஒவ்வொரு முறை தடுப்பூசி போடும் பொழுதும் அந்தப் பருவத்திற்கு ஏற்றவாறு குழந்தை முகம் பார்த்து சிரிக்கிறதா, கண் சிமிட்டுகிறதா, சத்தம் வரும் பக்கம் தலையை திருப்புகிறதா, தலை நிமிர்வது உட்காருவது, நிற்பது, ஒரு பொருளை எடுக்க கையை நீட்டுவது, போன்ற இளம்வளர் குறிப்புகளை கவனித்து தாய்மார்கள் பார்க்க வேண்டும். நமது பெற்றோர்களுக்கு வரும் மிகவும் சந்தேகம் என்னவென்றால் குழந்தைகளுக்கு சளி இருக்கும் பொழுது, காய்ச்சல் இருக்கும் பொழுது தடுப்பூசி தர வேண்டுமா இல்லையா என்பதுதான். லேசான சளியும் இருமலும் இருப்பது ஒரு தடையல்ல. பெரும்பாலும் தடுப்பு ஊசி போட்டால் இரண்டு அல்லது மூன்று நாட்கள் குழந்தைகள் தாங்க முடியாமலோ அல்லது காய்ச்சலாலோ அழக்கூடும். எப்பொழுது தடுப்பூசி போட்டாலும் தடுப்பூசி கொடுத்த சில மணி நேரத்திற்கு குழந்தையை வெளியே எடுத்து செல்லாமல் கொடுத்த இடத்தி லேயே சிறிது நேரம் அமர்ந்திருக்க வேண்டும். மிக அரிதாக சில குழந்தைகளுக்கு ஒவ்வாமை(ALLERGY) ஏற்பட வாய்ப்பு உண்டு. அப்படி ஏற்படும் அலர்ஜி போன்றவைகள் மிக சுலபமாக மருந்து கொடுத்து சரி செய்து விடலாம். தடுப்பூசி சம்பந்தமாக பெற்றோர்களுக்கு வரும் சில பொதுவான சந்தேகங்களுக்கும் குழப்பங்களுக்கும் என்ன பதில் என்பதை சற்று பார்ப்போம்.
வீக்கம்: தடுப்பு ஊசி போடும் தேதிகளில் ஒன்று இரண்டு நாட்கள் முன்கூட்டியோ அல்லது பின்கூட்டியோ போடுவதால் தவறு ஒன்றும் இல்லை. தவிர்க்க முடியாத காரணங்களால் ஒரு மாதம் தடுப்பு ஊசி போட தவறிவிட்டால் மீண்டும் அடுத்த முறை அதை சேர்த்து போட்டுக் கொள்ளலாம் இதற்கு குழந்தை மருத்துவரின் ஆலோசனை தேவை. சில சமயங்களில் தடுப்பூசி போடும் இடத்தில் சிறிய வீக்கமோ அல்லது கட்டியோ இருப்பது போல் தெரியும். பெரும்பாலும் வீக்கமாக இருப்பது தானாகவே சரியாகிவிடும் அதற்கென்று எந்தவிதமான களிம்புகள் தடவு வதோ அல்லது ஒத் தடம் கொடுப்பதோ தேவையில்லை.
இந்த வீக்கமும் கட்டியும் சாதாரண பாராசிட்டமால் மருந்து கொடுத்தாலே ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் கரைந்து விடும். பனிக்கட்டி ஒத்தடம் கொடுப்பது சில சமயங்களில் வலியை குறைக்க உதவுமே ஒழிய அதனால் எந்த பெரிய நிவாரணமும் கிடையாது. தடுப்பூசி மருந்தை போடுபவர் மருந்தை பெட்டியில் இருந்து எடுத்து அதை அப்படியே உறையும் தன்மையில் உபயோகப்படுதாமல் ஒரு சில நிமிடங்கள் room temperatureஇல் வைத்து இருந்துவிட்டு மருந்தை செலுத்துவதால் இந்த கட்டி மாதிரி வருவது தவிர்க்கப்படலாம். உறையும் தன்மையிலேயே தடுப்பு ஊசி செலுத்துவதனால் மருந்துகள் சதைக்கு உள்ளே சென்ற பிற்பாடு கட்டிக் கொள்கிறது இதனாலேயே அந்த இடத்தில் ஒரு சிறிய கட்டிப் போன்ற ஒரு தன்மை உருவாகிறது.
அட்டவணை: இது நாள் ஆக ஆக தானாகவே கரைந்து விடும் மிகவும் அரிதாக ஒரு சிலருக்கு அந்த இடத்தில் சிறிய கட்டியானது SEPTIC ஆகி அது சீழ் பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. அதுபோன்ற சமயங்களில் குழந்தை மருத்துவரின் உதவியை நாடி அதற்கு வைத்தியம் செய்து கொள்வதே சாலச் சிறந்தது ஒவ்வொரு முறையும் தடுப்பூசி போடும்போது தேதி மற்றும் எந்த BRAND என்ற விவரங்களையும் உங்கள் தடுப்பு ஊசி அட்டவணையில் தவறாமல் குறித்து வைக்கவும். நல்ல பண்புள்ள குழந்தைகளாக வளர்க்க உங்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுங்கள். குழந்தைகளுக்கு விட்டுக் கொடுக்கும் தன்மை, எதிலும் எரிச்சல் படாமல் இருத்தல், எதற்கெடுத்தாலும் பிடிவாதம் படாமல் இருத்தல், உதவும் மனப்பான்மை, நன்றி சொல்லும் பழக்கம், ஆரம்பத்திலிருந்து பெரியவர்களிடம் மரியாதையாக பக்குவமாக நடந்து கொள்ளும் விதம். சிறு வயதில் இருந்தே குழந்தைகளை ஊக்கப்படுத்தி வளர்க்க கற்றுக்கொள்ளுங்கள். குறை சொல்லிப் பழகாமல், பக்கத்து வீட்டு குழந்தையோடு ஒப்பிட்டுப் பேசாமல், நேர்மறையான எண்ணங்களை குழந்தை மனதில் விதைக்கும் பழக்கத்தை பழக்கப்படுத்துங்கள்.
எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே அது நல்லவராவதும் தீயவராவதும் பெற்றோர் வளர்பினிலே.