கருஞ்சிறுத்தை
எந்த இளைய சமூகத்தின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்று போராடுகிறோமோ…
யாருடைய மருத்துவக் கனவுகள் பறிக்கப்படக் கூடாது என்று களத்தில் நிற்கிறோமோ…
யாருக்கு சமூகநீதி மறுக்கப்படக் கூடாது என்று எல்லா மட்டத்திலும் நின்று குரல் கொடுக்கிறோமோ…
யாருடைய வாழ்க்கைக்கு வழிசெய்யும் வேலை வாய்ப்புகளுக்காக, அதிகார உயர்வுக்காக ஒன்றிய அரசையும், ஆளும் வர்க்கத்தையும் எதிர்த்து நிற்கிறோமோ…
அந்தச் சமூகத்தின் ஒரு பகுதி தான் இன்று கொஞ்சமும் புரிதல் இல்லாமல் கும்பல் மனப்பான்மை என்னும் நெரிசலில் சிக்கியிருக்கிறது!
கனத்த மனதோடு சொல்கிறோம். இறந்த 41 உயிர்களை மீட்க முடியாது தான்.
ஆனால், இன்னும் இருக்கிற இலட்சக்கணக்கான இளைஞர்களை மீட்க வேண்டிய கடமை நமக்கிருக்கிறது.
‘‘கல்வி அழிந்தால் என்ன? நடிகரைப் பார்த்துச் ‘செல்ஃபி’ எடுத்தால் போதும்’’ என்று அவர் வாகனத்தைத் துரத்திச் சென்று வழுக்கி விழும் கூட்டத்தை நோக்கித் தான் நாம் பேச வேண்டும்!
என்ன உண்மையைப் பேசினாலும், கேள்வி எழுப்பினாலும் ‘பூமர்’ என்று சொல்லிக் கிண்டலடிக்கப் பழகிவிட்ட ‘இன்ஸ்டா’ சமூகத்திடம் தான் பேச வேண்டும்! மீண்டும் மீண்டும் பேச வேண்டும்!
யாரோ பணம் போட்டு, யாரோ படம் எடுத்து, யார் யாரோ சம்பாதிக்கப் போகும் ஒற்றைச் சினிமாவுக்காக ‘இவர் ரசிகர், அவர் ரசிகர்’ என்று ‘கட் அவுட்டு’க்குப் பால் ஊற்றுவதில் தொடங்கி, ‘டுவிட்டரில்’ சண்டை போடுவது வரை…
யாரென்று குறிப்பாகச் சொல்லாமல், பொத்தாம் பொதுவாக “என்னை அழிக்கப் பார்க்கிறார்கள், நான் வந்தே தீருவேன்” என்று ஆடியோ ரிலீஸ் விழாக்களில், காற்றில் கை உயர்த்திச் சவால் விடும் நடிகர்களின் பொய்க் கோபத்திற்கும், அழுகைக்கும் காரணம் – ‘அவரா, இவரா’ என்று ஆர்வம் காட்டுவதிலிருந்து, அதற்காக அணி பிரிந்து ரீல்ஸ் போர் நடத்துவது வரை…
போலிச் செய்கைகளால், பொய்யான சிரிப்புகளால், மிரட்டல் வசனங்களால் ‘நாயக’ உருவம் பெற்றுவிட்ட – தலைமைப் பண்பல்ல… அடிப்படை மனிதப் பண்புகள் கூட அற்றவர்களை,
எதற்கு ஆதரிக்கிறோம், எதற்கு ‘அவர்’ வரவேண்டும் என்றே தெரியாமல் கொண்டாடும் கூட்டத்திடம் தான் பேச வேண்டும்.
அவர்கள் யாரோ அல்ல! எங்கேயோ கை காட்டிவிட்டுப் போக முடியாது! அவர்கள் நம் வீட்டுப் பிள்ளைகள். நம் நாட்டின் எதிர்காலங்கள்!
அவர்களிடம் தான் பேச வேண்டும்.
பேசியே ஆக வேண்டும்.
முற்போக்கு இயக்கங்களை, கருத்துகளை, வாழ்வின் வெளிச்சங்களை அண்ட விடாமல், பிள்ளைகளை அடைகாத்து அடைகாத்து, செல்போன் கூண்டுக்குள் அடைத்து, மொத்தமாக வல்லூறுகளுக்கு இரையாகக் கொடுக்கின்ற பெற்றோர்களிடம் பேச வேண்டும்!
சினிமாக்காரர்களைத் தூக்கிக் கொண்டாடி, தமிழ்ச் சமூகத்தைச் சிதைத்திருக்கும் அத்தனை தொலைக்காட்சி, யுடியூப், இன்ஸ்டாகிராம் ஊடகங்கள் உள்ளிட்ட எல்லோரிடமும் தான் பேச வேண்டும்!
நூறு ஆண்டுகள் போராடிப் பெற்ற கல்வியை, சமூகநீதியை, ஏற்றங்களை திரையரங்க இருட்டுக்குள் தொலைத்துவிடத் தயாராக இருக்கும் இளைய சமூகத்திடம் தான் பேச வேண்டும்!
இப்படி தமிழ்ச் சமூகத்தை ஆக்கிவிடத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலின் சதியை எடுத்துச் சொல்லித்தான் பேச வேண்டும்!
‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்று இளைய சமூகத்தின் ஒரு பகுதியைக் கொண்டாடி மகிழ்ந்தோமே, அதன் இன்னொரு பகுதியையும் ஜாதி, மத, பக்தி, சினிமா உள்ளிட்ட ‘எல்லா போதை’களிலிமிருந்து மீட்கவேண்டிய பொறுப்பு நமது!
முட்டையிட்ட கோழிக்குத் தான் வலி தெரியும்!
“இந்த மக்களுக்காகப் பலிகடா ஆகிறேன்” என்று தன்னைப் பலிகொடுத்து இயக்கம் நடத்திய தலைவரைப் பின்பற்றி களத்தில் நின்றவர்கள்…
“எத்தனை உடல்வலி என்றாலும் கடைசித் தொண்டனாக நிற்கிறேன்” என்று போராடும் 92 வயது இளைஞரின் பின்னால் அணிவகுத்து நிற்பவர்கள்…
கடுங்காவல் சிறையென்றாலும், மிசா கொடுமைகள் என்றாலும்…
இனம் காக்க… மொழி காக்க… சமூகநீதி காக்க…
எந்த விளம்பரமும் இல்லாமல்,
இந்த இனத்தின் மூச்சுக் காற்றைப் போல இயங்கிக் கொண்டிருக்கும் கருஞ்சட்டை வீரர்களுக்கு, பாலின பேதமற்ற பெரியார் தொண்டர்களுக்குத் தான்…
இளைய சமூகத்தைச் சிதைக்கும் நோயின் வலியும் தெரியும்!
நோயைத் தீர்க்கும் மருந்து – பெரியாரின் சுயமரியாதை தான்!
அதை இன்னும் தீவிரமாகச் செலுத்த வேண்டிய அவசியத்தை நாளும் உணர்கிறோம்!
வேகமாகக் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்தை மீண்டும் உணர்கிறோம்!
மறைமலை நகர் மாநாடு – நூற்றாண்டுப் பெருமை பேசுவதற்கல்ல… இளைய சமூகத்தின் சுயமரியாதை மீட்புக்குத் தான்!
நடிகரைப் பார்க்கத் தான் இளைஞர்கள் திரள்கி றார்கள் என்ற மாயையைத் தகர்த்தெறிவோம்!
மானத்தை மீட்க வருகிறோம் என்று கட்டுப்பாடுமிக்க கருப்பு உடைச் சேனையாக அணிதிரள்வீர்!