திருப்பதி, செப்.29 திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் பிரம்மோற்சவ நிகழ்ச்சியில், மகாராட்டிர மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட பெண்கள் குழுவினர் டோல் (பெரிய டிரம்ஸ்/மேளம்) எனப்படும் வாத்தியத்தை இசைத்தது பெரும் குற்றமாம்! இது திருப்பதி கோவிலின் கலாச்சாரத்திற்கு எதிரானது என்று கூறி, ஹிந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஒவ்வோர் ஆண்டும் புரட்டாசி மாதத்தில் நடைபெறும் ஒன்பது நாள் நிகழ்ச்சியின்போது, இசை நிகழ்ச்சிகள், கோலாட்டம், பரத நாட்டி யம் போன்ற கலை நிகழ்ச்சிகள் பாரம்பரியமாக நடைபெறுவது வழக்கம்.
‘டோல்’ இசைக்குழு
இந்நிலையில், இந்த ஆண்டு மராட்டிய மாநிலத்தின் மும்பை மற்றும் புனே நகரங்களில் பெண்கள் சேர்ந்து அமைத்த புகழ்பெற்ற ‘டோல்’ இசைக்குழுவினர், பெரிய மேளங்களை (டிரம்ஸ்) இசைக்க அழைக்கப்பட்டனர். இந்தக் குழுவினர் விழா காலங்களில் முரசு போன்ற வாத்தியங்களை இசைப்பதில் புகழ்பெற்றவர்கள் என்பதுடன், பிரதமர் நரேந்திர மோடியின் சிங்கப்பூர் மற்றும் அயர்லாந்து பயணத்தின் போதும் அவரை வரவேற்று இசைக்க, அந்த நாட்டு இந்தியத் தூதரகம் இவர்களை வரவழைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்கள் டோல் வாத்தியம் இசைத்ததற்குப் பலத்த எதிர்ப்புத் தெரிவித்துள்ள ஹிந்து அமைப்புகள், இது திருப்பதி கோவில் மரபுகள் மற்றும் கலாச்சாரத்திற்கு எதிரானது என்று குற்றம் சாட்டியுள்ளன.
கலாச்சாரத்திற்கு முற்றிலும் எதிரானதாம்!
‘‘பெண்கள் கோலாட்டம் ஆடவும், பரத நாட்டியம் ஆடவும், பக்திப் பாடல்கள் பாடவுமே கோவில் கலாச்சாரத்தில் இடமுண்டு.’’
‘‘வேறு மாநிலத்தில் இருந்து பெண்களை வரவழைத்துப் பெரிய மேளம் (டிரம்ஸ்) போன்ற வாத்தியங்களை இசைக்க வைப்பது, திருப்பதி கோவிலின் பாரம்பரிய கலாச்சா ரத்திற்கு முற்றிலும் எதிரானது.’’
‘‘இது பக்தர்களின் மத உணர்வுகளைச் சிதைப்பதாகும்,’’ என்றும் குற்றம்சாட்டி, திருமலை தேவஸ்தானம் இதற்கு எப்படி அனுமதி வழங்கியது என்றும் கேள்வி எழுப்பி யுள்ளனர்.
பாரம்பரியம்பற்றிப் பேசுவோர், ஏழுமலையான் கோவில் கர்ப்ப கிரகத்தில் குளிர்சாதன வசதி செய்திருப்பதற்கு என்ன பதில் சொல்வார்கள்?