திருச்சி, செப்.28 திருச்சி ‘புனித சிலுவை’ கல்லூரி, பிக் லேர்ன் (Big Learn) நிறுவனம் மற்றும் கன்மலை தொண்டு நிறுவனத்தின் சார்பில் ஆசிரியர் தின விழா ‘புனித சிலுவை’ கல்லூரியில் நேற்று (27.9.2025) மாலை 5 மணியளவில் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருதும், சிறந்த ஊக்கமளிப்பவருக்கான விருதும் வழங்கப்பட்டது.
இவ்விருது வழங்கும் நிகழ்வில் பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை அவர்களுக்கு 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஊக்கமளிப்பவருக்கான விருது (Best Inspiring Person 2025) வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இந்திய ஒன்றிய அரசின் மேனாள் உள் துறை மற்றும் நிதி அமைச்சருமான ப. சிதம்பரம் அவர்கள் முனைவர் இரா. செந்தாமரை அவர்களுக்கு விருதினையும் பாராட்டுச் சான்றிதழினையும் வழங்கி சிறப்பித்தார். மருந்தியல் துறையில் கடந்த 36 ஆண்டுகளுக்கும் மேலாக பல மாணவர்களை ஊக்கப்படுத்தி சாதனைமிக்க இளம் மருந்தாளுநர்களை தொடர்ந்து உருவாக்கி வருவதுடன் கல்வி, ஆராய்ச்சி மற்றும் சமுதாயப் பணிகளில் சிறப்பாக செயல்பட்டமைக்காக முனைவர் இரா. செந்தாமரை அவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
இவ்விழாவில் திருச்சி ‘புனித சிலுவை’ கல்லூரியின் முதல்வர் முனைவர் பி. ராஜகுமாரி மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கலைப்புல முதன்மையரும் மகளிரியல் துறை இயக்குநருமான முனைவர் என். முருகேஸ்வரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தனர். மேலும் பிக் லேர்ன் (Big Learn) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே. சதீஷ்குமார் மற்றும் கன்மலை தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் ஜே வில்பர்ட் எடிசன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் முன்னிலை வகித்து சிறப்பித்ததுடன் இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்திருந்தனர்.
முனைவர் இரா. செந்தாமரை அனைத்திந்திய மருந்தியல் கூட்டமைப்பின் தமிழ்நாடு பிரிவின் சிறந்த ஆசிரியர் விருது, சிறந்த நிர்வாகத்திற்கான தங்கத்தாரகை விருது, தற்பொழுது சிறந்த ஊக்கமளிப்பவருக்கான விருது என மூன்று விருதுகளை 2025 ஆம் ஆண்டில் மட்டும் பெற்று பெருமை சேர்த்துள்ளார்.
இந்நிகழ்வில் திருச்சி மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் பள்ளி ஆசிரியர்கள், கலை, அறிவியல், சட்டம், பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட கல்லூரிகளின் பேராசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருதும், பல்துறையைச் சார்ந்த 4 முதல்வர்களுக்கு சிறந்த ஊக்கமளிப்பவருக்கான விருதும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இந்நிகழ்ச்சியில் ‘புனித சிலுவை’ கல்லூரியின் மேனாள் மாணவரும் திருச்சி மாநகராட்சியின் மேனாள் மேயருமான மறைந்த சுஜாதா அவர்களின் உருவப்படம் மேனாள் அமைச்சர் ப. சிதம்பரம் திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.