சமூக,அரசியல் சீர்திருத்த முன்னோடி ‘நடிகவேள் எம்.ஆர்.ராதா’

‘இந்த நாட்டை சீரழித்ததில் பெரும் பங்கு சினிமாவுடையதுதான்.. கூத்தாடிக்கு மன்றம் வைக்காதே.. எங்களை நடிகர்களாக மட்டுமே பாருங்கள். நாங்கள் அழுவதும், சிரிப்பதும், நல்லது செய்வதும், கெடுப்பதும் நாட்டுக்காக அல்ல; காசுக்காக’.

-சினிமாவின் புகழ் வெளிச்சத்தில் இருந்தபடியே, சினிமா துறையைப் பற்றி இப்படி பேச அசாத்திய துணிவு வேண்டும். அது இயற்கையாகவே ‘நடிகவேள்’ எம்.ஆர்.ராதாவிடம் இருந்தது. சீர்திருத்தம் எங்கு தேவைப்பட்டாலும், அதற்கு தன்னுடைய குரலைப் பதிவு செய்தவர், எம்.ஆர்.ராதா.

மெட்ராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன் என்பதின் சுருக்கமே, எம்.ஆர்.ராதா. 1907ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி சென்னையில் பிறந்த இவர், சிறு வயதில் திருச்சியில் வளர்ந்தார். இவரது தந்தை ராஜகோபாலன் ரஷ்யாவில் ராணுவ வீரராக பணியாற்றியபோது இறந்து போனார். எம்.ஆர்.ராதாவுக்கு, பள்ளிப்படிப்பு சரிப்படவில்லை. அதனால் தாயாருடன் அடிக்கடி சண்டை மூண்டது.

பிற இதழிலிருந்து...

ஒரு கட்டத்தில் கோபித்துக் கொண்டு சென்னைக்கு வந்துவிட்டார். அப்போது அவருக்கு வயது 7. சென்னை சென்டிரல் யில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழில் செய்தார். சிறு வயதில் மிகுந்த சுறுசுறுப்புடன் பணியாற்றிய அவரை, ஆலந்தூர் பாய்ஸ் நாடகக் கம்பெனியின் உரிமையாளர் ரங்கநாதன், தன்னுடன் நாடகத்தில் நடிக்க அழைத்துச்சென்றார்.

எம்.ஆர்.ராதாவின் குடும்பம்

நடிகர் எம்.ஆர்.ராதா, சமூக சீர்திருத்த நாடகங்களை நடத்தும்போது, அங்கே அவருடன் நடித்த, தன் கருத்துடன் ஒத்த மனநிலை கொண்ட பிரேமாவதி என்பவரை காதலித்து மணந்து கொண்டார். அவர்களுக்கு தமிழரசன் என்ற மகன் உண்டு. அவர்கள் இருவரும் அம்மை நோய் பாதிப்பால் இறந்து விட்டனர். மேலும் சரஸ்வதி, தனலட்சுமி, ஜெயமால் ஆகியோரையும் எம்.ஆர்.ராதா மணந்தார்.
இதில் சரஸ்வதியும், தனலட்சுமியும் அக்காள், தங்கைகள். இறுதியாக இலங்கை சென்றபோது கீதா என்பவரை எம்.ஆர்.ராதா மணந்தார். அவர் சமீபத்தில் காலமானார். இந்த மனைவிகளின் வாயிலாக எம்.ஆர்.ராதாவுக்கு, எம்.ஆர்.ஆர்.வாசு, ராசியா, ராணி, ராதாரவி, செல்வராணி, எம்.ஆர்.தமிழரசு, ஞானவள்ளி, ரதிகலா, ராதிகா, ராஜூ, மோகன், நிரோஷா என 12 பிள்ளைகள் உண்டு.

எம்.ஆர்.ராதா நாடகத்தில் நடிக்கத் தொடங்கும் போது, அவருக்கு வயது 10. அதன்பிறகு மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி உள்பட பல்வேறு கம்பெனிகளில் பணியாற்றினார். சொந்தமாக நாடகக் கம்பெனி இருந்தால், தான் சொல்ல வந்த கருத்தை எந்த இடையூறும் இன்றி சொல்லலாம் என்பதற்காக, சொந்தமாக ‘திராவிட புதுமலர்ச்சி நாடகக் கம்பெனி’ என்பதை தொடங்கினார்.

அதன் மூலம் ‘ரத்தக்கண்ணீர்’, ‘தூக்கு மேடை’, ‘லட்சுமிகாந்தன்’, ‘விதவையின் கண்ணீர்’, ‘தசாவதாரம்’, ‘போர்வாள்’ உள்பட பல நாடகங்களை நடத்தினார். அவற்றில் மிகவும் புகழ்பெற்றது, ‘ரத்தக்கண்ணீர்’, இந்த நாடகம் சுமார் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட முறை மேடை ஏற்றப்பட்டது.

1937ஆம் ஆண்டு தன்னுடைய 20ஆவது வயதில் ‘ராஜசேகரன்’ என்ற படத்தில் வில்லனாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து ‘சந்தன தேவன்’, ‘பம்பாய் மெயில்’, ‘சத்ய வாணி’, சோகா மேளர்’ போன்ற படங்களில் நடித்தார். சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் உரிமையாளருடன் ஏற்பட்ட பிரச்சினையால் சினிமாவை விட்டு விலகி, நாடகத்தில் முழுமையாக ஈடுபட்டார்.

12 ஆண்டுகள் கழித்து, 1954ஆம் ஆண்டு ‘ரத்தக்கண்ணீர்’ நாடகத்தை படமாக்கியதன் மூலம் மீண்டும் சினிமாவிற்குள் நுழைந்தார். அந்தப் படத்தில் எம்.ஆர்.ராதாவின் நடிப்பும், மூடநம்பிக்கைக்கு எதிரான வசனங்களும் மக்களை பெருமளவில் ஈர்த்தன. படம் பிரமாண்ட வெற்றியைப் பெற்றது.

எதிர்ப்பை சந்தித்த நாடகங்கள்

தன்னுடைய நாடக வாழ்க்கையில் போராட்டம், கிளர்ச்சி, தடை உத்தரவு, சிறைச்சாலை என்று சந்தித்தவர் எம்.ஆர். ராதா. சமூக சீர்திருத்தத்திற்கும், நாத்திக பிரசாரத்திற்கும் நடிப்புக் கலையை முதன் முதலில் பயன்படுத்தியவர், எம்.ஆர்.ராதா என்று சொல்லப்படுகிறது. அவரது நாடகங்களில் ‘விதவையின் கண்ணீர்’, ‘ராமாயணம்’ போன்றவை பெரும் புயலைக் கிளப்பியவை.
அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது எம்.ஆர்.ராதா, தன்னுடைய நாடக மேடையின் இரண்டு பக்கமும் நாடக எழுத்துக்கு ஆதாரமாக அமைந்த சமஸ்கிருத மொழி பெயர்ப்பு புத்தகங்களை அடுக்கி வைத்தார்.
அதோடு தான் நாடகம் நடத்தும் அரங்கத்தின் முன்பாக ஒரு விளம்பர பலகையை வைத்தார். அதில், “என் ராமாயண நாடகத்தால் மனம் புண்படும் என்று கருதுபவர்கள் எவராக இருந்தாலும், அவர்கள் நாடகத்தை பார்க்க கண்டிப்பாக வரவேண்டாம். அவர்கள் காசும் எனக்குத் தேவையில்லை. மீறி வந்து பார்த்தால், அவர்கள் மனம் புண்பட்டால், அதற்கு நான் ஜவாப்தாரியல்ல” என்று எழுதப்பட்டிருந்தது.

தொடர்ச்சியாக பல படங்களில் நல்ல நல்ல கதாபாத்திரங்களில் அவர் நடித்தார். அப்போது புகழ் பெற்று விளங்கி, எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களில் அவர் பெரும்பாலும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கத் தவறவில்லை. 125 படங்கள் நடித்திருந்தாலும், படத்தில் நடிப்பதை விடவும், நாடகத்தில் நடிப்பதையே விரும்பினார். திராவிட கொள்கையின் மீது பிடிப்பு கொண்ட அவர், சமூக, அரசியல், மூடநம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துக்களை தன்னுடைய வசனங்களின் வாயிலாக வெளிப்படுத்திக்கொண்டே இருந்தார்.

படிப்பறிவே இல்லாத எம்.ஆர்.ராதா, படித்தது எல்லாம் அனுபவப் பாடம்தான். அதன் வாயிலாக அவர் நாடகத்திலும், சினிமாவிலும் பேசிய பல வசனங்கள் உதட்டில் இருந்து வெளிப்பட்டவை அல்ல. வாழ்வின் பகுதியாக வெளிப்பட்ட செய்திகள். ஒரு படத்தில் எம்.ஆர்.ராதா, “அது எப்படி ஜேம்ஸ், நீ நல்லவனா இருந்தும் பணக்காரனா இருக்கே?” என்பார். இதை வெறும் வசனமாக கடந்து சென்றுவிட முடியாது. இதனுள் புதைந்து கிடக்கும் வாழ்க்கை ஓட்டத்தை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இப்படி அவர் ஆங்காங்கே படர விட்டுச் சென்ற வசனக் கொடிகள் ஏராளம்.

விருதை புறக்கணித்தார்

சிறந்த படங்களுக்கு நடத்தப்படும் விழாக்கள், பாராட்டுக்களில் பங்கேற்காதவர், எம்.ஆர்.ராதா. 1966ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அவரை சிறந்த நடிகருக்கான விருதுக்கு தேர்வு செய்தது. தமிழ்நாடு ஆளுநர் பரிசளிப்பதாக இருந்தது. ஆனால் “தமிழ் மொழி தெரியாத ஆளுநர், என் படத்தை பார்த்திருக்க வாய்ப்பில்லை. என் மொழி தெரியாதவரிடம் இருந்து விருது வாங்க விருப்பம் இல்லை” என்று விருதை வாங்க மறுத்துவிட்டார்.

இவர் நாடகத்தில் நடிக்க வந்த காலங்களில், நடிகர்கள் அனைவரும் மேடையின் முன்பு உள்ள மக்களை நோக்கியே வசனங்களை பேசுவார்கள். அதை மாற்றி அமைத்தவர் எம்.ஆர். ராதாதான். அனைவரும் இலக்கண நடையில் தமிழ் மொழியை உச்சரித்து வசனம் பேசிக்கொண்டிருந்த போது, கொச்சையான தமிழ் உச்சரிப்பால் அனைவரின் உள்ளத்தையும் கவர்ந்தவர். அவர் பேசிய தமிழ் வேண்டுமானால் கொச்சையாக இருக்கலாம். ஆனால் அந்த கொச்சைத் தமிழ்தான், பலரின் மனதில் புரையோடிப் போயிருந்த சமூக, அரசியல், மத மூடநம்பிக்கைகளை சுத்தப்படுத்தியது என்பதை எவரும் மறுக்க முடியாது.

நமது ஆசிரியர் குறிப்பு: ‘தினத்தந்தி’ ஏடு இதன்படி – இனிமேலாவது எம்.ஆர்.ராதாவின் ‘கீமாயணம்’ என வெளியிடாது என்று நம்புகிறோம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *