நடிகர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தால் ஏற்பட்ட மக்கள் நெரிசலில் 40 பேர் உயிரிழப்பு!

நாட்டோரே, ஒரு கணம் சிந்திப்பீர்! ஆறாத் துயரம், மாளா சோகம்!!

மனிதநேயத்திலும், கடமையாற்றுவதிலும் நமது ‘உழைப்புத் தேனீ’யான முதலமைச்சர் எட்டாத உயரத்தில் நிற்கிறார்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

நடிகர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தால் ஏற்பட்ட மக்கள் நெரிசலில் 40 பேர் உயிரிழப்பு! மனிதநேயத்திலும், கடமையாற்றுவதிலும் நமது ‘உழைப்புத் தேனீ’யான முதலமைச்சர் எட்டாத உயரத்தில் நிற்கிறார் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

கரூரில் நேற்று (27.9.2025) நடைபெற்ற த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தால் ஏற்பட்ட நெரிசலில்  குழந்தைகள் உள்பட 40 பேர் பரிதாபமான முறையில் மரணம் அடைந்தனர். கரூர் மாநகரமே சோக இருளில் மூழ்கிக் கிடக்கிறது. எங்கு பார்த்தாலும் மக்களின் அழு குரல் ஓலம் கேட்கிறது. ஓர் அரசியல் கூட்டத்தில் இப்படியொரு கொடூரம் இதுவரை எங்கும் நடந்திராத, கேள்விப்பட்டிராத அவலமாகும்.

நடிகர் விஜய்யின்
மிகவும் காலதாமதமான வருகை

நேற்று (27.9.2025) காலை 8.45 மணிக்கு நாமக்கல்லில் இருந்து பிரச்சாரம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நடிகர் விஜய் சென்னையிலிருந்து புறப்பட்டதே காலை 8.30 மணிக்குத்தான். இதனால் விஜய் வந்து சேர்ந்து பிரச்சாரத்தைத் தொடங்கியதோ 6 மணி ேநரம் தாமதமாக – பிற்பகல் 2.30 மணிக்குத்தான்.

அதே போல் கரூர் வேலுசாமிபுரத்தில் நண்பகல் 12 மணிக்குப் பிரச்சாரம் செய்யக் காவல்துறையிடம் அனுமதி பெறப்பட்டு இருந்தது. ஆனால் இரவு ஏழே கால் மணிக்குத்தான் பிரச்சாரத்துக்கு வந்து சேர்ந்தார் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய்.

எந்தக் கட்டுப்பாட்டையும் பின்பற்றவில்லை!

பல மணி நேரம் மக்கள் காத்துக் கிடக்க வேண்டிய நிலை பொது மக்களுக்கு ஏற்பட்டது. குடிக்க தண்ணீர், உணவு ஏதுமின்றி மக்கள் பெரும் களைப்புக்கு ஆளாகும்  நிலை ஏற்பட்டது.

விஜய் பேச ஆரம்பிக்கும்போதே ஒலிப் பெருக்கி வேலை செய்யவில்லை. அவர் பிரச்சாரம் செய்த பேருந்தை நோக்கி மக்கள் முண்டியடித்துக் கொண்டு சென்றனர். இதனால் பெரும் நெரிசல் ஏற்பட்டது. அவர் பேசிக் கொண்டிருந்தபோதே பலர் மயக்கம் போட்டு விழுந்தனர்.

நீதிமன்றம், காவல்துறை விதித்திருந்த எந்தக் கட்டுப்பாடும் பின்பற்றப்படவில்லை; மரங்களின் மீதும், சுவர்கள், மதில், கம்பங்கள், மின் கம்பங்கள் என்று பலவாறு ஏறி நின்றனர். மேலும் அதிகமானவர்கள் ஏறிய தால் மரக்கிளை முறிந்து கீழே விழுந்ததிலும் பலரும் காயப்பட்டனர்.

நமது முதலமைச்சரின்
மின்னல் வேக செயல்பாடுகள்!

முதலமைச்சரின் உடனடி செயல்பாடுகள்

கரூரில் நடைபெற்ற த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.10 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததோடு, கரூருக்கும் உடனே புறப்பட்டுச் சென்றார். அமைச்சர்களும் கரூருக்குச் சென்றனர். சென்னையிலிருந்து கரூருக்கு விரைந்தார் முதலமைச்சர்; கரூரிலிருந்து சென்னைக்கு விரைந்தார் விஜய்.

கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ்கூட நுழைய முடிய வில்லை. விஜய் பேசி விட்டுச் சென்ற பின்னரே பாதிக்கப்பட்ட பகுதிக்குச் செல்ல முடிந்தது – மீட்புப் பணிகளில் ஈடுபட முடிந்தது.

உடனடியாக  கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டவர்கள் கொண்டு செல்லப்பட்டனர்.

கூட்ட நெரிசலால் 8 குழந்தைகள் 16 பெண்கள் உள்பட 40 பேர் பரிதாபமாக மரணம் அடைந்த கொடூரம் நடந்தது.

இந்தக் கொடூரச் செய்தியை அறிந்ததும், நமது முதலமைச்சரின் மின்னல் வேக செயல்பாடுகள்.

  1. தலைமைச் செயலாளர் – தலைமைச் செயலக அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை.
  2. காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை, ஆணை.
  3. கூட்ட நெரிசலில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை உடனடியாக நேரில் சென்று பார்க்குமாறு கரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் செந்தில்பாலாஜியை அனுப்பி வைத்தார்.
  4. அமைச்சர்களை அழைத்து, விரைந்து கரூருக்குச் செல்ல பணித்தமை.
  5. உடனுக்குடன் கள நிலவரம் அறிந்து, அதற்கேற்ற வாறு அரசுப் பணிகளை முடுக்கிவிட்டார்.
  6. உள்ளூர், பக்கத்து மாவட்டத்தில் உள்ள மருத்து வர்கள், செவிலியர்கள் எல்லோரையும் கரூருக்குச் சென்று,பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றும் பணியில் இறங்குமாறு ஆணை.
  7. நெரிசலில் சிக்கி, காயமடைந்தோர் தனியார ்மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால், அந்த சிகிச்சை செலவையும் அரசே ஏற்கும் என்றார் முதலமைச்சர்.
  8. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.10 லட்சம், காய மடைந்தவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு.

9 ஒரு நபர் விசாரணை ஆணையத்திற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஜஸ்டிஸ் திருமதி அருணாஜெகதீசன் அவர்களை நியமித்து, விரைந்து அறிக்கை தர ஏற்பாடு.

நடுநிசியில் கரூர் புறப்பட்டார் முதலமைச்சர்

  1. இவ்வளவும் செய்து முடித்து, நடுநிசி என்றும் பார்க்காமல், இரவே தனி விமானம்மூலம் திருச்சி சென்று, பிறகு அங்கிருந்து கரூருக்கு இரவு 2 மணி யளவில் சென்று, மறைந்தவர்களின் உடலுக்கு மருத்துவ மனையில் மரியாதை செய்து, சிகிச்சை பெறும் மருத்து வப் பயனாளிகள் ஒவ்வொருவரையும் நேரில் பார்த்து, நலம் விசாரித்து, ஆறுதல், தைரியம் கூறிவிட்டு, மருத்துவ மனையில் உள்ள மருத்துவக் குழுவினருடன் கலந்து பேசி, மேலும் தீவிரமாகச் சிகிச்சைகளை மேற்கொண்டு உயிர்களைக் காப்பாற்ற அன்புக் கட்டளையிட்டு, மருத்துவர்களின் கடமையுணர்வுக்காக அவர்களையும் ஊக்கப்படுத்தினார்.

பிறகு செய்தியாளர்களை இரவு 3.15 மணிக்குச் சந்தித்து, தனது தாங்கொணா வேதனை, துயரம்பற்றி யெல்லாம் பகிர்ந்துகொண்டு, சென்னை திரும்பினார்!

இவ்வளவுக்கும் இரவு 8 மணிக்கு இந்த செயல்பாடு தொடங்கி, பொழுது விடியும் முன்பாகவே நடந்து முடிந்துவிட்டது.

மூத்த அமைச்சர்கள் குழு, முதலமைச்சருடன்  இருந்து கண்காணித்து, மருத்துவச் சிகிச்சைகள் வேகமாக நடந்திட உந்து சக்தியானார்கள்.

மருத்துவமனையில் முகக்கவசம்கூட அணியாது சென்று, பாதிக்கப்பட்டு மருத்துவப் படுக்கையில் உள்ளோரிடம் பேசியது, எவர் மனதையும் உருகவே செய்யும்.

சோகமே உருவாகிய முகத்துடன் அவர் நட மாடிய காட்சி, அவருக்குள்ள எதையும் தாங்கும் இயக்கத்தின் அப்பழுக்கற்ற மனிதநேயத்தையும் பறை சாற்றுபவனாகவே இருந்தன!

ஆசிரியர் அறிக்கை

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (28.9.2025) கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று, கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

செய்தியாளர்களின் சந்திப்பில்
முதலமைச்சர் காட்டிய நாகரிகம்!

எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தது, செய்தியாளர்கள் சந்திப்பு. இதை அரசியல் நோக்குடன், குறுக்கிடக் கூடாது என்று அறிவுரை கூறி, பொதுவானவர்கள் மத்தி யில், ஏன் அவரது அரசியல் எதிரிகளிடம்கூட (மறைமுக) வியப்பு கலந்த பாராட்டையும், நனி நாகரிகத்தையும் எடுத்துக்காட்டும் நிலைக்கு உயர்ந்துள்ளார்.

தந்தை பெரியாருக்கு மிகவும் பிடித்த குறள்,

‘‘குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து

மானங் கருதக் கெடும்.’’

பொதுத் தொண்டுக்குக் கால நேரம் பார்க்கக் கூடாது; அதுபோல், மான அவமானமும் பார்க்காமல் பணி செய்யவேண்டும் என்பதுதான் அந்தக் குறளின் பொருள்.

அந்தக் ‘குறளின் செயலியாகவே’ நமது ‘திராவிட மாடலின்’ முதலமைச்சர், ஓய்வில்லாமல், இரவெலாம் விழித்து, தனது கடமையாற்றி, ஆளுமைத் திறனாலும், மனிதாபிமான, விருப்பு வெறுப்பற்ற வினையாலும், உலகத்தார் வியக்கும் வகையில் வேகம் கலந்த விவேகத்துடன் செயல்பட்டார்.

கோணல் புத்தியாளர்களே, சிந்திப்பீர்!

‘திராவிட மாடல்’ ஆட்சி எப்படிப்பட்டது – அதன் நாயகரின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எப்படிப்பட்டது என்பதை உணர்த்தும் வகையில், பருவம் பாராது, பணியாற்றிய பண்பாளராக, எவரும் எட்டாத, எட்ட முடியாத உயரத்திற்கு எழுந்து நிற்கிறார் நமது முதலமைச்சர் என்பது புரிகிறது.

கொள்கை எதிரிகளே, கோணல் புத்தியாளர்களே, இனியாவது அவரது ஆட்சியின் மாட்சியைப் புரிந்து கொள்ளமாட்டீர்களா?

 

ஆசிரியர் அறிக்கை

சென்னை    தலைவர்,

28.9.2025   திராவிடர் கழகம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *