பெரியார் பாதையில் பயணிக்கும் திராவிட மாடல் அரசு

‘சமூக நீதிக்கான சரித்திர நாயகர் ’
தமிழ்நாடு முதலமைச்சர்
மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின்

“திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிவிட்டது! – திராவிடர் கழகத்திற்குப் போட்டியாக அல்ல!” என்று ராபின்சன் பூங்கா திடலில், கொட்டும் மழையில் நடந்த தி.மு.க. தொடங்கப்பட்ட கூட்டத்தில் அறிவித்தார் பேரறிஞர் அண்ணா. சொன்னபடியே செயல்பட்டார். 1967ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தி.மு.க. பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்ற நிலையில், திருச்சியில் தங்கியிருந்த பெரியாரை, தன் தம்பியரான நாவலர், கலைஞர், அன்பில் ஆகியோருடன் சந்தித்து, வாழ்த்து பெற்ற பிறகே முதலமைச்சர் பொறுப்பேற்றார் பேரறிஞர் அண்ணா.

தமிழ்நாடு

சமுதாய முன்னேற்றமே அய்யாவின் இலட்சியம்!

முதலமைச்சரான அண்ணா, சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை நிறைவேற்றி. அதனைப் பெரியாருக்குக் காணிக்கையாக்கினார். தேர்தல் அரசியல் களத்திற்கு வராமலேயே தன் இலட்சியங்களைச் சட்டவடிவமாகக் கண்டவர் பெரியார். சமுதாய முன்னேற்றமே அய்யாவின் இலட்சியம்.

திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்காக ஒரு வார்டு அமைய வேண்டும் என விரும்பிய தந்தை பெரியார் தனது பணம் ஒரு இலட்சம் ரூபாயை ஆசிரியர் அய்யா கி.வீரமணி அவர்கள் மூலமாக அப்போது முதலமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணாவிடம் வழங்குகிறார். பெரியார் கொடுத்த தொகையுடன், அரசு சார்பில் மேலும் ஒன்றே கால் இலட்ச ரூபாய் போட்டு, குழந்தைகளுக்கான புதிய வார்டுக்குப் பேரறிஞர் அண்ணா அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் சில மாதங்கள் கழித்து, முதலமைச்சர் அண்ணா அவர்களே அந்த புதிய வார்டைத் திறந்து வைத்து, ‘பெரியார் ஈ.வெ.ரா.மணியம்மையார் குழந்தைகள் நல விடுதி’ என்ற பெயரையும் சூட்டுகிறார்.

பெரியார் இல்லாமல் இன்றைய தமிழ்ச் சமுதாயம் இல்லை. பேரறிஞர் அண்ணா இல்லாமல் இன – மொழி உரிமையில்லை. முத்தமிழறிஞர் கலைஞர் இல்லாமல் நவீனத் தமிழ்நாட்டின் கட்டமைப்பு இல்லை. இவர்களின் இலட்சியத்துடன் இணைந்து பயணிப்பதுதான் இன்றைய திராவிட மாடல் அரசு.

திருச்சியில் குழந்தைகளுக்கான ஒரு வார்டு அமைந்திடப் பெருமுயற்சி எடுத்து, நிதியையும் வழங்கிய தந்தை பெரியாரின் பெயரில், என்னுடைய கொளத்தூர் தொகுதியில் அதிநவீன வசதிகளுடன் சிகிச்சை அளிக்கக்கூடிய பெரியார் உயர் சிறப்பு மருத்துவமனையை திராவிட மாடல் அரசு அமைத் துள்ளது. கோவையில் உலகத் தரத்தில் அமைக்கப்பட்டு வரும் நூலகத்திற்குத் தந்தை பெரியாரின் பெயரைத் திராவிட மாடல் அரசு சூட்டியுள்ளது.

தந்தை பெரியார் இலட்சியத்தை நிறைவேற்றும் வகையில் திராவிட மாடல் அரசு!

முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் தொடங்கப் பட்டு, பல ஊர்களிலும் அவர் முன்னின்று திறந்து வைத்த பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம் தற்போதைய திராவிட மாடல் ஆட்சியிலும் தொடர்கிறது. ஆட்சியின் திட்டங்களிலும், கட்டடங்களிலும் மட்டும் தந்தை பெரியார் வாழவில்லை. தந்தை பெரியாரின் இலட்சியக் கனவுகளை நிறைவேற்றும் வகையில் திராவிட மாடல் அரசு செயல்பட்டு, தமிழ்நாட்டு மக்களை வாழ வைக்கிறது. அதில், பெரியார் எனும் தத்துவத் தலைவர் உயிர்த்திருக்கிறார்; உயர்ந்து நிற்கிறார்.

நூற்றாண்டு காணும் சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் 1929ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடந்த முதல் மாகாண மாநாட்டில், குடும்பச் சொத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை, காவல்துறை, இராணுவம் போன்றவற்றில் பெண்களுக்கு வேலை எனப் பெரியார் நிறைவேற்றிய தீர்மானங்களை முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான அரசு சட்டப்பூர்வமாக நிறைவேற்றியது. பெண்கள் நலனையும், அவர்களின் உரிமையையும் தற்சார்பு நிலையையும் தொடர்ந்து வலியுறுத்திய தந்தை பெரியார் அவர்கள், குடும்பத்திலே அன்றாடம் வேலை செய்யும் பெண்களுக்கான ஊதியம், அவர்களின் செலவுக்கான பணம் பற்றி ‘குடிஅரசு’ ஏட்டில் எழுதியுள்ளார்.

மகளிர் உரிமைத் திட்டம்

காலம் காலமாகக் குடும்பத்திற்காக உழைத்திடும் பெண்களின் உரிமையைப் போற்றிடும் வகையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் எனும் பெயரில் மாதம் 1000 ரூபாய் வழங்கிடும் மகத்தான திட்டத்தைத் திராவிட மாடல் அரசு செயல்படுத்தி, பெரியாரின் இலட்சியக் கனவை நிறைவேற்றி வருகிறது. பெரியார் பிறந்தநாள் கொண்டாடப்படும் இந்த செப்டம்பர் 2025 வரை, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மூலம் இல்லத்தரசிகள் ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் இதுவரை, 25 ஆயிரம் ரூபாய் திராவிட மாடல் அரசின் சார்பில் செலுத்தப்பட்டுள்ளது. குடும்பத்திற்காகப் பாடுபடும் பெண்களின் உழைப்பை மதித்திடும் வகையிலும், அவர்கள் தங்களுக்கான அத்தியாவசிய தேவைக்குரிய பணத்தைப் பிறரிடம் எதிர்பார்த்திட வேண்டிய அவசியமில்லாத நிலையிலும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் சமுதாயத்தில் ஒரு புரட்சிகர மாற்றத்தை உருவாக்கியுள்ளது.

தமிழ்நாட்டில் 43 விழுக்காடு
மகளிர் பணியில்!

அரசுப் பள்ளியில் படித்த  மாணவிகளின் உயர்கல்விக்கு மாதம் ரூ.1000 வழங்கிடும் புதுமைப்பெண் திட்டம், மகளிர் சுய உதவிக் குழுக்கள், பெண்கள் சுயதொழில் தொடங்கிடக் கடனுதவி, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசித் திட்டம் உள்ளிட்ட திராவிட மாடல் அரசின் திட்டங்கள் பலவும் சமுதாயத்தில் சரிபாதியினராக உள்ள பெண்களின் வாழ்வினை மேம்படுத்தும் வகையில் அமைந்து, பெரியார் விரும்பிய பாலினச் சமத்துவத்தை நிலைநாட்டும் வகையில் உள்ளது. கடந்த நான்காண்டுகளில் தமிழ்நாடு பெற்றுள்ள தொழில் முதலீடுகளின் மூலம் மாநிலத்தின் பல இடங்களிலும் பரவலாக அமைந்துள்ள தொழிற்சாலைகளின் வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தோல் அல்லாத காலணி உற்பத்தியில் தமிழ்நாடு முன்னிலை பெற்றுள்ள நிலையில், அத்தகைய தொழிற்சாலைகளில் அந்தந்த ஊர் பெண்களே அதிகளவில் பணியாற்றுகிறார்கள்.

இந்தியாவில் உள்ள தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களில், தமிழ்நாட்டில் உள்ள பெண் தொழிலாளர்களின் விகிதம் மட்டும் 43% என்ற சாதனை அளவில் உள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் உள்ளிட்ட சர்வதேச முதலீட்டுக் கருத்தரங்குகளில், தமிழ்நாடு பெவிலியனுக்கு வரும் பிற நாட்டவர்கள், “உங்கள் மாநிலத்தில் எப்படி இந்த அளவுக்குப் பெண்களைப் பணியாளர்களாகக் கொண்டிருக்கிறீர்கள்? ஆச்சரியமாக இருக்கிறது! எப்படி இது சாத்தியமானது என்பது குறித்து தனிக் கருத்தரங்கு நடத்த வேண்டும்” என்று தெரிவிப்பது வழக்கம். அவர்களுக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் தெரிவிக்கப்படும் பதில்,

“எங்களுக்குப் பெரியார் என்ற சமுதாய சீர்திருத்த தலைவர் இருந்தார். அவரது கொள்கை வழியில் அண்ணா, கலைஞர் எனும் மகத்தான தலைவர்கள் ஆட்சி செய்தார்கள். தற்போதைய திராவிட மாடல் அரசும் அதே வழியைப் பின்பற்றுகிறது. இந்தியாவின் மற்ற மாநிலங்களைவிட, தமிழ்நாட்டில் படித்த, முற்போக்கான. தற்சார்புடன் வாழும் சூழல் கொண்ட பெண்கள் அதிகம் இருக்கிறார்கள்” என்பதுதான்.

தொய்வின்றிச் செயல்படும்
திராவிட மாடல் அரசு!

பெண்கள் முன்னேற்றத்திற்காகத் திராவிட மாடல் அரசு சளைக்காமல் உழைக்கிறது. பெண்கள் பாதுகாப்பில் திராவிட மாடல் அரசு சமரசமின்றி உறுதியாக இருக்கிறது. ஆண் – பெண் சமத்துவத்தை நிலைநாட்டும் வகையிலான திட்டங்களை திராவிட மாடல் அரசு தொய்வின்றிச் செயல்படுத்துகிறது.

பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்ற முத்தமிழறிஞர் கலைஞர் எடுத்த பெரு முயற்சியின் தொடர்ச்சியாக, திராவிட மாடல் அரசின் நூறாம் நாளில், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தின்கீழ் ஆகமப் பயிற்சி பெற்ற பிற்படுத்தப்பட்ட – மிகவும் பிற்படுத்தப்பட்ட – பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் கோயில் கருவறையில் அர்ச்சகர் பணி செய்வதற்கான ஆணை வழங்கப்பட்டு, அந்த முள் அகற்றப்பட்டது. கோயில்களில் பெண் ஓதுவார்களும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

சந்தேகங்களையும், சிக்கல்களையும் தீர்த்துவைக்க பெரியார் திடலும், ஆசிரியரும்!

திராவிட மாடல் அரசின் தத்துவத் தலைவராக தந்தை பெரியார் இருக்கிறார். சந்தேகங்களையும் சிக்கல்களையும் தீர்ப்பதற்குப் பெரியார் திடல் இருக்கிறது. அங்கே ஆசிரியர் அய்யா இருக்கிறார். பெரியாரின் பெருந்தொண்டராக திராவிடர் கழகத்தைக் கட்டிக் காத்து, தாய்க் கழகத்தின் தலைவர் என்ற உரிமையுடன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான திராவிட மாடல் அரசுக்கு ஆலோச னைகளை வழங்குகிறார். அதனால்தான், தந்தை பெரியாரைக் கொண்டாடும் ‘விடுதலை’ சிறப்பு மலரில் பெருமையுடன் பதிவு செய்கிறேன், இது தந்தை பெரியார் பாதையில் பயணிக்கும் திராவிட மாடல் அரசு!

‘விடுதலை’ தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் 17.09.2025

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *