திருச்சி, செப்.27- திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் “என் குப்பை; என் பொறுப்பு” என்ற தலைப்பில் சிறப்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் உறுதிமொழிப் பேரணி 19.09.2025 அன்று நடைபெற்றது.
ஒன்று முதல் 8ஆம் வகுப்பைச் சார்ந்த சுற்றுச்சூழல் மன்றத்தின் 120 மாணவ, மாணவிகள் பங்கேற்ற இப்பேரணியைப் பள்ளி முதல்வர் முனைவர் க.வனிதா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி சமூகத்தில் சுத்தம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டது. “ குப்பையில்லா உலகம் படைப் போம்” எனும் தலைப்பில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்,“குப்பை என் பொறுப்பு – சுத்தம் என் கடமை” “மரம் வளர்ப்போம்; சுற்றுச்சூழல் காப்போம் என்ற முழக்கங்களை முழங்கினர். மாணவர்கள் கைகளில் வண்ணமயமான பலகைகள் ஏந்தி, “பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டாம்”, “மறுசுழற்சி முறைகளை பின்பற்றுங்கள்”, “சுத்தமான சூழல் – ஆரோக்கியமான வாழ்க்கை” போன்ற வாசகங்களை எழுதி சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணிக்குப் பிறகு நடைபெற்ற உறுதிமொழி நிகழ்ச்சியில், மாணவர்கள் குப்பையைப் பொறுப்புடன் கையாளுதல், பொதுவிடங்களில் குப்பை கொட்டாமை, நெகிழிப் பயன்பாட்டைத் தவிர்த்தல், மரம் நடுதல் போன்றவற்றை கடைப்பிடிப்பதாக உறுதி மொழி எடுத்தனர். பள்ளி முதல்வர் உரையாற்றிய போது, “சுற்றுச்சூழல் சுத்தமாக இருக்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் கடமை. குழந்தைகள் இளம் வயதிலேயே இந்த பொறுப்புணர்வை வளர்த்துக் கொண்டால், எதிர்காலத்தில் சுத்தமும் ஆரோக்கியமும் நிறைந்த சமுதாயம் நிச்சயம் உருவாகும்” என்று தெரிவித்தார். ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களும் இந்த முயற்சியைப் பாராட்டினர். மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்ற இந்த நிகழ்ச்சி, சுத்தமான சூழலின் முக்கியத்துவத்தை மாணவர்கள் மற்றும் மக்களிடையே பரவலாகப் பரப்பியது. இப்பேரணிக்கான ஏற்பாட்டைப் பள்ளியின் சுற்றுச்சூழல் மன்றப் பொறுப்பாசிரியை ஜெயந்தி உள்ளிட்டக் குழுவினர் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.