உத்தரப்பிரதேசம் சித்தார்த் நகர் மாவட்ட பாஜக தலைவர் கவுரி சங்கர் அக்ரஹரி இவர் தனது நெருங்கிய உறவுக்காரரின் மகளான 12 வயதுச் சிறுமியை பல நாட்களாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து – அதை காணொலியாகப் பதிவும் செய்துள்ளார். இந்த நிலையில் இவர் சிறுமியின் பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் தன்னிடம் உங்கள் மகளின் ஆபாசக் காணோலி உள்ளது; பணம் கொடுக்காவிட்டால் அதை வெளியிட்டு விடுவோம் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் காவல்துறையோ உங்கள் உறவுகளுக்குள்ள பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி வழக்குப் பதிவு செய்ய வில்லை.
இந்நிலையில், மழையில் நனைந்த தனது கைப்பேசியை பழுதுபார்க்க கவுரி சங்கர் அக்ரஹரி ஒரு கடைக்குக் கொடுத்துள்ளார். பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள், கைப்பேசியில் இருந்த பாலியல் வன்கொடுமை காணொலிகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் ஏற்ெகனவே காவல்நிலையத்திற்குச் சென்று புகார் அளித்த போது, அதனை காவல்துறையினர் பெறாமல் போனது தொடர்பான தகவல் அறிந்து, அந்தக் காணொலியை பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்தக் காணொலி ஆதாரத்தை கொண்டு, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் வழக்குரைஞர் மூலம் தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த கொடூர நிகழ்வு சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து, உத்தரப் பிரதேச பாஜக தலைமை வேறு வழியின்றி சங்கர் அக்ரஹரிக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என உத்தரப்பிரதேச பாஜக தலைமை அறிக்கை வெளியிட்டது. பின்னர், இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தது.
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தகவல் அறிந்ததும் காவல்துறைக்கு அஞ்சி கவுரி சங்கர் அக்ரஹரி மத்தியப் பிரதேசத்தில் உள்ள பிரபல அரசியல் பிரமுகர் வீட்டில் தஞ்சமடைந்துள்ளார். மத்தியப் பிரதேசத்தில் உள்ள மிகவும் முக்கியமான பாஜக பிரமுகர் இவரது உறவினர் ஆகையால் இவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் உத்தரப் பிரதேச காவல்துறை தயங்கி நிற்கிறதாம்.
இதைப் போலவே அசாம் மாநிலம் கர்பி ஆங்லாங் மேற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பித்யா சிங் எங்லெங்கு அதே கட்சியைச் சேர்ந்த பெண் உறுப்பினருக்குக் கட்சியில் பொறுப்பு வாங்கித் தருவதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
ஒருவர், இருவரல்ல; பல பெண்களிடமும் தவறாக நடந்துள்ளார். புகார் கொடுத்தும் காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழ்நாட்டில் அங்கொன்றும், இங்கொன்றுமாக எப்பொழுதாவது இத்தகைய செயல் நடந்திருந்தால் ஊதிப் பெருக்கி அரசியல் செய்யும் பா.ஜ.க. – இப்படி பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் கட்சியில் பொறுப்பு வாங்கித் தருவதாகக் கூறி, பெண்களைச் சீரழிப்பது சர்வ சாதாரணமாக இருக்கிறதே – இதற்கு என்ன பொருள்? என்ன பதில்?
பெண்கள் வீதிக்கு வந்து போராடும் நிலை ஏற்பட்டாலொழிய இதற்கொரு தீர்வு காண இயலாது; எதிர்க்கட்சிகளும் இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொள்ளாதது ஏமாற்றமே!