‘சாதிப் பெருமை’ ஆங்கில நூலினை வெளியிட்டு எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., சிறப்புரை

8 Min Read

* அன்றைக்கு இருந்த காங்கிரஸ் வேறு; இன்றைக்கு இருக்கின்ற காங்கிரஸ் வேறு!
* மதச்சார்பின்மையைக் காப்பாற்றுவதில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது!
*அரசமைப்புச் சட்டத்தை உயர்த்திப் பிடிக்கிறது – சமத்துவத்தை உரத்துப் பேசுகிறது!
இன்றைக்கு ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ்
திராவிடர் கழகக் கருத்தியலோடு, திராவிட இயக்க அரசியலோடு இணைந்து, இயைந்து இயங்குகிறது

சென்னை,  செப்.27  இன்றைக்கு இருக்கின்ற காங்கிரஸ் வேறு; அன்றைக்கு இருந்த காங்கிரஸ் வேறு.  இன்றைக்கு மதச்சார்பின்மையைக் காப்பாற்றுவதில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது. அரசமைப்புச் சட்டத்தை உயர்த்திப் பிடிக்கிறது. சமத்துவத்தை உரத்துப் பேசுகிறது. அதிலும் இன்றைக்கு ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ், நம்முடைய கருத்தியலோடு, திராவிடர் கழகக் கருத்தியலோடு, திராவிட இயக்க அரசியலோடு இணைந்து, இயைந்து இயங்குகிறது என்றார்  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., அவர்கள்.

‘சாதிப் பெருமை’ ஆங்கில நூலினை வெளியிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., சிறப்புரை

‘‘சாதிப் பெருமை’’  (Caste Pride) தமிழ்மொழி பெயர்ப்பு நூல் அறிமுக விழா, திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பெரியார் நூலக வாசகர் வட்டம் ஆகிய அமைப்புகளின் ஒருங்கிணைப்பில், கடந்த 11.9.2025 அன்று மாலை 6.30 மணிக்கு சென்னை – பெரியார் திடல், நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில் நடைபெற்றது. இந்நூல் அறிமுக விழாவிற்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமை வகித்தார். இவ்விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., அவர்கள் Caste Pride ஆங்கில நூலினை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

நூலாசிரியரின் மதிப்பீட்டை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

அப்போது காங்கிரஸ் கட்சி எப்படியாக இருந்தது? அதற்கடுத்துதான் சொல்கிறார், ‘‘விடுதலைப் போராட்ட வீரர்கள் கட்டாயமாக சமத்துவத்தை உயர்த்திப் பிடிப்பவர்களாக இருந்திருக்கவில்லை.’’

அம்பேத்கர் பெரிய ஆளுமையாக வளர்ந்திருக்காத காலம்!

இப்படி அவர் சொல்லிக் கொண்டு வருகின்ற நிலையில், காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றுகிறது. அப்போது, அம்பேத்கர் பெரிய ஆளுமையாக வளர்ந்தி ருக்காத காலம்.

தீண்டாமை கூடாது என்ற தீர்மானத்தை நிறை வேற்றினார்கள். ஆனால், ஜாதிக் கொடுமைகள் குறித்தோ, கோவில் நுழைவுகள் குறித்தோ, கலப்புத் திருமணம் குறித்தோ எந்த ஒரு நிலைப்பாட்டையும் அவர்களால் எடுக்க முடியாத நிலை இருந்தது.

காங்கிரஸ் கட்சிக்கு அப்படி ஒரு உளவியல் இருந்தது என்று இந்நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களைப்பற்றி, அவர் எழுதுகிறார். இந்த விஷயத்தில், அவர்களைவிட, பீம் ராவ் ராம்ஜி அம்பேத்கர், அதிகமான பங்கு வகித்தார் என்பது உண்மை என்றாலும்கூட, அவர் விஷயத்திலும் ஆச்சரியங்கள் இல்லாமல் இல்லை.

அரசிலோ அல்லது அரசியல் நிர்ணய சபையிலோ அங்கம் வகிக்காத காலத்தில்கூட, அவர் செய்த, அதிகம் அறியப்படாத பங்களிப்புகள் சிலவற்றின்மீது இந்த நூல் வெளிச்சம் பாய்ச்சுகிறது.

அம்பேத்கர்பற்றிய விமர்சனம்!

அம்பேத்கர் அவர்கள் எவ்வளவு அறிவுக் கூர்மையுடன் நடந்திருந்தாலும்கூட, அதன் சட்ட அம்சங்கள் குறித்த புரிதலில், ஒன்றுக்கும் மேற்பட்ட தருணங்களில் தடுமாறியிருக்கிறார் என்றும் அம்பேத்கர் அவர்களைப்பற்றியும் இந்நூலாசிரியர்  விமர்சனம் செய்திருக்கிறார்.

பாரபட்சம் இல்லாத, ஒரு சார்பு இல்லாத நூலாசிரியரின் ஆய்வு!

இவருடைய நூல், எந்த அளவிற்கு ஆழமான, பாரபட்சம் இல்லாத, அதாவது  ஒரு சார்பு இல்லாத ஆய்வைக் கொண்டிருக்கின்றது என்பதற்காக இதனைச் சொல்லுகின்றேன்.

‘‘1920 ஆம் ஆண்டு நாக்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாடு முதலே, தீண்டாமைக்கு எதிராக காந்தியார் பெரிதாகப் பேசினாலும், கோவில் நுழைவுத் தொடர்பான சட்ட விஷயத்தில் அவர் ஈடுபட, மேலும் 12 ஆண்டு கள் பிடித்தன.

1932 இல் பூனா ஒப்பந்தம். அதில், அம்பேத்கர் அவர்கள் தன்னுடைய கோரிக்கையைத் தளர்த்திக் கொண்டார்.

காந்தியின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் அம்பேத்கர்!

அவருடைய கோரிக்கைகளைத் தளர்த்திக் கொண்டு, காந்தியின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அதை ஈடு செய்வதற்காக, ஒப்புக்குக் காந்தி, கோவில் நுழைவுப்பற்றி கொஞ்சம் பேசினார்.

கைம்மாறாகத்தான் – அதாவது சர்ச்சைக்குரிய தனி வாக்காளர் தொகுதி உரிமையை, தன் அழுத்தத்தின் காரணமாக, அவர்கள் (அம்பேத்கர், அம்பேத்கரைச் சார்ந்தவர்கள்) கைவிட்டதற்குக் கைமாறாகத்தான், கோவில் நுழைவுப் பிரச்சினை குறித்து காந்தி பேசினார்.

அனைத்துக் கோவில்களுக்குள்ளும் தீண்டத்தகாதார் செல்வதற்கான உரிமை குறித்துப் பேசவில்லை காந்தியார்!

1932 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஒப்பந்தத்திற் குப் பிறகும்கூட, காந்தி, அனைத்துக் கோவில்க ளுக்குள்ளும் தீண்டத்தகாதார் செல்வதற்கான உரிமை குறித்துப் பேசவில்லை.’’

இவையெல்லாம் நமக்குத் தெரியவேண்டிய வரலாறு. நாம் இன்றைக்குக் காங்கிரசோடு இருக்கின்றோம் என்பது வேறு. இன்றைக்கு இருக்கின்ற காங்கிரஸ் வேறு; அன்றைக்கு இருந்த காங்கிரஸ் வேறு.

ஆனால், காங்கிரஸ் கட்சியின் மனநிலை என்பது பாரம்பரியமாக வரும் என்பதற்காக நான் சொல்கிறேன்.

இன்றைக்கு மதச்சார்பின்மையைக் காப்பாற்று வதில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது. அரச மைப்புச் சட்டத்தை உயர்த்திப் பிடிக்கிறது.

திராவிட இயக்க அரசியலோடு இணைந்து, இயைந்து இயங்குகிறது இன்றைய காங்கிரஸ்!

சமத்துவத்தை உரத்துப் பேசுகிறது. அதிலும் இன்றைக்கு ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ், நம்முடைய கருத்தியலோடு, திராவிடர் கழகக் கருத்தியலோடு, திராவிட இயக்க அரசியலோடு இணைந்து, இயைந்து இயங்குகிறது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

ஆசிரியர் அய்யாவை மேடையில் வைத்துக்கொண்டு, காங்கிரசை விமர்சித்துவிட்டார் திருமாவளவன் என்று, திரித்து, திரிபுவாதம் செய்வார்கள்.

இந்தப் புத்தகத்தில், அம்பேத்கர் அவர்களைப்பற்றி  விமர்சனம் செய்துள்ளதைப்பற்றியும் குறிப்பிட்டுக் காட்டியிருக்கின்றேன்.

தோழர்களே, கீழ்ஜாதியினருக்கு ஒதுக்கப்பட்ட தண்டனை. தண்டனைக் கொள்கை என்பதற்கு ஆதாரமாக நாம் ஏன் மனுஸ்மிருதியைப் பேசுகிறோம் என்றால், மனுஸ்மிருதி என்பதே ஒரு லா தான். அது  தண்டனையைப்பற்றிப் பேசுகிறது. நால் வரு ணங்களைப்பற்றிப் பேசுகிறது.

கொலைக் குற்றம் செய்தாலும் பார்ப்பனர்களுக்குத் தண்டனை இல்லை என்கிறது மனுஸ்மிருதி!

பார்ப்பனர்களுக்குத் தண்டனை இல்லை. கொலைக் குற்றம் செய்தாலும் அவர்களுக்குத் தண்டனை கிடையாது. ஆனால், சூத்திரர்களுக்கு எவ்வளவு கடும் தண்டனை என்பதையெல்லாம் நாம் பார்த்திருக்கின்றோம்.

இதுதான் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயும் நடந்திருக்கின்றது. நாடு விடுதலை பெற்ற பிறகும், அது நிகழ்ந்திருக்கின்றது.

சர் தாமஸ் மன்றோ!

சென்னை அண்ணா சாலையில் குதிரைமேல் ஒருவர் அமர்ந்திருக்கும் சிலையைப்பற்றி இந்தப் புத்தக ஆசிரியர் குறிப்பிட்டிருக்கின்றார்.

அது யாருடைய சிலை?

சர் தாமஸ் மன்றோவின் சிலைதான் அது. அவர் மெட்ராஸ் பிரசிடென்சியினுடைய கவர்னராக இருந்தவர். அவர் ஒரு சட்டத்தை அறிமுகப்படுத்துகிறார். ‘‘மதராஸ் ஒழுங்குமுறைச் சட்டம்’’ என்று.

அந்தச் சட்டத்தில், கீழ்ஜாதியினருக்கு ஸ்டாக்ஸ் என்ற அடிப்படையிலான ஒரு தண்டனையைக் கொடுக்கிறார்கள்.

கீழ்ஜாதிக்காரர்கள் சிறிய சிறிய
தவறு செய்தாலும்…

ஸ்டாக்ஸ் என்றால், துளைகளிட்ட மரச் சட்டகத்தில், கீழ்ஜாதிக்காரர்கள் சிறிய சிறிய தவறு செய்தாலும், அந்த சட்டகத்தில் காலை நுழைத்து விடுவார்கள். அவர்களால் நடக்க முடியாது; மணிக்கணக்கில், நாள் கணக்கில் அவர்கள் அப்படியே நின்று கொண்டிருக்க வேண்டும். அந்தத் தண்டனைக்குப் பெயர்தான் ஸ்டாக்ஸ்.

அது தொடர்பான நான்கு வழக்குகளை எடுத்து ஆய்வு செய்கிறார் இந்நூலாசிரியர்.

நான்கு வழக்குகளின் தீர்ப்புகளை நம்மிடத்தில் தந்திருக்கின்றார்.

ஒழுங்கு முறைச் சட்டம் 10 ஆவது பிரிவைக் கொண்டு வந்தவர் சர் தாமஸ் மன்றோ அவர்கள்தான்.

இவரைப்பற்றி இராஜாஜி என்ன சொல்கிறார் என்றால், அந்தக் காலத்தில் அய்.சி.எஸ் படிக்கின்றவர்களிடையே உரையாற்றும்போது, ‘‘நீங்கள் ஒவ்வொருவரும் கட்டா யம் சர் தாமஸ் மன்றோவைப் படிக்கவேண்டும்’’ என்று சொன்னதாக இந்நூலாசிரியர் மேற்கோள் காட்டுகிறார்.

ஒரே நேரத்தில், மன்றோ எப்படிப்பட்டவர் என்பதையும் சொல்கிறார்; அன்றைக்குப் பிரிமியராக இருந்த இராஜாஜியின் உளவியல் எப்படிப்பட்டது என்பதையும் பதிவு செய்திருக்கிறார்.

தண்டனை வழங்கும் விஷயத்திலும் ஜாதியப் பாகுபாடு!

தண்டனை வழங்கும் விஷயத்திலும் ஜாதியப் பாகுபாடு காட்டவேண்டும் என்கின்ற சிந்தனை, அப்போது மிகவும் மதிக்கப்பட்ட பிரிட்டிஷ் நிர்வாகியான தாமஸ் மன்றோவினால்தான் அறிமுகப்படுத்தப்பட்டது.

அவர் குதிரைமீது அமர்ந்திருக்கும் சிலையை, சென்னையின் முக்கியமான ஒரு சந்திப்பில் இன்றும் காணலாம். சுதந்திரத்திற்கு முன்னும், பின்னும் மெட்ராஸ் மாகாணத்தை – மெட்ராஸ்  மாகாணம் என்றால், சென்னை மட்டுமல்ல; மதராஸ் பிரசிடென்சி என்பது விசாகப்பட்டினம் வரையில், திருவிதாங்கூர் சமஸ்தானத்தைத் தவிர, கேரளாவின் பல பகுதிகளை உள்ளடக்கியது; பெங்களூர் வரையிலும், சித்தூர் உள்பட எல்லாம் சேர்ந்ததுதான் மதராஸ் பிரசிடென்சி.

அரசியலில் தீவிரமான ஈடுபாடு கொண்டிருந்தனர்!

மதராஸ் பிரசிடென்சி இருந்த காலத்தில், தெலுங்கு, கன்னடம் பேசக்கூடியவர்கள் அரசியலில் தீவிரமான ஈடுபாடு கொண்டிருந்தனர்.

இன்றைக்குத் தமிழ்நாடு ஒரு மாநிலம் என்பதுபோல, மதராஸ் பிரசிடென்சி, பாம்பே பிரசிடென்சி, கொல்கத்தா பிரசிடென்சி, சென்ட்ரல் பிராவின்ஸ் இதுதான் பிரிட்டிஷ் இந்தியா. இதில் இல்லாத மற்ற பகுதி இந்தியாவில் இருந்தது. அது என்ன இந்தியா என்றால், சமஷ்டி இந்தியா என்பார்கள்.

இந்தியாவிற்குள்ளேயே பிரிட்டிஷ் ஆளாத பிற பகுதிகளும் இருந்தன. திருவிதாங்கூர் மகாராஜா சமஸ்தானம், அய்தராபாத் நிஜாமுனுடைய சமஸ்தானம், மைசூர் மகாராஜா சமஸ்தானம் போன்ற பல பகுதிகள், பிரிட்டிஷ் ஆட்சிக்குக் கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள்; ஆனால், பிரட்டிஷாரின் ஆட்சி நிர்வாகம் இருக்காது அங்கு.

பிரிட்டிஷ் இந்தியா என்றால், ஒட்டுமொத்த இந்தி யாவும் பிரிட்டிஷ்காரர்களின் அதிகாரத்தில் இருந்தது என்று அர்த்தமில்லை.

ஒருவரை மதராஸி என்று சொன்னால், அவர் சென்னையைச் சேர்ந்தவர் என்று அர்த்தமல்ல. மதராஸ் பிரசிடென்சியை சேர்ந்தவர் என்று அர்த்தம். அவர், தெலுங்கு பேசுகிறவராக இருக்கலாம்; கன்னடம் பேசுகிறவராக இருக்கலாம்; மலையாளம் பேசுகிறவராக இருக்கலாம்; தமிழனாகவும் இருக்கலாம்.

மேற்சொன்ன நான்கு மொழிகளில் எந்த மொழியை வேண்டுமானாலும் பேசக்கூடியவராக இருக்கலாம்.

மொழிவாரி மாநிலமாகப் பிரிக்கப்பட்ட பிறகு, எஞ்சிய பகுதி மெட்ராஸ் என்றே அழைக்கப்பட்டது.

ஒழுங்குமுறைச் சட்டம்!

ஒழுங்குமுறைச் சட்டம் என்ன சொல்கிறது என்றால், அதற்காக இரண்டு வழக்கை இந்நூலாசிரியர் எடுத்துக்கொள்கிறார்.

முதல் வழக்கு, ஒருவர் முஸ்லிமாக மாறி விட்டார். பிரிட்டிஷ் அரசுக்கும் – நபி ஷாகிப் என்பவருக்குமிடை யில், 1883 ஆம் ஆண்டு ஒரு வழக்கு நடக்கிறது.

‘தி குயின் Vs நபி ஷாகிப்’ வழக்கு.

அந்த முஸ்லிம் நபர், ஒரு சிறு திருட்டு வழக்கு. அதற்காக அவருக்கு சட்டகத்திற்குள் நிற்கின்ற (ஸ்டாக்ஸ்) தண்டனையைக் கொடுக்கிறார்கள்.

ஆனால், தண்டனை கொடுக்கப்பட்ட அவர், ‘‘நான் கீழ்ஜாதியில்லை. நான் முஸ்லிம்’’ என்று முறை யிடுகிறார்.

மதம் மாறினாலும்கூட,
ஜாதிதான் எங்களுக்கு அளவுகோல்!

அவர்கள் என்ன தீர்ப்புக் கொடுக்கிறார்கள் என்றால், ‘‘நீ மதம் மாறினாலும்கூட, ஜாதிதான் எங்களுக்கு அளவுகோல். நீ மதம் மாறிய பிறகு, அதே ஜாதீய கலாச்சாரங்களை, ஆச்சாரங்களை நீ பின்பற்றுகிறாயா, சமூகத்தில். உன்னுடைய சமூகத் தகுதி என்ன? உன்னுடைய பொருளாதார நிலை என்ன? உனக்கு நிலம் இருக்கிறதா? என்பதையெல்லாம் பார்த்து, முஸ்லீமாக இருந்தாலும், நீ பழைய ஜாதி முறையைப் பின்பற்றினால், அந்த சமூகத்தோடு இயைந்து வாழ்ந்தால், உனக்கு அந்தத் தண்டனை உண்டு’’ என்று சொல்கிறார்கள்.

மனுஸ்மிருதியிலிருந்துதான்…

அப்படியென்றால், கீழ்ஜாதியினருக்கு மோசமான தண்டனையைக் கொடுக்கவேண்டும் என்கின்ற சிந்தனை எங்கிருந்து வருகிறது? மனுஸ்மிருதியிலிருந்து வருகிறது.

நாடு விடுதலை பெற்ற பிறகும், அந்நிலையே நீடிக்கிறது. அப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து, நடைமுறைப்படுத்தும்போது, இந்த வழக்குகள் வருகிறது.

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *