பீகாரில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக, ஆளும் பாஜக மற்றும் அய்க்கிய ஜனதா தளம் (JDU) கூட்டணி, பல்வேறு புதிய திட்டங்களின் கீழ் வாக்காளர்களுக்கு நேரடியாகப் பணம் செலுத்தி வருகிறது. ரிக்ஷா ஓட்டுநர்கள், முதியோர், பத்திரிகையாளர்கள், மற்றும் வேலையில்லா பட்டதாரிகள் என பல தரப்பினரின் வங்கிக் கணக்குகளில் இந்தத் தொகை செலுத்தப்பட்டு வருவதாகப் பரவலாக பேசப்படுகிறது. ஆனால், இந்தத் திட்டங்களுக்கான நிதி ஆதாரம் என்ன, தேர்தலுக்குப் பிறகு இவை தொடருமா என்பது குறித்து எந்த விளக்கமும் இல்லை.
பலதரப்பட்டோருக்கு நிதி உதவி
‘ரிக்ஷா பழுதுபார்க்கும் உதவித் தொகை’: ‘ரிக்ஷா மராமத் பத்தா’ என்ற பெயரில், சைக்கிள் ரிக்ஷா ஓட்டுநர்களுக்கு ரூ.3000 வழங்கப்படுகிறது. பாட்னா உயர் நீதிமன்றத்தில் தட்டச்சராகப் பணிபுரியும் ஒருவரின் வங்கிக் கணக்கிலும் இந்தத் தொகை வந்துள்ளது.
இதுகுறித்து அவர் உள்ளூர் பாஜக பிரமுகரிடம் கேட்டபோது நீ ஒரு ரிக்ஷா வாங்கி அதை பழுதுபார்க்க இந்த பணத்தை பயன்படுத்திக் கொள் என்று கூறியதோடு மட்டுமல்லாமல், “மோடி அனுப்பிய பணம், தாமரைக்கு வாக்களியுங்கள்” என்று மிரட்டும் தொனியில் கூறப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
இதுவரை சொற்ப முதியவர்களுக்கு வெறும் ரூ.300 வழங்கப்பட்டு வந்த முதியோர் உதவித்தொகை, தற்போது ஆயிரக்கணக்கானோரின் வங்கிக் கணக்குகளில் ரூ.6,000 ஆகச் செலுத்தப்பட்டுள்ளது. தர்பங்காவைச் சேர்ந்த 22 வயது பட்டதாரி ஒருவருக்கும் இந்தத் தொகை கிடைத்துள்ளது.
‘பத்திரிகையாளர்கள் ஊக்கத்தொகை’ என்ற பெயரில் 20 ஆண்டுகளுக்கு முன்பு பத்திரிகை அலுவலகம் ஒன்றில் ஓட்டுநராகப் பணிபுரிந்த ஓட்டுநருக்கு பத்திரிகையாளர் உதவித்தொகை என்ற பெயரில் அவரது வங்கிக் கணக்கில் திடீரென ரூ.15,000 செலுத்தப்பட்டுள்ளது.
முறைசாரா தொழில்களாக கொத்தனார், சித்தாள், உள்ளிட்ட தினக்கூலிகளாக வேலைபார்க்கும் நபர்களுக்கு மாதம் ரூ.3000 என பணம் சென்றுகொண்டே இருக்கிறது. இந்தியாவிலேயே 16 கோடி மக்கள் கூலித்தொழிலாளர்களாக வேலைப்பார்க்கும் ஒரே மாநில பீகார் மட்டுமே. மக்கள் தொகையில் கால் வாசி பேர் தினக்கூலிகள் என்றால் அந்த மாநிலத்தின் நிலை எவ்வளவு மோசமாக உள்ளது என்று தெரியவரும்
பிற திட்டங்கள்: வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ 1,000 கல்லூரி மாணவர்களுக்கு ரூ4,000 மற்றும் தினக்கூலிகளுக்கு மாதம் ரூ3,000 எனப் பல்வேறு திட்டங்களின் கீழ் பணம் வழங்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓய்வுபெற்ற அரசுப்பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதியத்திட்டம் அமல்படுத்துங்கள் என்று 4 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
பட்டதாரிகள் வேலை கொடுங்கள் என்று போராடி வருகின்றனர். ஆனால் திடீரென போவோர் வருவோருக்கு எல்லாம் ஆயிரக்கணக்கில் பணம் சென்றுகொண்டே இருக்கிறது.
தேர்தல் நெருக்கடி மற்றும் அரசியல் பின்னணி
பீகாரில் உள்ள 8 கோடி வாக்காளர்களில், சுமார் 4 கோடி பேரின் வங்கிக் கணக்குகளுக்கு இதுவரை பணம் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. பணம் செலுத்தப்பட்ட அனைத்து ைகபேசி எண்களுக்கும் “மறக்காமல் தாமரைக்கு வாக்களியுங்கள்” என்ற குறுஞ்செய்தியும் அனுப்பப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிரடி திட்டங்கள், அரசியல் ஆதாயங்களுக்காக மட்டுமே செயல்படுத்தப்படுகின்றன என்ற விமர்சனம் எழுந்துள்ளது. ஒருபுறம், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துமாறு பல ஆண்டுகளாகப் போராடி வரும் நிலையில், மறுபுறம் இந்தத் திடீர் நிதிப் பரிமாற்றங்கள் கேள்விகளை எழுப்பியுள்ளன.
முதலமைச்சர் நிதிஷ் குமார் கடந்த 10 மாதங்களாகப் பொது நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்துகொள்வதில்லை. அவர் வரும் நிகழ்ச்சிகள் அனைத்தும் அரசு நிகழ்ச்சிகளாகவே உள்ளன. அவரது பேச்சு சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுவதாகவும், பேசத் தொடங்கினால் உடனே நிறுத்தப்படுவதாகவும் விமர்சகர்கள் கூறுகின்றனர். இது, தேர்தல் நெருக்கடியின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தத் திடீர் பணப் பரிவர்த்தனைகள், பீகாரின் ஏழ்மை நிலையையும், தேர்தல் அரசியலில் பணத்தின் ஆதிக்கத்தையும் பிரதிபலிக்கிறது.