கீழடியை மகாபாரதத்தோடு தொடர்புபடுத்துவதா?
கீழடி மற்றும் மணலூர் ஆகிய பகுதிகளை மகாபாரதத் துடன் சம்பந்தமே இல்லாமல் தொடர்புபடுத்தும் சூழ்ச்சி நடக்கிறது என்றும், கீழடி அகழாய்வு அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்பு நிகழும் இத்தகைய சம்பவங்கள் தான் சந்தேகத்திற்குரியவை எனவும், மத்திய தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணா பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக சிந்துவெளி நாகரிகம் உலகுக்கு அறிவிக்கப்பட்ட நூற்றாண்டு நிறைவு கருத்தரங்கத்தில் அமர்நாத் ராமகிருஷ்ணா பேசியது வருமாறு:
‘‘நாகரிகங்கள் என்பவை மனிதர்களால் உருவாக்கப்பட்டவை. கடவுள் எந்த நாகரிகத்தையும் படைக்கவில்லை. அப்படி மனிதர்கள் உருவாக்கிய நாகரிகத்தை, புனைவுகளால் கட்டமைத்து கதைகளை வரலாறாக மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.
அதை மறுதலிக்க வேண்டிய கட்டாயத்தில் இன்று நாம் இருக்கிறோம். வரலாறு என்பது ஆதாரங்களின் அடிப்படையில் தான் கட்டமைக்கப்பட வேண்டும். ராமாயணத்திலும், மகாபாரதத்திலும் எத்தனையோ ஆதாரங்கள் இருக்கின்றன என்றெல்லாம் என்னிடம் விவாதத்திற்கு வந்தவர்கள் உண்டு.
மகாபாரதத்தை தொடர்புப்படுத்தி கட்டுரை
மகாபாரதத்தில் பாண்டிய மன்னன் பற்றிய குறிப்பு இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்கள். கீழடி முதல் இரண்டுகட்ட அகழாய்வு அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால், அதற்கு முன்பாக அண்மையில் அண்ணா பல்கலைக்கழக சுற்றுச்சூழல் துறையைச் சார்ந்த சில ஆய்வு மாணவர்கள் ‘மணலூர் கீழடி மகாபாரதம்’ என கீழடியோடு, மகாபாரதத்தை தொடர்புப்படுத்தி ஒரு கட்டுரையை எழுதிவிட்டார்கள்.
கீழடி அகழாய்வு அறிக்கை இதுவரை வெளியாகவில்லை. அதில் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது என்று கூட யாருக்கும் தெரியாது. அப்படி இருக்கும் சூழலில், அதற்கு முன்னால் ஒரு புனைவு கட்டமைக்கப்படுகிறது என்பதைதான், நாம் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். இதை கண்டிப்பாக நாம் முறியடித்தாக வேண்டும்.
வரலாற்றை ஆதாரமாக பார்ப்பது இல்லை
மணலூரும், கீழடியும் தொடர்பே இல்லாமல், மகாபாரதத்தோடு ஒப்பிடப்படுகிறது. மகாபாரதத்திற்கும் கீழடிக்கும் என்ன தொடர்பு? அவ்விடத்தை தோண்டி அகழாய்வு செய்த நான் சொல்கிறேன். எனக்கே அது தெரியவில்லை. கி.பி. 13ஆம் நூற்றாண்டில் கீழடி அருகே உள்ள கொந்தகையில் கிடைத்த குந்தி தேவி சதுர்வேதி மங்கலம் என்ற குறிப்பினை வைத்துக்கொண்டு மகாபாரதத்தோடு தொடர்புபடுத்த முயல்கிறார்கள்.
வரலாற்றை ஆதாரப்பூர்வமாக பார்க்கின்ற செயல்பாடு இங்கு இல்லை.
கீழடி அருகே உள்ள மணலூர் என்ற கிராமம், இதற்கு முன்னர் மகாபாரதத்தோடு தொடர்புபடுத்தப்பட்டது தான். கடந்த 1880 ஆம் ஆண்டு ரஷியாவை சேர்ந்த சமஸ்கிருத ஆய்வாளர் போஸ்டோ ஒபெட் என்பவர் மணலூரையும், மகாபாரதத்தையும் ஒப்பீடு செய்து ஆய்வு
மேற்கொண்டவர்.
வரலாற்றை புனையும் சமஸ்கிருத பேராசிரியர்கள்
இவர், சென்னை பிரசிடென்சி கல்லூரியில் சமஸ்கிருத பேராசிரியராகப் பணியாற்றியவர். மகாபாரதத்தில் அர்ஜுனனின் கதையில் வரும் சித்ராங்கதா என்ற புனைவோடு, மணலூரை தொடர்புப்படுத்தி இருப்பார். ஆனால், இந்த சித்ராங்கதா என்பது மணிப்பூரோடு தொடர்பு கொண்ட இடமாகும். இன்றைக்கும் மணிப்பூரின் பழங்குடி மக்கள் சித்ராங்கதாவை கலையாக நடத்துகின்றனர்.
அந்த நாடகத்தில் அர்ஜுனன் மணிப்பூருக்கு வந்ததாகவும் அங்குள்ள பெண்ணை திருமணம் செய்ததாகவும் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்ததாகவும் காட்சி இருக்கும். அந்த இடம் தான் மணிப்புரா என்று அழைக்கப்பட்டது. அந்த மணிப்புரா, மணிப்பூர் கிடையாது, அது மணலூர் தான் என்று ஒப்பீடு செய்து ரஷ்யன் சமஸ்கிருத அறிஞரால் புனைந்துரைக்கப்பட்டது. இந்த சமஸ்கிருத பேராசிரியர்களின் வேலையே வரலாற்றை எப்படி புனைந்து கட்டமைப்பது? என்பதாகத் தான் இருக்கும்.
புனைவுகளுக்கு மாறான தொல்லியல் ஆதாரங்கள்
வரலாறு என்பது இங்கு புனைவாகத்தான் உள்ளது. அதை இலக்கியத்தின் வழியாக இங்கு மேற்கொள்கிறார்கள். தொல்லியல் சான்றுகளை வைத்து அவ்வாறு செய்ய முடியாது. தொல்லியல் ஆதாரங்கள் அனைத்தும் புனைவுகளுக்கு மாறாகத்தான் இருக்கும். ஆனால் மாறாக நமது சங்க இலக்கியங்கள் அனைத்தும் மனித வாழ்வியலை பதிவு செய்தவை. இது தான் மற்ற இலக்கியங்களுக்கும், தமிழ் இலக்கியங்களுக்கும் உள்ள வேறுபாடு. அதில் புனைவுகள் கிடையாது. மக்களை பற்றியும், மக்கள் வாழ்வியலைப் பற்றியும், மனிதத்தை பற்றியும், பேசுகின்ற
இலக்கியங்களை தவிர எந்த மதத்தைப் பற்றியும, மத கருத்துக்களை பற்றியும் எந்த திணிப்பையும் செய்யவில்லை. சிவன், முருகன் என்பதெல்லாம் இடைச்செருகளால் வந்தவை. ஆகையால் காலம் காலமாக இலக்கியங்களில் இடைச்செருகல்கள் என்பது இருந்து கொண்டு தான் இருக்கிறது.
கீழடிக்கு முந்தைய ஆய்வு யாருக்கும் தெரியாது
தமிழ்நாட்டில் பல இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் அவை யாவும் மறக்கக் கூடியவை அல்ல. கீழடிக்கு முன்னால், கீழடிக்கு பின்னால் என நாம் மேற்கொண்டு ஆய்வுகளை பிரித்துக் கொள்ள வேண்டும். கீழடிக்கு முன்னர் நடந்த ஆய்வுகள் எல்லாம் யாருக்கும் தெரியாது.
ஆதிச்சநல்லூர் அகழாய்வு, 1876 ஆம் ஆண்டில் இருந்து தோண்டப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் குறித்து இதுவரை பொதுவெளியில் வந்துள்ளதா? என்றால் கேள்விக்குறி தான். அது கூட மதுரை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அதை படித்துப் பார்த்தால் படிப்பவருக்கும் புரியாது, அதனை அகழாய்வு செய்தவருக்கும் புரியாது. நூறாண்டுகளுக்கு பிறகு ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை இயக்குநர் சத்தியமூர்த்தியால் 2 ஆண்டுகள் ஆய்வுகள் செய்யப்பட்டன.
தோண்டியவர் வேறு… அறிக்கை கொடுத்தவர் வேறு…
அப்போது ஆஸ்திரேலியாவை சேர்ந்த அறிவியலாளர் ராகவன் ஆதிச்சநல்லூர் அகழாய்வுக்கு மிகவும் துணை புரிந்தார். அங்கு கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளை ஆய்வு செய்ய ராகவனுக்குத் தான் அனுப்பி வைத்தனர். ஆனால் அந்த எலும்புக்கூடுகள் ஆய்வு செய்யப்பட்ட அறிக்கை ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையோடு இணைக்கப்படவில்லை. அப்படியானால் அங்கிருந்த மனிதர்கள் யார்? ஏனென்றால் பல வகையான மக்கள் குழுக்கள் வாழ்ந்த இடம் ஆதிச்சநல்லூர்.
இதுகுறித்து ராகவன் ‘நான் என்றைக்கோ அது குறித்து அறிக்கையை சமர்ப்பித்து விட்டேன்’ என்று அவர் அளித்த பேட்டி தான் அதிர்ச்சி தரக்கூடியது. ஏனென்றால் தோண்டியவர் வேறு. அறிக்கை கொடுத்தவர் வேறு. இந்த சூழ்ச்சியை தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் அகழாய்வு செய்தவர்களுக்குத்தான் தெரியும் அங்கு என்ன கிடைத்தது என்பது. இதையெல்லாம் தான் நாம் எதிர்க்கிறோம்.
இது எப்படி முடியும் என்று கொஞ்சம் சொல்லுங்கள்?
அகழாய்வு அறிக்கை என்பது அதை மேற்கொண்டவரால் தான் எழுதப்பட வேண்டும், வெளியிடப்பட வேண்டும். அறிக்கை கொடுத்தவரை விமர்சனம் செய்யலாம். அதிலொன்றும் தவறில்லை. ஆனால் நான் கொடுத்த அறிக்கை சரி இல்லை என்று ஆய்வே மேற்கொள்ளாத ஒருவர் எப்படி சொல்ல முடியும்? என்பது தான் என்னுடைய கேள்வி” என்று அமர்நாத் ராமகிருஷ்ணா பேசினார்.