‘புகழ்’ என்பதற்கு மற்ற இரண்டைவிட (பண வேட்டை, பதவி வேட்டை) தனித்தன்மை உண்டு.
‘புகழ்’ வருவதில் இருவகை உண்டு.
- இயற்கையாக, தானே வருவது!
- விலை கொடுத்து செயற்கையாக வாங்கி அணிந்து கொள்வது
முன்னது பாராட்டிற்குரியது; பின்னது ஏற்க இயலாதது!
இது தேடித் தேடி, ஓடி ஓடி,திட்டமிட்டு தனது முகமன் பேர்வழிகளால் துவக்கப்பட்டது. (‘Flattering’) நிலைக்காது.
பெருமிதத்தின் பயனால் ஏற்படும் இன்ப ஊற்றாக அமையும்போது அதற்கு ஒரு நிரந்தர நிலைத் தன்மை ஏற்படும்.
புகழ் – இயற்கையாக அமைந்து, தானே வந்து கதவைத் தட்ட வேண்டுமே தவிர, வேட்டையாடி, லஞ்சம் கொடுத்து, விளம்பரங்களை ஆடம்பரங்களாக்கி அதனால் பெறப்பட்டால் அது நிற்கவே நிற்காது!
அது அற்பாயுளில் மறைவது உறுதி!
பல அரசியல்வாதிகள், ‘பெரிய மனிதர்கள்‘ என்று பேசப்படுபவர்கள் வியக்கத்தக்க வினைஞர்களாக – செயல் செய்பவர்களாக இல்லாமல் – தங்கள் பண வேட்டை மூலம் கிட்டிய வசதியை விலையாகக் கொடுத்து வாங்கினால் – அது வானவில் போல் தோன்றினாலும், காலத்தால் நிற்காது!
‘கொஞ்ச காலப் பெருமை’ என்ற வர்ண ஜாலங்களோடு அது முடிந்துவிடும்.
மானிடத்தின் அருஞ்சாதனையாளர்களில் புகழாடையால் போர்த்தப்பட்டு, புகழேணியின் உச்சத்தை அடைகிறவர்களுக்கு அவர்களது அரிய சாதனை அல்லது அவர்களது கைம்மாறு கருதாத தொண்டறத்தின் விழுமிய விளைவாக – அது தானே அவர்களைச் சென்றடைந்து, அவனியின் பாராட்டுகளைக் குவிக்கவே செய்கிறது!
மனிதர்களைப் பாராட்டுவது, உற்சாகப் படுத்துவது, ஊக்குமூட்டி அவர்களுக்கு புகழ் படிக்கட்டுகளை அமைத்து மேல் தளத்திற்கு கொண்டு செல்லல் அவசியம் தேவை.
அதன் முக்கிய அம்சம் என்னவென்றால், அவர்களது தன்னலம் துறந்த பார்வையும் – பொது நோக்கும் போக்கும் செயலுமே ஆகும்.
அவர்கள் எதையும் விரும்பாததே அவர்கள் புகழுக்கு முழுத் தகுதியானவர்கள் என்பதற்கு தக்க அடையாளம் – தகுதிக்குக் கிடைக்கும் ஊக்கம், பெருமை என்பதைத் தாண்டி அதிலேயே அவர்கள் ஒருபோதும் மூழ்கி – போதையில் கிடக்கும் மனிதர்களாகி விட மாட்டார்கள்.
தகுதியற்றவர்களுக்கு ‘புகழ்’ என்பது ஒரு போதைப் பொருள் – டாஸ்மாக் கடைகளில் வாங்கும் மதுபோல!
தகுதியுள்ளவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அகிலம் பாராட்டி மகிழ்வது, அத்தகையவர்களின் தொண்டறத்தால், நாடும் – உலகமும் – பரந்த மானிடமும் பெற்ற பயன்!
சாக்ரட்டீஸ் என்ற கிரேக்க அறிஞர், விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டார்.
அவர் செத்து விட்டாரா? இல்லையே!
தந்தை பெரியார் இன்றும் எவ்வளவு கொச்சைப் படுத்தப்படுகிறார் – அவரது கொள்கை எதிரிகளால்! வீழ்ந்தாரா?
அவர் (எப்போதும்) வாழ்கிறார் என்பதற்கு அவரது எதிரிகளின் இன்றைய அச்சம்தானே சரியான சாட்சி – இல்லையா!
அவருக்குக் கிடைத்தது உண்மைப் புகழ்; வேட்டையாடிப் பெறாத – தானே பூத்து, காய்த்து, கனிந்துவந்த புகழ்.
அண்ணல் காந்தியடிகள் மறைந்தாரா? இன்றும் புகழுடன் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறார்.
மார்க்ஸ் மறைந்தாரா? தொண்டறம் மூலம் புகழ் மகுடம் சூட்டப்பட்டவர்களுக்குப் புகழ் தற்காலிகம் அல்ல – பறிக்கப்பட முடியாத ஓர் அதிசய அடையாளம்.
காலம் பாராது, கடமையாற்றி, அந்த ஒப்புவமையற்ற தொண்டறச் செம்மல்களுக்கு காலமே தலை வணங்கி வாழ்த்தி – பாதுகாப்பு அரண் ஆகிறது!
‘கீழடிகள்’ புதைந்தாலும், அவை தோண்டி எடுக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளின் வரலாற்றை, நனி நாகரிகத்தினைச் சிறப்புச் செய்வதுபோல, அவை சமூகத்தின் சாகா சரித்திர மாண்புக்குரியவை.
உண்மைப் புகழின் உன்னதம் இதுதான்!
(தொடரும்)