‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியின் பெரும் சிறப்பு!

சென்னையில் நேற்று (25.9.2025) மாலை நேரு உள் விளையாட்டு அரங்கில் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ எனும் தலைப்பில் நடைெபற்ற நிகழ்ச்சி நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்குக் கூடிய ஒன்றாகும்.

தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலின், தெலங்கானா முதலமைச்சர் மாண்புமிகு ரேவந்த்ரெட்டி, தமிழ்நாடு துணை முதலமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் மற்றும் அமைச்சர் பெரு மக்கள், தலைமைச் செயலாளர், அரசு அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசால் பயன் பெற்று உயர் கல்வியை எட்டிய இருபால் மாணவர்கள் பங்கேற்ற அரும் பெரும் விழாவாக இது அமைந்திருந்தது. அரசு பள்ளியில் படித்த – உயர் கல்வியில் சாதனை செய்த மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டத்தால் அரசு உதவி பெற்று, அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள், அயல்நாடுகளிலும் உயர் படிப்புப் படித்துக் கொண்டிருக்கும் இருபால் மாணவர்கள், மருத்துவம், பொறியியல் படித்துக் கொண்டிருக்கும் மற்றும் பல்வேறு உயர் பாடங்களைப் படித்துக் கொண்டிருக்கும் இருபால் மாணவர்கள் தெரிவித்த கருத்துகள் நெஞ்சை நெகிழ வைத்தன.

அன்றாடம் கூலி வேலை செய்து கொண்டிருக்கும் பெற்றோர்களின் பிள்ளைகள், முகச் சவரம் செய்யும் தொழிலை மேற்கொண்டிருக்கும் தொழிலாளியின் மகன் என்று இப்படி அடுக்கடுக்காகச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இருபால் மாணவர்கள் தங்களின் குடும்ப வறுமையை எடுத்துச் சொன்னபோது, அவர்கள் மட்டுமல்ல, பார்வையாளர்களாக அமர்ந்திருந்தவர்களின் கண்களும் உணர்ச்சி மேலீட்டால் கசிந்ததைக் காண முடிந்தது.

புதுமைப் பெண் திட்டத்தாலும், தமிழ்ப் புதல்வன் திட்டத்தாலும், வெளிநாடுகளுக்குச் சென்று படித்த, தமிழ்நாடு அரசு நீட்டிய பொருளாதார உதவிக்கரத்தால், தாங்கள் உச்சநிலைக்கு உயர்ந்திருக்கிறோம் – அதற்காக நமது முதலமைச்சருக்கு வெறும் நன்றி என்று சொல்லி சமாதானம் அடைய முடியாது – அதற்கு மேலும் சொல்ல வேண்டும் என்று தழுதழுத்தக் குரலில் மாணவ – மாணவிகள் பேசிய போது – அரங்கமே அமைதியின் ஆழ்கடலில் மூழ்கியது.

2025–2026 கல்வியாண்டு ‘புதுமைப் பெண்’ மற்றும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டங்கள் ெதாடங்கி வைக்கப்படும்; அதன் மூலம் 2,57,000 மாணவர்கள் பயனடைய இருக்கின்றனர். எத்தகைய சிறப்பான செயல்பாடு! மாணவர்களுக்கு வங்கி ‘பற்று அட்டைகள்’ (Debit Cards) வழங்கப்படும் என்ற தகவலும் உண்டு.

‘காலை சிற்றுண்டித் திட்டம்’ பற்றியும் பேசப்பட்டது. இந்தத் திட்டத்தினால் மாணவர்களின் சேர்க்கையின் மடங்கு அதிகரித்துள்ளது. ‘இடைநிற்றல்’ என்ற பேச்சுக்கே இடமில்லை.

+2 முடித்து கல்லூரிக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 75 விழுக்காடு என்ற நிலையை எட்டியது.

விழாவில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சரும் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறனும், வறுமையின் அடித்தளத்தில் உழன்ற மக்கள் முதல் தலைமுறையாகக் கல்விக் கூடத்தில் காலடி பதித்த மக்கள், இன்றைக்கு இந்த அளவுக்கு உயர்ந்துள்ளனர் என்றால், இதற்கு எத்தகைய தடைகள் – ஆதிக்க சக்திகளின் முட்டுக்கட்டைகளையும் குறிப்பிடத் தவறவில்லை.

அரசு விழாவாக இல்லாமல் வேறு விழாவாக இருந்தால் அந்த ஆதிக்க சக்திகளின் முட்டுக்கட்டைகள் பற்றி வெளிப்படையாகப் பேசி இருக்க முடியும்.

‘நீட்’ தேர்வு என்பதும், ‘புதிய கல்விக் கொள்கை’ என்பதும் EWS என்ற பொருளாதாரத்தில் நலிந்த உயர் ஜாதியினர்களுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு என்ற சட்ட விரோத சட்டம் பற்றி எல்லாம் இந்த அரசு விழாவில் எடுத்துக் கூற முடியாவிட்டாலும், அதெல்லாம் உண்மை என்பதை மறுக்க முடியாது.

கல்விக்குக் கொடுக்க வேண்டிய நிதி ரூ.2,152 கோடியை ஒன்றிய அரசு கொடுக்க மறுத்தநிலையிலும் தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ அரசின் தலைவர் – சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் ‘‘10 ஆயிரம் கோடி ரூபாய்க் கொடுத்தாலும் சரி, ஒன்றிய அரசின் புதிய கல்வித் திட்டத்தை ஏற்க மாட்டோம்’’ என்று அறுதியிட்டு, உறுதியாகச் சொன்னதற்குச் சித்தாந்த ரீதியான முதுகெலும்பு பலம் வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் செயற்பாட்டில் இருக்கும் பள்ளி மாணவர்களுக்கான ‘மதிய உணவுத் திட்டம்’ 1920ஆம் ஆண்டிலேயே நீதிக்கட்சி ஆட்சிக் காலத்திலேயே (சர். பிட்டி தியாகராயர் சென்னை மாநகராட்சித் தலைவராக இருந்தபோது) கொண்டு வரப்பட்டது என்ற திராவிட இயக்க வரலாற்றின் தொடக்கத்தையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

காமராசர் ஆட்சியிலும் ‘மதிய உணவுத் திட்டம்’ விரிவுபடுத்தப்பட்டதையும் – அரசியலைத் தாண்டி ஓர் அரசு விழாவில் பெருமிதத்துடன் முதலமைச்சர் சுட்டிக் காட்டியது – நமது முதலமைச்சரின் கண்ணியமான நனி நாகரிகம் அரசியலுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

‘திராவிட மாடல்’ அரசின் மாணவர்களுக்கான ‘காலை சிற்றுண்டி உணவுத் திட்டம்’ இந்தியாவிலேயே முதன்மையானதாகும். இந்தியாவில் மிகச் சிறந்த முதலமைச்சர் என்ற பெருமை நமது முதலமைச்சருக்குக் கிடைத்தது என்றால் சாதாரணமா?

நேற்று (25.9.2025) மாலை நடைபெற்ற ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சி எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது!

நிகழ்ச்சியில் பங்கேற்ற தெலங்கானா மாநில முதலமைச்சர்  மாண்புமிகு ரேவந்த் ரெட்டி, ‘‘தமிழ்நாட்டின் இத்தகைய முன்னோடித் திட்டங்களை எங்கள் மாநிலத்திலும் வரும் கல்வி ஆண்டிலிருந்து செயல்படுத்துவோம்’’ என்று சொல்லும் அளவுக்கு அந்தக் தாக்கம் பிளீரிட்டு விட்டது.

கல்விதான் தனி மனிதனை மட்டுமல்ல; ஒரு சமுகத்தையே, ஒரு நாட்டையே உயர்த்தக் கூடிய ஆற்றல் பெற்றது.

அதனால்தான் நமது முதலமைச்சர் விழாவில் சொன்னாரே – ‘சதிக்குக் கால் முளைத்து சாதி என்னும் பேரால் நம் மக்களின் கல்விக் கண் குத்தப்பட்டது’ என்ற கருத்துப்படப் பேசியதில் உள்ள சூசகம் புரிந்து கொள்ளத்தக்கதே!

சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவை நெருங்கிக் கொண்டிருக்கும் கால கட்டத்தில் கல்வி உரிமையைப் பெறுவதற்காக திராவிட இயக்கம் எத்தனை எத்தனைப் போராட்டங்களை நடத்தி வந்திருக்கிறது. ஹிந்தி எதிர்ப்பானாலும் சரி, குலக் கல்வித் திட்டமாக இருந்தாலும் சரி தொடர்ந்து எதிர்த்து வெற்றியும் பெற்றுள்ளோம்.

கல்விக்கு முன்னுரிமையை ‘திராவிட மாடல்’ அரசு கொடுக்கிறது. 2025 –2026 நிதி நிலை அறிக்கையில் கல்விக்காக தி.மு.க. அரசு ஒதுக்கிய நிதி 20 விழுக்காடாகும். ஒன்றிய பிஜேபி அரசு கல்விக்காக ஒதுக்கீடு செய்யும் நிதி எவ்வளவு தெரியுமா? வெறும் 4.5 விழுக்காடே!

‘திராவிட மாடல்’ அரசின் சாதனைகள் இன்னும் முழுமையாக மக்களைச் சென்றடையவில்லை; அப்படி சென்று இருந்தால் சில உதிரிகள் எல்லாம் நேற்றுப் பெய்த மழையில் முளைத்த காளான்கள் எல்லாம் மார்தட்ட முடியுமா?

குறிப்பாக – சிறப்பாக நேற்று மாலை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற நிகழ்ச்சி காணொளி மூலம் எங்கெங்கும் ஒளிபரப்பச் செய்தால் நற்பயன்கிட்டும் என்பது நமது உறுதியான கருத்தாகும்.

அரசுப் பள்ளி என்றால் அலட்சியமாகப் பார்க்கும் நிலையைமாற்றி, அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் பெரும் சாதனைகளை நிகழ்த்திக் காட்டுவார்கள் என்பதை நிரூபிக்கும் விழாவாகவும் அமைந்தது முக்கியமாக சுட்டிக் காட்டத் தகுந்ததாகும்.

நிகழ்ச்சியை வெகு நேர்த்தியாக ஏற்பாடு செய்தவர்களுக்கு வாழ்த்துகள் – பாராட்டுகள்!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *