பகுத்தறிவாளர் சார்லஸ் பிராட்லா
பிறந்த நாள் இன்று (26.9.1833)
சார்லஸ் பிராட்லா (Charles Bradlaugh) ஒரு புகழ்பெற்ற ஆங்கில அரசியல் கிளர்ச்சியாளர், பேச்சாளர், மற்றும் பகுத்தறிவுவாதி (Free thinker) ஆவார். அவர் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் மதச் சார்பற்ற கொள் கைகளுக்காகப் போராடியவர்.
சார்லஸ் பிராட்லா செப்டம்பர் 26, 1833 அன்று இங்கிலாந்தில் உள்ள லண்டன், ஹோக்ஸ்டன் (Hoxton) என்னுமிடத்தில் பிறந்தார்.
சார்லஸ் பிராட்லா தனது வாழ்நாள் முழுவதும் தனிமனித உரிமைகள், மதச்சார்பின்மை (Secularism), மற்றும் சமூக சீர்திருத்தங்களுக்காக உழைத்தார்.
1866 ஆம் ஆண்டில், அவர் தேசிய மதச்சார்பற்ற சமூகம் (National Secular Society – NSS) என்ற அமைப்பை நிறுவினார். இதன் மூலம் அவர் இறைமறுப்பு, பகுத்தறிவு மற்றும் திருச்சபையிலிருந்து அரசைப் பிரித்தல் போன்ற கொள்கைகளை நாடு முழுவதும் பரப்பினார்.
அவர் “அய்கானோகிளாஸ்ட்” (Iconoclast) என்ற புனைப் பெயரில் பல பகுத்தறிவுக் கட்டுரைகள் மற்றும் துண்டுப் பிரசுரங்களை எழுதினார்.
1880 இல் அவர் நார்தாம்ப்டன் தொகுதியில் இருந்து பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினராகத் (Member of Parliament) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால், அவர் நாத்திகர் என்பதால், நாடாளுமன்றத்தில் பாரம்பரியமாக எடுக்கப்படும் “கடவுள் சாட்சியாக” என்ற மத ரீதியான உறுதி மொழியை எடுக்க மறுத்தார். அதற்குப் பதிலாக, மனசாட்சிப்படி உறுதிமொழி (Affirmation) எடுக்க அனுமதி கேட்டார்.
இதன் காரணமாக, அய்ந்து ஆண்டுகளுக்கும் மேலாக அவரால் தனது இருக்கையில் அமர முடியவில்லை; அவர் பலமுறை மீண்டும் தேர்ந்தெடுக் கப்பட்டாலும், அவரது தேர்வு ரத்து செய்யப்பட்டது.
பிராட்லாவின் இந்த விடாப்பிடியான சட்டப் போராட்டத்தின் விளைவாக, 1886 இல் அவர் சபையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், 1888 ஆம் ஆண்டில், உறுப்பினர்கள் மதச் சார்பற்ற உறுதிமொழியை (Oaths Act) எடுத்துக்கொள்ள அனுமதிக்கும் விதமாக பிரிட்டிஷ் அரசியல் சட்டம் திருத்தப்படுவதற்கு அவர் காரணமாக இருந்தார்.
மத நம்பிக்கையற்றவர்களும், கடவுளின் பெயரால் உறுதிமொழி எடுக்க விரும்பாதவர்களும் சட்டமன்றம் மற்றும் நீதிமன்றங்களில் மனசாட்சியின் பெயரால் பதவி ஏற்க அல்லது சாட்சியமளிக்க வழிவகுத்ததில் பிராட்லாவின் பங்கு மகத்தானது.
மதச் சார்பற்ற கொள்கைகளைத் தவிர, அவர் கருத்தடை பற்றிய தகவல்களைப் பிரசுரம் செய்ததற்காக நீதிமன்றத்தில் வழக்குகளைச் சந்தித்தார்.
தொழிலாளர் நலன்கள், அயர்லாந்தின் சுயாட்சி மற்றும் இந்தியாவில் இருந்த ஜாதிய வேற்றுமைகள் குறித்து கடுமையான கருத்துகளை தெரிவித்திருந்தார்.
சார்லஸ் பிராட்லா அவரது காலத்தில் இருந்த பழமைவாத நம்பிக்கைகளுக்கு எதிராகத் துணிச்சலாக நின்று, சட்டத்தின் ஆட்சி மற்றும் தனிமனித சுதந்திரம் ஆகியவற்றுக்காகப் போராடிய ஒரு சின்னமாக விளங்குகிறார்.