சென்னை, நவ.10 ”ஸநாதனம் குறித்து பேசியதற்கு, நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்கின்றனர். என்ன செய்தாலும், நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்; பேசியது பேசியது தான்; சட்டப்படி சந்திப்போம். நீதிமன்றம் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. எந்த மதத்தையும் இழிவுபடுத்தி பேசவில்லை,” என, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.
கலைஞர் நூற்றாண்டையொட்டி, சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், அமைச்சர் உதயநிதி பேசியதாவது: கலைஞர் நூற்றாண்டு விழாவில், 100 நிகழ்ச்சிகள் நடத்த, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு இலக்கு நிர்ணயித்துள்ளார். அவர், அமைச் சரவையில் ‘நம்பர் 1’ அமைச்சராக உள்ளார். மாவட்ட செயலர்களில் முதல் மாவட்ட செயலராக உள்ளார். நிகழ்ச்சிகள் நடத்துவதில், அவரை அடித்துக் கொள்ள ஆள் இல்லை.
கடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க., வெற்றிக்கு கட்சி நிர்வாகிகளே காரணம். அதேபோல வரும் மக்களவைத் தேர்தலில், மிகப் பெரிய வெற்றியை நீங்கள் தரப் போகிறீர்கள். திராவிட மாடல் அரசு என்றால், என்ன என்று கேட்கின்றனர். நான் வந்த போது, ஒரு பக்கம் தாய்மார்கள், ‘தம்பி தீபாவளி வாழ்த்து’ என்றனர். மற்றொரு பக்கம் இளைஞர் அணியினர், ‘ஈ.வெ.ரா., வாழ்க’ என்றனர். இதுதான் திராவிட மாடல் அரசு. இரண்டு மாதங்களுக்கு முன், மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட்டது. நான் பேசியது, இரண்டு நிமிடங்கள். நான் பேசாததை பேசியதாக கூறி பூதாகரமாக்கினர். நானாவது பேசினேன்; நான் பேசியதற்கு வழக்கு வந்தது. உட்கார்ந்து வேடிக்கை பார்த்த அமைச்சர் பி.கே. சேகர்பாபு மீதும் வழக்கு வந்துள்ளது. நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்கின்றனர். என்ன செய்தாலும் மன்னிப்பு கேட்க மாட்டேன். பேசியது பேசியது தான். சட்டப்படி சந்திப்போம். நீதிமன்றம் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. எந்த மதத்தையும் இழிவுபடுத்தி பேசவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.