நமது மாநாடு நாட்டோருக்கு ஓர் எடுத்துக்காட்டாக ஆக வேண்டும்!

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாட்டு வெற்றிக்குத் ‘‘தேனீக்களாக’’ உழைத்து வரும் கழகக் கடமை வீரர்களுக்கு நன்றி! எனது அன்பு வேண்டுகோள்!!
கழகப் பரப்புரைப் பேச்சாளர்கள், உரையைத் தயார் செய்து வாருங்கள்!
தோழர்களுக்கு ஒப்படைக்கப்பட்ட பணிகளை நேர்த்தியாக செய்திடுவீர்!!
நமது மாநாடு நாட்டோருக்கு ஓர் எடுத்துக்காட்டாக ஆக வேண்டும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாட்டு வெற்றிக்குத் ‘‘தேனீக்களாக’’ உழைத்து வரும் கழகக் கடமை வீரர்களுக்கு எனது அன்பு வேண்டுகோள்!  மாநாட்டில் உரையாற்றிடும் ஒவ்வொரு கழகப் பரப்புரைப்  பேச்சாளரும் குறிப்பிட்ட கால அளவுக்குள் உரையை முடிக்க, உரையைத் தயார் செய்து வாருங்கள்! நமது மாநாடு நாட்டோருக்கு ஓர்  எடுத்துக்காட்டாக ஆக வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

Contents

அவரது அறிக்கை வருமாறு:

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாட்டில் பங்கேற்கும் எம் கழகக் கடமை வீரர்களே!

செங்கை மாவட்டம், மறைமலை நகரில் நம் மாநாடு மகத்தான வரலாறு படைக்கப்பட விருக்கிறது.

 தேனீக்களாக மாநாட்டு வெற்றிக்கு உழைத்து வருகிறார்கள்!

எழுச்சியோடும், எல்லையற்ற மகிழ்ச்சி யோடும், நமது கழகப் பொறுப்பாளர்கள் – குறிப்பாக, செங்கற்பட்டு, தாம்பரம், காஞ்சி மாவட்டத் தோழர்கள், மகளிர் தோழர்கள், இளை ஞர்கள் தேனீக்களாகி, ஆர்வத்துடன் மாநாட்டு வெற்றிக்கு உழைத்து வருகின்றனர் நாளும்!

இந்த நிலையில், தமிழ்நாடு முழுவது மிருந்தும் ஏராளமான கழகத் தோழர்கள், குடும்பத்தோடு, தொடர்வண்டி, பேருந்து, சிற்றுந்து  (வேன்), தனித்தனி மகிழுந்துகள் முதலிய அத்தனை வாகன வசதிகளையும் பயன்படுத்தி மறைமலை நகர் நோக்கி வர ஆயத்தமாகிவிட்டனர் என்ற செய்தி தேன் போன்ற செய்தியல்லவா, நம் அனைவருக்கும்?

எனது அன்பு வேண்டுகோள் – அன்புக் கட்டளை!

இதற்கிடையில்  எனது அன்பு வேண்டு கோள்! (அன்புக் கட்டளையாகவே நீங்கள் கருதுவீர்கள்!)

ஒரு நாள்தான் நிகழ்வு – காலை 8.30 மணிமுதல் இரவு 9 மணிவரை.

இதில் முக்கியத் தலைவர்கள் பங்கேற்கி றார்கள். மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உரை மாலை நிகழ்வில்!

காலையில் தொடங்கி, மாலை வரை நிகழ்ச்சிகள் அடுக்கடுக்காக உள்ளபோது, ஏரா ளமான பொறுப்பாளர்கள், கழகப் பேச்சாளர்கள், தோழமைக் கட்சித் தலைவர்கள் எல்லோரும் உரையாற்றிட வேண்டும். ஒவ்வொரு பேச்சா ளரும் குறிப்பிட்ட கால அளவுக்குள் தமது உரையை முடித்து, நிகழ்ச்சிக்கு மாட்சி சேர்த்திடவேண்டும்.

குறுகிய காலத்தில் இந்த அளவு கருத்து, கொள்கைப் பிரச்சார வெள்ளம் – முடியுமா? என்று யோசிக்காதீர் பேச்சாளர் நண்பர்களே, முடியும் நிச்சயமாக!

அதற்கு ஒருசிறந்த வழியாக மறைமலைநகர், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாட்டிற்கான எல்லா உரைகளையும் எழுத்தில் தயாரித்துத் தந்துவிடுங்கள் – வாய்மொழியாகப் படிப்பதே பேச்சாக இருக்கட்டும்.

வானொலி, தொலைக்காட்சியில் எப்படி 5 மணித் துளிகள், 10 மணித் துளிகள் உரை கள் ஒலி(ஒளி)பரப்பப்பட்டு, நேரத்தைத் திட்ட மிட்டபடி நடத்துகிறார்களோ, அதனை நாம் பின்பற்றுவோம்.

கால கட்டுப்பாடு மட்டுமல்ல, கேட்போருக்கும் இன்பம் தருவதாக அமையும்!

சிலருக்கு உட்கார்ந்து உரை தயாரித்துப் பழக்கமில்லாத நிலையிருந்தால், தயக்கமோ, சற்று சோம்பலோ வரும்; அவற்றைப்  புறந்தள்ளி, இன்றே பழகத் தொடங்குங்கள் – கருத்து வளம், காலக் கட்டுப்பாடு மட்டுமல்ல, கேட்போருக்கும் இன்பம் தருவதாக அமையும்!

மாநாட்டின் அனைத்து உரைகளும் அடங்கிய மாநாட்டு மலர் ஒன்று தயா ரிக்கப்பட்டு, அதில் இடம் பெறும் வாய்ப்பு, அதன்மூலமே கிட்டும்.

எனவே, கழகப் பரப்புரைப் பேச்சாளர்கள், உரையைத் தயார் செய்து, மாநாட்டுக்கு வாருங்கள்!

கட்டுப்பாடுமிக்க கடமை!

அடுத்ததாக, மாநாட்டில் பல்வகை அணியினர், தோழர்களுக்கு – யார், யாருக்கு எந்தப் பொறுப்புப் பிரித்துக் கொடுக்கப்பட்டு உள்ளதோ, அதை மட்டுமே செய்வது என்பது கட்டுப்பாடுமிக்க கடமை என்று செயலாற்றுங்கள்.

 நாட்டோருக்கு ஓர்  எடுத்துக்காட்டு!

நமது மாநாடு நாட்டோருக்கு ஓர்  எடுத்துக்காட்டாக ஆக வேண்டும்.

இனிவரும் காலத்தில் பேசப்பட உங்கள் அனைவரின் ஒத்துழைப்புதான் காரணமாகி நிற்கவேண்டும்!

கி.வீரமணி

  தலைவர்,

  திராவிடர் கழகம்

சென்னை 

26.9.2025

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *