மதுரை, செப் 25 குலசேகரபட்டினம் தசரா விழாவில் ஆபாச நடனங்களைத் தடுக்க வட்டாட்சியர் தலைமையில் தனிக் குழு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தர விட்டது.
தசரா விழா
திருச்செந்தூரை சேர்ந்த ராம் குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் தசரா திரு விழாவில் பக்தர்கள் காளி, சிவன், முருகன் இதிகாச கதாபாத்திரங்கள், குரங்கு, புலி, வேடன் காவலர், ஆண்கள், பெண்கள் போன்று தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப வேடமிடுவர். பின்னர் 48 நாட் கள் வரை விரதம் இருந்து பக்தர் களிடம் காணிக்கை பெற்று தசரா இறுதி நாளில் முத்தாரம்மன் கோயிலுக்குச் சென்று காணிக் கையைச் செலுத்துவர்.
நடன நிகழ்ச்சி
கடந்த 20 ஆண்டுகளாக அதிக காணிக்கை வசூலிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திரைப்படம், சின்னத் திரை நடிகர், நடிகைகளை அழைத்து வந்து அவர்களைதசரா குழுவுடன் ஆபாசமான, இரட்டை அர்த்த திரைப் படப்பாடல்களுக்கு அரை குறை ஆடை களுடன் பொதுவெளியில் நடன நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இதுகுறித்து 2017-இல் உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, தசரா விழாவில் அரைகுறை ஆடைகளுடன் ஆடுபவர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இருப்பினும் ஆபாசமான பாடல்களுக்கு ஆடுவது தொடர்கிறது. இது தசரா விழாவுக்கு விரதம் இருக்கும் பக்தர்களின் மன உறுதியைச் சீர்குலைக்கும் விதமாக உள்ளது.
கடந்த 2023-இல் ஆடல் பாடல் நிகழ்ச்சி தொடர்பான வழக்கில் கோயில் விழாக்களில் நடை பெரும் கலை நிகழ்ச்சி, கோயில் தொடர்பானதாக இருக்க வேண் டும் என உத்தரவிடப்பட்டது. இதை 2023, 2024 தசரா விழாவில் தசரா குழு மற்றும் காவல்துறை பின்பற்றவில்லை. எனவே, தசரா குழுவினர் ஆபாசமானபாடல்கள் பாடவும் ஆடவும் அனுமதிக்க தடை விதித் தும், கடந்த 2023-இல் பிறப்பித்த உத்தரவை அமல்படுத் தவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
கண்காணிப்பு குழு
மனுவை நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வு விசாரித்து “குலசேகரபட்டினம் வட்டாட்சியர், காவல்ஆய்வாளர், உள்ளூரைச் சேர்ந்த தலா ஒரு முதியவர், இளைஞர், பெண் என 5 பேர் கொண்ட சிறப்புக் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். ஆபாச நடனம் ஆடுவது உள்ளிட்ட விதி மீறல்கள் உள்ளதா? என்பதை இக்குழு ஆய்வு செய்து, நீதிமன்றத்தில் அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை அக்.9-க்கு தள்ளி வைக்கப்படுகிறது” என உத்தரவிட்டனர்.