சிதம்பரம் நடராஜன் கோயில் தீட்சதர் குடும்பங்களில் குழந்தைத் திருமணம் என்பது சர்வ சாதாரணம். கோயில் சொத்துகள் தங்கள் வட்டாரத்தைக் கடந்து சென்றுவிடக் கூடாது என்பது தான் இதற்குள் உள்ள இரகசியம்.
உண்மையிலேயே சிதம்பரம் நடராஜன் கோயில் தீட்சதர் களின் உடைமையல்ல – முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சியின் போது, அக்கோயில் அரசுடைமை ஆக்கப்பட்டது.
பார்ப்பனர்களுக்கு ஆபத்துப் பாந்தவனாக இருப்பது உச்சநீதிமன்றம்தானே – அந்த வகையில் தங்கள் வசம் மீட்டுக் கொண்டனர்.
சிதம்பரம் நடராஜன் கோயில் பெயரால் தீட்சதர்கள் அடிக்கும் கொள்ளைக்கு ஓர் எடுத்துக்காட்டு.
சிதம்பரம் நடராஜன் கோயில் பற்றிய வழக்கின்போது தீட்சதர்கள் சார்பில் கொடுக்கப்பட்ட புள்ளி விவரம்:
ஆண்டு வருமானம் – ரூ.37,199 – செலவு – ரூ.37000 – மீதி ரூ.199. அதே நேரத்தில் தி.மு.க ஆட்சியில் இந்து அற நிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்குகீழ் அக்கோயில் வந்த கால கட்டத்தில் 15 மாத வருமானம் ரூ.25,12,485.
தீட்சதர்களின் பகற்கொள்ளை எத்தகையது என்பது இப்பொழுது புரிகிறதா?
இந்தக் கொள்ளையைத் தொடரவே தீட்சதர்கள் தங்கள் குடும்பத்துக்குள்ளாகவே நடத்தும் சட்ட விரோதக் குழந்தைத் திருமணங்கள் சர்வ சாதாரணம்.
இப்பொழுது இதுகுறித்து புகார் காவல்துறைக்குச் சென்ற நிலையில் விசாரணை முடுக்கி விடப்பட்டது. இதனைத் திசை திருப்ப ஆளுநர் முதற்கொண்டு தவறான தகவல்களைப் பரப்பினர். கெட்டிக்காரன் புளுகுக்கே உச்ச வரம்பு எட்டு நாட்கள் தானே!
தீட்சதர்களின் பெண் குழந்தைகளுக்கு இரு விரல் பரி சோதனை நடத்தப்பட்டதாக அபாண்டமாகப் பழி சுமத்திப் பிரச்சாரம் செய்தனர்.
தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு இருவிரல் பரி சோதனை நடைபெறவில்லை என தேசிய குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையம் இப்பொழுது தெரி வித்துள்ளது.
சிதம்பரம் நடராஜன் கோவில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு குழந்தை திருமணம் நடைபெற்றதாக கடந்த ஆண்டு நான்கு தீட்சிதர்களின் குடும்பங்களின் மீது சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சமூக நலத்துறை அலுவலர்கள் அளித்த புகாரின் பேரில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் குழந்தை திருமணம் செய்யப் பட்டதற்காக அரசின் விதிகளுக்கு உட்பட்டு சோதனைகள் நடைபெற்றது.
இதுகுறித்து சிதம்பரம் நடராஜன் கோவில் தீட்சிதர்கள் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு புகார் அளித்தனர். அதில் நடராஜன் கோவில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்குக் குழந்தை திருமணம் நடைபெறவில்லை என்றும் அவர்களுக்கு கன்னித்தன்மையை பரிசோதிக்கும் வகையில் இரட்டை விரல் சோதனை நடைபெற்றதாகவும், புகாரில் தெரிவித்திருந்தனர். அதன் பேரில் ஆளுநர் ரவி ஊடகங்களிடம், “நடராஜன் கோவில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு குழந்தை திருமணம் நடை பெறவில்லை என்றும் அவர்களுக்கு கன்னித் தன்மையை பரிசோதிக்கும் வகையில் இரட்டை விரல் பரிசோதனை நடை பெற்றதாகவும், இது சட்டம் ஒழுங்கு பாதிப்புக்கு எடுத்துக்காட்டு” எனப் பேட்டியளித்திருந்தார்.
இதனையொட்டி தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு இருவிரல் சோதனை நடை பெறவில்லை என ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார்.
இந்த நிலையில், 24.5.2023 அன்று தேசிய குழந்தை உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஆனந்த் மற்றும் மருத்துவக் குழுவினர் விசாரணை மேற்கொள்ள சிதம்பரம் நகருக்கு வருகை தந்தனர். இவர்கள் நடராஜன் கோவில் உள்ளே சம்பந்தப்பட்ட தீட்சிதர்களின் குழந்தைகள் மற்றும் தீட்சிதர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதேபோல் அப்போது பரிசோதனை செய்ததாகக் கூறப்படும் மருத்துவர்கள் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆணைய உறுப்பினர் ஆனந்த், “நடராஜன் கோவில் தீட்சிதர்கள் உள்ளிட்ட மூன்று தரப்பினரிடம் விசாரணை மேற்கொண்டதாகவும், விசாரணையில் இருவிரல் சோதனை நடைபெறவில்லை என்பது உறுதியாகி உள்ளது. மேலும் பிரைவேட் சோதனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. குழந்தைத் திருமணம் நடைபெறவில்லை என்றும் கட்டாயத்தின் பெயரில் தீட்சிதர்களின் குழந்தைகள் ஒப்புக் கொண்டதாகவும் கூறியுள்ளனர். மேலும் குழந்தை திருமணங்களை சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் நடத்தி வருகிறார்கள் என்று கூறுபவர்களிடமும் விசாரணை மேற்கொண்டு விசாரணை அறிக்கையை 2 நாட்களுக்குள் ஆணையத்தில் சமர்ப்பிப்போம்” என்று கூறினார்.
பாஜகவின் தமிழ்நாட்டு நிர்வாகியைப் போல் பாஜகவினர் அனுப்பும் வதந்திகளை எல்லாம் அறிக்கைகளாகவும், மேடையிலும் பேசி தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய் விட்டது என்று தொடர்ந்து கூறி வரும் ஆளுநர் இரு விரல் பரிசோதனை நடைபெற்றது என்ற மோசமான குற்றச்சாட்டை திரும்பப் பெறுவாரா?
ஓர் ஆளுநர் செய்யும் வேலையா இது?