சென்னை, செப். 25- ‘எனது உடலில் உயிர் இருக்கும் வரை கடமையை செய்வேன்’ என கொளத்தூரில் நடந்த நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக பேசினார்.
நலத்திட்ட உதவிகள்
சென்னை கொளத்தூரில் நேற்று (24.9.2025) நடந்த நிகழ்ச்சியில் முடிவுற்ற பல்வேறு திட்டப் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத் தார். மேலும் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அவர், அனிதா அச்சீவர்ஸ் அகாடமி மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் மு.க.ஸ்டாலின் பேசிய தாவது:-இன்றைய தினம் எத்தனையோ நிகழ்ச்சிகளில் பங்கேற்ற நிலையில், அனிதா அச்சீவர்ஸ் அகாடமி நிகழ்ச்சி என்னுடைய களைப்பையெல்லாம் நீக்கி, உற்சாகத்தை வழங்கக்கூடியதாக இருக்கிறது. உங்கள் முகத்தில் தோன்றக் கூடிய மகிழ்ச்சியை, நம்பிக்கையை பார்க்கும் போது, இன்னும் நான் என்னு டைய கடமையை வேகமாக நிறைவேற்றிட வேண்டும் என தோன்றுகிறது.
கடமையை செய்வேன்
இந்த அகாடமி மூலமாக பலன் பெற்றவர்கள் பேசும் போது, ‘‘நாங்கள் எதிர்ப்பார்க்கக்கூடிய பணிகளை நீங்கள் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறீர்கள். இருந்தாலும் இன்னும் செய்ய வேண்டும்’’ என குறிப்பிட்டுச் சொன்னார்கள்.
‘‘எனது உடலில் உயிர் இருக்கும் வரையில் முத்தமிழறிஞர் கலைஞர் கற்றுக்கொடுத்திருக்கும் அந்த உழைப்பு என்னுடைய உதிரத்தில் இருக்கும் வரை நிச்சயமாக உறுதியாக நான் என்னுடைய கடமையை நிறைவேற்றுவேன். நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டிய அவசிய மில்லை. நான் இருக்கிறேன். எதைப்பற்றி யும் நீங்கள் கவலைப்பட வேண்டாம்.’’
என்னவோ தெரியவில்லை. கொளத்தூருக்கு வந்துவிட்டால் எனக்கு இப்படியெல்லாம் பேசத் தோன்றுகிறது. அதுவும் இங்கு பயின்று கொண்டிருக்கும் மாணவ-மாணவிகளை பார்க்கும் போது இதுபோல் எண்ணம் வருகிறது.
திறமையை வளர்க்க வேண்டும்
இங்கு மாணவ-மாணவிகள் பெற்றி ருக்கும் பயிற்சி, ஒரு சிறிய தொடக்கம் தான். இந்த பயிற்சி உங்களுக்கான வாய்ப்புகளை அடையாளம் காட்டக் கூடிய கதவை திறந்து வைக்கும் அவ்வளவு தான். ஆனால், அந்தப்பாதையில் நீங்கள் வெற்றிகரமாக நடை போட வேண்டும் என்றால். கற்றுக்கொள்ளும் ஆர்வம் குறைந்துவிடக் கூடாது.
இன்றைக்கு தகவல் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. மனிதர்களின் வேலை சுமையை இந்த வளர்ச்சி வெகுவாக குறைத்துகொண்டு வருகிறது. அதற்கு ஏற்ற மாதிரி நீங்களும் உங்களின் திறமையை வளர்ச்சிக்குக் கொண்டு வர வேண்டும். அதுதான் என்னுடைய விருப்பம்.
இன்றைக்கு இணையம் முழுவதும் அறிவுத் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. நல்ல பயனுள்ள தகவல்களை பார்த்து உங்கள் திறமையை மேலும், மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும். நிறைய ஆன்லைன் படிப்புகள் இருக்கின்றன. எது உங்களுக்கு உதவியாக இருக்குமோ, அதை தேடி படிக்க வேண்டிய, பயிற்சி பெற வேண்டிய கடமை உங்களுக்கெல்லாம் இருக்கிறது. படித்துவிட்டோம் வேலை கிடைத்து விட்டது என்று இருந்துவிடாதீர்கள். அஞ்சல் வழியில் மேற்படிப்பை தொடர்ந்து மேற்கொள்ளுங்கள்.
படிப்புதான் கடைசிவரை துணை நிற்கும்
படிப்புதான் உங்களுக்கு கடைசிவரை துணை நிற்கும். அதுதான் உங்கள் வாழ்க்கையில் உறுதுணையாக இருக்கும். கல்விக்கு இடைஞ்சல் ஏற்படுத்தக் கல்வியினால் பெறப்படும் அறிவை கொச்சைப்படுத்த பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களின் எண்ணம், நீங்கள் முன்னேறவேண்டும் என்பது கிடையாது.
கவர்ச்சியான சொற்களை சொல்லி பின்னுக்கு இழுத்துக்கொண்டு செல்லும் ஒரு சூழ்நிலையை சிலர் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். எனவே, எதிர்காலத்திற்கு என்ன தேவையோ, உங்களுக்கு என்ன தேவையோ அதை நோக்கி நீங்கள் நடை போட வேண்டும்.
தமிழ்நாட்டு மாணவர்களின் படிப் புக்கு ‘திராவிட மாடல்’ அரசு இருக்கிறது என்பதை நீங்கள் மறந்துவிட வேண்டாம். அதனால்தான், ‘‘தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டோம்’’ என உறுதி எடுத்து இருக்கிறோம்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடித் தளம் கல்வியாகும். அதை நீங்கள் நல்ல முறையில் கற்று, உங்கள் வாழ்க் கையில் நீங்கள் முன்னேற்றம் காண வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.