அன்றாடம் உற்பத்தியாகும் பிளாஸ்டிக் கழிவுகளில் மிகக் குறைந்த சதவீதம் தான் மறுசுழற்சி செய்யப்படுகிறது. இதற்குக் காரணம், கழிவுகளில் பல்வகை பிளாஸ்டிக்குகளும் கலந்திருப்பது தான். இவற்றைப் பிரிக்காமல் மறுசுழற்சி செய்வதில் பல சிக்கல்கள் உள்ளன. இதை மனதில் வைத்து, கழிவுகளைப் பிரிக்காமலேயே மறுசுழற்சி செய்யும் முறையை அமெரிக்காவின் இல்லினாய்ஸ் நார்த் வெஸ்ட் பல்கலை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
குப்பை போடும் பைகள், பிளாஸ்டிக் கவர்கள், தண்ணீர் பாட்டில்கள் ஆகியவை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பாலியோலிஃபின் பிளாஸ்டிக்கால் ஆனவை. நிக்கல் அடிப்படையிலான வினையூக்கி கொண்டு இவற்றைத் எண்ணெய்யாகவும், மெழுகாகவும் மாற்றி எரிபொருளாகப் பயன்படுத்தலாம் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த வினையூக்கி குறைந்த வெப்பநிலையில் செயல்படும். இந்த வேதிவினைக்குக் குறைந்த அளவு ஹைட்ரஜன் வாயுவே போதுமானது. இதனால் பிளாஸ்டிக் மறுசுழற்சியைக் குறைந்த செலவில் சுலபமாகச் செய்ய முடியும். ஆண்டுதோறும் நாம் உற்பத்தி செய்யும் பிளாஸ்டிக்கின் அளவு அடுத்த சில பத்தாண்டுகளில் கணிசமாக அதி கரிக்கும் என்று கணிக்கப்படுகிறது. 2020இல் 46.4 கோடி டன் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்பட்டது. 2050இல் இது 88.4 கோடி டன்னாக உயரும். எனவே, இந்த ஆய்வுக்குழு கண்டறிந்த வினை யூக்கி விரைவில் உலக அளவில் பிரபலமாகும் என்று எதிர்பார்க்கலாம்.