பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம்
ராஜஸ்தான் காவல்துறையில் சில ஆயிரம் காவலர் வேலைகளுக்காக முனைவர் பட்டம் பெற்றவர்கள் முதல் பல துறைகளில் பட்டப்படிப்பு படித்த 7 லட்சம் இளைஞர்கள் குவிந்ததால் ராஜஸ்தான் கோட்டா நகரம் திணறியது.
போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், தேர்வெழுத வந்த மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
செப்டம்பர் 12, 2025 அன்று ராஜஸ்தான் மாநில காவலர் தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான இளைஞர்கள் முன்கூட்டியே கோட்டா நகருக்கு வந்தனர். சாலைகள், பூங்காக்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் என எங்கு பார்த்தாலும் தேர்வெழுத வந்தவர்களால் நகரம் நிரம்பி வழிந்தது. கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு பொது மக்கள் சொல்லி மாளாத அவதிக்கும் ஆளாகினர்.
தேர்வுக்கு வந்த மாணவர்களுக்குப் போதிய கழிப்பறை வசதிகள் செய்து தரப்படாததால், நகரின் பல பகுதிகள் அசுத்தமாக மாறின.
தேர்வெழுத வந்த மாணவர்கள் தங்கள் அனுபவங்களைப் பற்றிப் பேசுகையில், “எங்கும் வேலை இல்லை. இந்தக் காவலர் பணியாவது கிடைக்குமா என்ற நம்பிக்கையில் வந்தோம். ஆனால் இங்கு வந்த பிறகுதான், நமக்கு முன்பே பல லட்சம் பேர் வந்துவிட்டனர் என்பது தெரிந்தது,” என்றனர்.
“எங்களுக்குத் தங்க இடம் கிடைக்கவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தபோது, கோதுமை மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த தனியார் தானியக் கிடங்கை எங்களுக்காகத் திறந்துவிட்டனர். கோதுமை அரைக்கும் இயந்திரத்தின் புகை, தூசி, அதன் சத்தம், மற்றும் கொசுக்கடிக்கு மத்தியில் இரவைக் கழித்தோம்” என்று மாணவர்கள் மிகுந்த வருத்தத்துடன் கூறினர்.
இந்த நிகழ்வு பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் நிலவும் கடுமையான வேலையின்மைப் பிரச்சினையையும், வேலை தேடி அலையும் இளைஞர்களின் அவலநிலையையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.
ஆண்டிற்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்று கூறி ஆட்சிக்கு வந்தார் பிரதமர் மோடி. 11 ஆண்டுகள் ஆகியும் வேலை கிடைத்த அந்த 2 கோடி பேர் எங்கே என்ற கேள்விக்கு பா.ஜ.க. அரசிடம் பதில் இல்லையே!
மாதா மாதம் ‘மனதின் குரல்’ என்று பிரதமர் மோடி பேசும் பேச்சுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை. செயலில் சுழியம்தான். வடமாநிலங்களில் வேலை வாய்ப்பு என்பது அரிதினும் அரிதாக இருப்பதால்தான் ஒவ்வொரு நாளும் வட மாநிலங்களிலிருந்து வேலையைத் தேடி தமிழ்நாட்டுக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் குவியும் பரிதாப நிலை! இதனால் தமிழ்நாட்டுக்கும் ஒரு வகையில் பாதிப்புதான். சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திற்குச் சென்றால் எங்கு பார்த்தாலும் வட இந்திய மக்கள்தான் காணப்படுகிறார்கள்.
வட கிழக்கு மாநிலங்களில் கேட்கவே வேண்டாம். தொழிற்சாலை என்றால் என்ன என்று கேட்கும் பரிதாப நிலை!
உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் விவசாயம் பெரிய தொழிலாக இருந்தாலும், அது போதுமான அளவுக்கு வருவாய் கொடுப்பதில்லை.
பஞ்சாபைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். ஓர் ஆண்டு குடும்பம் குடும்பமாக விவசாயிகள் வெயிலிலும், மழையிலும் தலைநகர் டில்லியில் போராட்டம் நடத்தினார்களே! விளைவு என்ன?
ஏதோ மதவாதப் பிரச்சினையை மிகப் பெரியதாக்கிக் காட்டி, பக்தியைக் காட்டி கோயிலைக் காட்டி, மக்களிடத்தில் மத மயக்கப் பொடியைத் தூவி ஆட்சி சக்கரத்தை ஓட்டிக் ெகாண்டுள்ளனர். ராஜஸ்தானில் காவல்துறை வேலை வாய்ப்புக்குச் சென்ற இளைஞர்கள் கதறுவதைப் பார்த்தால் ஈரல் குலையே நடுங்குகிறது. மக்கள் விழிக்கா விட்டால் மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதைதான்!