இன்றைய தேதியில் மைக்ரோபிளாஸ்டிக் எனும் நுண் நெகிழிகள் இல்லாத இடமே இல்லை என்கின்றனர் விஞ்ஞானிகள். 5 மில்லி மீட்டருக்கும் குறைவான விட்டம் கொண்ட பிளாஸ்டிக் துகள்கள் நுண் நெகிழிகள் எனப்படுகின்றன. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களில் இருந்து தான் இவை உற்பத்தி ஆகின்றன. இவற்றின் மீது ஆபத்தான கிருமிகள் ஒட்டிக் கொண்டு வளர்கின்றன.
இவை நம் உடலில் தொடர்ந்து சேர்ந்தால், பல பாதிப்புகள் ஏற்படும். நாம் குடிக்கும் நீரில் கூட இவை உள்ளன. எனவே நீரைச் சோதிக்க வேண்டியது அவசியமாகிறது. ராமன் முறை, அகச்சிவப்பு ஸ்பெக்ட்ரோஸ்கோபி முறை இதற்குக் கைகொடுக்கும். ஆனால், இவை செலவு பிடிக்கும். பெரிய அளவில் நீரில் சோதனை நடத்த வேண்டும் என்றால் இந்த முறைகள் உதவாது. ஹாங்காங் பல்கலையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ‘சூடோமோனஸ் ஏருஜினோஸா’ பாக்டீரியாவைக் கொண்டு இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டுள்ளனர். இது தண்ணீர், மண், தாவரங்கள் என எல்லா இடங்களிலும் சகஜமாகக் காணப்படும் ஒரு பாக்டீரியா. விஞ்ஞானிகள் இதற்குள் இரண்டு மரபணுக்களைச் செலுத்தினர். இதில் ஒரு மரபணு பாக்டீரியா நுண் நெகிழியுடன் தொடர்பில் வரும்போது ஒருவித புரதத்தை பாக்டீரியாவின் உடலில் உற்பத்தி செய்யும். மற்றொரு மரபணு இந்தப் புரதத்துடன் தொடர்பில் வந்ததும் பாக்டீரியாவைப் பச்சை நிறத்தில் ஒளிரச் செய்யும்.
எனவே நீரில் இந்த பாக்டீரியாவை மிதக்கவிட்டு அது ஒளிர்ந்தால், அதில் நுண் நெகிழி உள்ளது என்பதை அறியலாம். ஆய்வகத்தில் சோதித்தபோது மெத்தில் செல்லுலோஸ் உள்ளிட்ட பல்வகை நுண் நெகிழிகளையும் இந்த பாக்டீரியா வாயிலாக கண்டறிய முடிந்தது. விரைவில் இது பொதுப் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கலாம்.