திருச்சி, செப். 25- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 147 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 16.09.2025 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மனித நேயத்தை போற்றும் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்மருத்துவ முகாமிற்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை வரவேற்புரையாற்றினார். திருச்சி மாவட்ட திராவிடர் கழக தலைவரும் பெரியார் துவக்க பள்ளியின் தாளாளருமான ஞான.ஆரோக்கியராஜ் தலைமை வகித்து முகாமினை துவக்கி வைத்து சிறப்பித்தார்.
மருத்துவ முகாம்
திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவ மனையின் மருத்துவ அலுவலர் டாக்டர் டெரிக் ஜான் மற்றும் மருத்துவக் குழு வினரால் சர்க்கரை, நுரையீரல், இதய நோய் தொடர்பான மருத்துவ முகாமும் திருச்சி பெரியார் மணியம்மை மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் டாக்டர் முனைவர் சுல்தானா தலைமையில் பொது மருத்துவ முகாமும் நடைபெற்றது. மேலும் திருச்சி கண் மருத்துவமனையின் ஆப்டோமெட்ரிஸ்ட் ஜெனிபர் மற்றும் மருத்துவக் குழுவினரால் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
முதியோர்களுக்கு…
சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம், இதய சுருள் படம் (ECG) மற்றும் நுரையீரல் செயல்பாட்டு பரிசோதனை (Pulmonary Function Test – PFT) போன்றவை மருத்துவ பயனாளர்களுக்கு எடுக்கப்பட்டது. மொத்தம் 210 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரியார் மருந்தியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கோ கிருஷ்ண மூர்த்தி முன்னிலை வகித்த இம்மருத்துவ முகாமினை பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பேராசிரியர் ஏ ஜெசிமா பேகம், அப்போலோ மருத்துவமனையின் முகாம் ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், திருச்சி கண் மருத்துவமனையின் முகாம் ஒருங்கி ணைப்பாளர் மாரியப்பன் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
மரக்கன்றுகள் நடும் விழா
காலை 9 மணிக்கு பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திராவிட மாணவர் கழ கத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
சிறப்புக் கருத்தரங்கம்
காலை 9.30 மணிக்கு சிறப்புக் கருத்த ரங்கம் நடைபெற்றது பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினர் உயர்நீதிமன்றத்தின் முதுநிலை வழக்குரைஞர் டி.பானுமதி தந்தை பெரியார் அவர்களின் சமூக நீதிக் கொள்கைகள் குறித்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அவர் தமது உரையில் சிறைச்சாலைக்குள் இருளில் கிடந்த மனித இனத்தை தட்டியெழுப்பி சுதந்திர காற்றை சுவாசிக்கச் செய்தவர்தான் தந்தை பெரியார் அவர்கள்.
தம்முடைய சொத்துக்கள் அனைத்தையும் மக்களுக்காக வழங்கிய தொண்டறத் தலைவர் தந்தை பெரியார் அவர்களால் உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் இன்று பெண்கல்விக்கு பல முன்னேற்றத்தை வழங்கி வருகிறது.
தந்தை பெரியார் கண்ட சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவை கொண்டாடும் இவ்வேளையில், அக்கொள்கைகளின் பயனை தமிழ்நாடு கடந்து மற்ற மாநிலங்களுக்கு நாம் சென்று வந்தால்தான், நம் நாட்டில் சுயமரியாதை இயக்கம் சாதித்தது என்ன என்பதனை நம்மால் புரிந்து கொள்ள முடியும். இந்தி எதிர்ப்பு போராட்டம்தான் இன்றும் நம் தமிழ்மொழியை காத்து நிற்பதற்கு காரணமாக இருக்கின்றது.
விடுதலையை பெற்றுத் தரும்…
தந்தை பெரியார் அவர்களுக்கு பிறகு நாத்திக இயக்கத்திற்கு தலைமையேற்ற முதல் பெண்மணி அன்னை மணியம்மை யார் அவர்கள்தான். தந்தை பெரியார் அவர்கள் விடுதலை ஆசிரியர் பொறுப்பை மட்டும் ஆசிரியர் வீரமணி அவர்களுக்கு வழங்கவில்லை. ஓட்டுமொத்த தமிழ்நாட்டின் விடுதலையை பெற்றுத் தரும் பொறுப்பையும் வழங்கியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட தலைவரின் தலைமையில் பயிலும் மாணவர்கள் பெரியாரியக் கொள்கை களை பின்பற்றி வாழவேண்டும் என்று கேட்டுக்கொண்டு அனைவருக்கும் தந்தை பெரியார் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
பெரியார் மருந்தியல் கல்லூரி திராவிட மாணவர் கழக துணைத் தலைவர் லோகு முன்னிலை வகிக்க, அமைப்பாளர் பவித்ரா சமூக நீதி நாள் உறுதிமொழி வாசித்தார். அனைவரும் எழுந்து நின்று சமூக நீதி நாள் உறுதிமொழியேற்றனர். பெரியார் மருந்தியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கோ.கிருஷ்ணமூர்த்தி நன்றியுரையாற்றினார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனை வருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.