சென்னை, மே 26 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு www.tngasa.in என்ற இணையதள முகவரியில் மே 8 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை இணைய தளத்தில் விண்ணப்பங்கள் வரவேற் கப்பட்டன.
தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு களில் சேர 3 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
இதனால் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவி களுக்கு கேட்ட பாடப்பிரிவுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் , இன்று தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து கல்லூரி முதல்வர்களும் https://collegeportal.tngasa.in என்ற இணையதளத்தில் OTP எண்ணை பதிவு செய்து தரவரிசை பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஒன்றிய அரசுத் துறைகளில் 1600 பணியிடங்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 8
சென்னை, மே 26 ஒன்றிய அமைச்சக அலுவலகங்கள், தன்னாட்சி அமைப்புகள், தீர்ப்பாயங்கள் உள்பட ஒன்றிய அரசுக்கு பாத்தியப்பட்ட பல்வேறு அலுவலகங்களில் 1,600 பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.) வெளியிட்டுள்ளது.
இதன்படி, 12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான தகுதியில் கீழ்நிலை எழுத்தாளர், இளநிலை செயலக உதவியாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சில பணிகளுக்கு கூடுதல் தகுதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 8-ஆம் தேதி கடைசி நாள் ஆகும். ஆகஸ்டு 1-ஆம் தேதியன்று 18 வயது நிரம்பியவர்கள் முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களுக்கு கணினி வழியில் முதல்நிலை தேர்வு ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ளது. முதன்மை தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு https://ssc.nic.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட தகவல் ஒன்றிய அரசின் பணியாளர் நலன் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியின மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு
சென்னை, மே 26 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு தாட்கோ மூலம் பட்டப்படிப்புடன் கூடிய பிரபல எச்சிஎல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு என சென்னை மாவட்ட ஆட்சியர் சு. அமிர்தஜோதி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு : தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக 2022-2023-ஆம் ஆண்டுகளில் 12-ஆம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, எச்சிஎல் நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு பிஎஸ்சி, பிகாம், பிசிஏ, பிபிஏ படிக்க வழி வகை செய்யப்படும். அதுமட்டுமின்றி, எச்சிஎல் டெக்னால ஜியில் வேலைவாய்ப்புடன் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள புகழ்வாய்ந்த பிட்ஸ்பிலானி கல்லூரியில் பிஎஸ்சி கணினி வடிவமைப்பு பட்டப்படிப்பு, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சாஸ்தரா பல்கலைக் கழகத்தில் பிசிஏ பட்டப்படிப்பு, அமிட்டி பல்கலைக் கழகத்தில் பிசிஏ, பிகாம், பிபிஏ மற்றும் நாக்பூரிலுள்ள அய்அய்எம் பல்கலை கழகத்தில் பட்டப்படிப்பு சேர்ந்து படிக்க, வாய்ப்பு பெற்று தரப்படும்.
12-ஆம் வகுப்பு 2022-இல் முடித்தவர்கள் 60 சதவீதம் மற்றும் 2023-இல் முடித்தவர்கள் 75 சதவீதம் குறைந்தபட்ச மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். எச்சிஎல் மூலம் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படும் இப்படிப்புக்கான செலவீனம் தாட்கோவால் ஏற்கப்படும். இப்பயிற்சியில் சேர www.tahdco.com என்ற இணைதள முகவரியில் விண்ணப்பித்து மாணவர்கள் பயனடைய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நகரங்கள் – கிராமங்களிலும்
5ஜி தொலைத்தொடர்பு சேவை அதிகரிப்பு
சென்னை, மே 26- தமிழ்நாட்டில் ஏர்டெல் நிறுவனத்தின் தொலைத் தொடர்பு சேவையில் 20 லட்சம் தனித்துவமான 5ஜி பயனர்களை கடந்துள்ளதாக இந்நிறுவனம் அறிவித்தது.
இந்த சாதனை குறித்து இந்நிறுவன தலைமை நிருவாக அதிகாரி தருண் விர்மணி, கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு, பாரதி எர்டெல், “தமிழ்நாட்டில் ஏர்டெல் 5ஜி பிளஸ் வேகமாக ஏற்றுக்கொள்ளப்படுவதை நாம் காண்கிறோம். எங்களின் அதிவேக ஏர்டெல் 5ஜி நெட்வொர்க்கில் 20 லட்சம் வாடிக்கையாளர்களை கடந்து விட்டோம். நாங்கள் எங்கள் நெட்வொர்க்கைத் தொடர்ந்து மேம்படுத்தி, மாநிலம் முழுவதிலும் உள்ள ஒவ்வொரு நகரத்தையும் முக்கிய கிராமப் பகுதிகளையும் இணைக்கிறோம்.
எர்டெல் 5ஜி பிளஸ் தற்போது நாடு முழுவதும் உள்ள 3500 நகரங்கள் மற்றும் கிராமங்களில் கிடைக்கிறது மற்றும் தேசிய அளவில் அதன் 5ஜி நெட்வொர்க்கில் 10 மில்லியன் தனித்துவ வாடிக்கையாளர்களை தாண்டியுள்ளது. வரும் செப்டம்பர் 2023க்குள் ஏர்டெல் 5ஜி சேவைகளுடன் ஒவ்வொரு நகரத்தையும் முக்கிய கிராமப் புறங்களையும் உள்ளடக்குவதற்கு ஏர்டெல் தயாராக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.