*பல்லாண்டுகளாகத் தொடர்ந்த பார்ப்பன சாமியாரின் பாலியல் தொல்லை!
* ஒன்றிய உள்துறையின் கட்டுப்பாட்டிலிருக்கும் டில்லியில், பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை!
எங்கு, மகளிருக்குக் கொடுமை நடந்தாலும், திராவிடர் கழகம் கண்டித்துள்ளது!
பல்லாண்டுகளாகத் தொடர்ந்த பார்ப்பன சாமியாரின் பாலியல் தொல்லை; ஒன்றிய உள்துறையின் கட்டுப்பாட்டிலிருக்கும் டில்லி யில், பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. இவற்றை யெல்லாம் கண்டித்து ‘‘சாமியார்கள் ஜாக்கிரதை’’ – நாடு தழுவிய பிரச்சாரம் நடத்தப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
‘சாமியார்கள்’ – சாதுக்கள் என்ற பெயரால் காவி காஷாயம் தரித்து, பலர் பக்தி முகமூடியின் சொகு சுடன், ஒழுக்கக்கேட்டின் உச்சத்திற்குச் சென்று, மறைத்துக்கொண்டு ஸநாதனப் பழங்கள்போல் பாசாங்கு வாழ்க்கை நடத்தி, பொருள் சேர்ப்பு தொடங்கி, பெண்களை காமவேள் நடன சாலையின் கருவிகளாகப் பயன்படுத்தும் கொடுமைகள் நாளும் குறைந்தபாடில்லை!
திருச்சியில் தமுக்கடிப் பிரச்சாரத்தை மேற்கொண்டோம்!
பல ஆண்டுகளுக்கு முன்பே, ‘சாமியார்கள் ஜாக்கி ரதை’ என்று திராவிடர் கழகம் நாடு தழுவிய சூறாவளிப் பிரச்சாரப் பயணங்களை மேற்கொண்டுள்ளோம். புதுக்கோட்டை பிரேமானந்தாக்களுக்கும், தண்டிக்கப்பட வேண்டிய பிற சாமியார் குற்றவாளிகளுக்கும் சட்டப்படி உரிய தண்டனை கொடுக்க நாமே தமுக்கடிப் பிரச்சாரத்தை (திருச்சியில்) நடத்தியது ஒருபுறம்.
காஞ்சி கோவில் குருக்கள் அர்ச்சகர் தேவநாதன், சிறீவில்லிபுத்தூர் அர்ச்சகர் பத்ரிநாத் போன்றோரின் பாலியல் ஒழுக்கக்கேடு உள்ளிட்ட பலவற்றை அம்பலப்படுத்தினோம்.
எங்கு, மகளிருக்குக் கொடுமை நடந்தாலும், திராவிடர் கழகம் கண்டித்துள்ளது!
இதையடுத்து நாடு தழுவிய பிரச்சாரத்தை நடத்தியது மட்டுமல்ல, புத்தகங்களை ஆதாரங்களோடு போட்டு, (அது காஞ்சி சங்கராச்சாரியாரானாலும், மற்ற சங்கராச்சாரியார்களானாலும்) விருப்பு, வெறுப்பின்றி, வடநாடு – தென்னாடு என்ற பேதமின்றி, எங்கு மகளிருக்குக் கொடுமை நடந்தாலும், கண்டித்துக் களம் காணுவதையே கடமையாகக் கழகம் கொண்டிருக்கிறது – செயல்படுத்தி, போராடியும் வருகிறது.
அண்மையில் ஊடகங்களில் இந்த சாமியார்கள்பற்றி வந்துள்ள இரண்டு முக்கிய அதிர்ச்சி செய்திகள் – காவிகளைக்கூட வெட்கித் தலைகுனியச் செய்துள்ளன.
சென்னையில், பாலியல் குற்றத்திற்காக வழக்கில் சிக்கியுள்ள சதுர்வேதி என்ற பார்ப்பனர், நீதிமன்ற அழைப்பாணையை அறவே மதிக்காது, தலைமறைவாக உள்ளார்.
அவரைத் தேடி பிடிவாரண்டோடு காவலர்கள் அலைந்து வருகின்றனர்!
17 மாணவியருக்குப் பாலியல் தொல்லை:
தலைமறைவான சாமியாருக்கு வலை!
டில்லியில், உயர்கல்வி நிறுவனத்தின் இயக்குநரான சைதன்யானந்த சரஸ்வதி என்ற சாமியார், அங்கு பயிலும் 17 மாணவியருக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்த நிலையில், தலைமறைவாகியுள்ளார். அவரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
டில்லியின் வசந்த் கஞ்ச் பகுதியில், ‘சிறீ சாரதா இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மேனேஜ்மென்ட்’ என்ற உயர்கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
கருநாடகாவின் சிருங்கேரியில் உள்ள சாரதா மடத்துடன் தொடர்புடைய இந்த நிறுவனத்தில், பொரு ளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவியர் பலர் பயின்று வருகின்றனர். இங்கு, மேலாளராக சைதன்யானந்த சரஸ்வதி என்ற சாமியார் உள்ளார். இவர் இயற்பெயர் பார்த்தசாரதி.
இவர் மீது, அங்கு பயிலும் 32 மாணவியர் பாலியல் புகார் அளித்துள்ளனர். குறிப்பாக, 17 மாணவியருக்கு, ‘மொபைல் போன்’ மூலம் ஆபாசப் படங்கள் மற்றும் குறுஞ்செய்தி அனுப்பித் தொல்லை தந்ததுடன், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சாமியாரின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்ததை அடுத்து, அவரைப் பற்றி அங்குள்ள பேராசிரியர்களிடம் மாணவியர் புகார் அளித்தனர்.
அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், சாமியார் சொல்வதைக் கேட்கும்படி மாணவியரிடம் வலியுறுத்தினர். இதையடுத்து, மாணவியர் காவல்துறை யினரிடம் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில், குற்றச்சாட்டுக்குள்ளான கல்வி நிறுவனத்தில் புகுந்து காவல்துறையினர் நேற்று (24.9.2025) தீவிர சோதனை நடத்தினர். பாதிக்கப்பட்ட மாணவியரின் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தனர். அதன்படி, சாமி யாருக்கு ஆதரவாக ஆசிரம நிர்வாகிகள் செயல்பட்டது தெரியவந்துள்ளது.
நிறுவனத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசுக் காரையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். விசாரணையில், துாதரகத்தின் பெயரில் போலிப் பதிவு எண்ணுடன் அந்தக் கார் இயக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. கல்வி நிறுவனத்தில் உள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைமறைவான சைதன்யானந்த சரஸ்வதி சாமியார் உத்தரப்பிரதேசத்தின் ஆக்ராவுக்கு தப்பிச் சென்றிருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவரைக் கைது செய்யும் பணியைக் காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையம் ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கி உள்ளது. இதற்கிடையே, உயர்கல்வி நிறுவனம் மற்றும் அதை ஒட்டிய ஆசிரமத்தின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் சைதன்யானந்தாவை நீக்கியுள்ளதாகச் சாரதா மடம் தெரிவித்துள்ளது. காவல்துறையினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் கூறியுள்ளது.
சாமியார் மீது பாலியல் புகார்கள் எழுவது, இது முதல் முறையல்ல! 2009 இல் இவர் மீது, மோசடி மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 2016 இல், பெண் ஒருவர் சாமியார் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார்.
ஊடகங்களில் வெளிவந்துள்ள
கூடுதல் தகவல்கள்!
– இதுபற்றி மேலும் கூடுதல் தகவல்களை ஊட கங்கள் வெளியிட்டுள்ளன.
EWS – உயர்ஜாதி ஏழைகள் என்று சொல்லப்படும் கோட்டாவில் கல்லூரியில் சேர்ந்த மாணவிகள்தான் இதில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனராம்.
குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இந்தப் ‘பழைய பார்த்தசாரதி’ திடீரென்று தனது பூர்வோத்திரத்தை மறைத்து, காவி கட்டி ‘சைதன்யானந்த சரஸ்வதி’யாக மாறியதன்மூலம், இவர் பார்ப்பனர் என்பது மறைக்கப்பட்டுள்ளது.
மேலும் இதில் முக்கிய கோடிட்டுக் காட்டவேண்டிய தகவல் என்னவென்றால்,
2014 ஆம் ஆண்டிலிருந்தே இது தொடர்பான நிகழ்வுகள் நடந்து, பாதிக்கப்பட்டவர்களால் புகார்கள் கொடுக்கப்பட்டதாகவும், அவர் மேல் எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை என்பதும்தான்.
டில்லியின் சட்டம் – ஒழுங்குக்குப் பொறுப்பு ஒன்றிய அரசின் உள்துறைதானே!
பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று தி.மு.க. ஆட்சியைக் குறை கூறும் அரசியல் தலைவர்களே,
டில்லியில் எந்தக் கட்சி ஆட்சி நடக்கிறது? பா.ஜ.க. தானே!
2014 இலும் டில்லியின் சட்டம் – ஒழுங்குக்குப் பொறுப்பு ஒன்றிய அரசின் உள்துறைதானே!
இத்தகைய காமவேள் கயவர்களுக்குத் துணிவு என்பது காவி வேடம் தவிர, வேறு என்ன?
உடனே கடும் நடவடிக்கைகள் தேவை!
நாடு முழுவதும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த
திராவிடர் கழகப் பிரச்சாரம்!
பல நீதிபதிகளும், ஆட்சித் தலைவர்களும் சாமி யார்களிடம் சென்று ஆசி பெறுவது, அவர்கள் ஆட்சிக்கும், சட்டத்திற்கும் அப்பாற்பட்ட மேலாளர்கள் என்ற ஆணவச் ெசருக்கில் இப்படிப்பட்ட ஒழுக்கக்கேடுகளுக்கு இடமளிக்கிறது!
எனவே, இதற்கு நாடு தழுவிய இயக்கத்தை, நாடு முழுவதும் திசையெட்டும் நடத்தி, (தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிந்தவுடன்) மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.
திராவிடர் கழகத் தலைமை இதற்கான முடிவெடுக்கும்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
25.9.2025