பணத்தையே கடவுளாக வழிபடும் அளவுக்கு அதற்குரிய தேவைக்கு மேற்பட்ட முக்கியத்தைத் தருவது சமுதாயப் பொது ஒழுக்கத்தைச் சீர்கேடாக்கும் விரும்பத்தகாத ஒன்று.
ஆங்கிலத்தில் ‘Mammon Worship’ என்ற ஒரு சொற்றொடரே இதனைக் குறிக்கிறது!
‘பணம் இல்லாமல் வாழ முடியாதே’ நீங்கள் இப்படி கடுமையாகக் கூறுகிறீர்களே’ என்று சிலர் கேட்கலாம்.
பணத்தாசை மூன்று முக்கிய ஆசைகளில் ஒன்று – முற்றும் துறந்ததாகச் சொல்லப்படும் முனிபுங்கவர்கள் கூட இதற்கு விதி விலக்கல்ல.
மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்று மூவகைப் படுத்தினர் பல கால முன்பே!
பணம் நம் சமுதாய, தனி வாழ்வு எல்லாவற்றிற்கும் அவசியம் என்பதை மறுக்கவில்லை. ஆனால் அது நமது வேலைக்காரனாக இருக்க வேண்டுமே தவிர, எஜமானன் ஆகிவிடக் கூடாது!
அந்தப் பணத்தை சேர்த்த பிறகு உலக ஏடுகள், உலகப் பணக்காரன் வரிசையில் யார் முந்தி, முதலிடம் என்று தர வரிசைப் பட்டியல் வெளியிட்டனவே! அதன் பிறகு அவர்களில் யார், யாரை முந்துகிறார்கள் என்று விலாவாரியாக விவாதிப்பது என்பது ஒரு தேவையற்ற ஊடகச் செய்தி நிரப்பலாகும்.
அதானியோ, அம்பானியோ – அவர்கள் போன்ற பெரும் கார்ப்பரேட் முதலாளிகளோ வளருவதால் – வளர்க்கப்படுவதால் அவர்களது வளர்ச்சிக்கு உர மிட்டு பாதுகாக்கும் குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு வேண்டுமானால் அது பயன்படத்தக்க ஒன்று!
சாமானிய மக்கள் வாழும் சமுதாயத்துக்கு அத்தகையவர்களால் என்ன லாபம்? என்ன நன்மை?
முற்றும் துறந்தவர்கள் – முனிபுங்க, பண்டார சந்நிதி என்ற பெயரில் நமது மடாதிபதிகள் – இவர்கள் ஒரு போதும் சங்கராச்சாரியார்களுடைய இடத்தைப் போலவோ, மதிக்கப்படவோ, பிரச்சார ஊடக வெளிச்சத்தைப் பெறவோ முடியாது – எவ்வளவு பல கோடிக்கணக்கான சொத்துக்களை அவர்கள் மடம் பெற்றிருந்தாலும்! நம் நாட்டில் உள்ள பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திரர் என நால் வருணக்கோட்பாடே அதற்கு மூல காரணம்!
இப்படி பற்பல கூத்துக்கள்.
இதோடு நிற்பதில்லை… இப்பணத்தின் தாக்கம்! புகழ் ெபருமைகளை வேட்டையாட இதுவே முக்கியக் கருவியாக இன்றைய சமூகத்தின் நிலைமைகள் இருக்கின்றன.
தந்தை பெரியார் அவர்கள் பணம் பாதாளம் வரை பாயும் என்பதை விளக்க, பொதுக் கூட்டங்களில் பேசும்போது சொல்லுவார்.
‘‘1 கோடி, 2 கோடி ரூபாயை என்னிடம் கொடுங்கள், நான் அதை வைத்து கழுதையைக்கூட ‘மஹா ஆத்துமா’ என பிரச்சாரத்தின் மூலம் மக்களை நம்ப வைத்துக் காட்டுகிறேன்’’ என்றார்.
மஹாத்மா ஜோதிபா பூலேவையோ, மஹாத்மா காந்தியையோ தாக்கவோ, இழிவுபடுத்தவோ அவர் இப்படிக் கூறவில்லை. மஹான் மஹாத்மியம் என்பவர்களின் உருவத்தை, கொட்டை விளம்பர வெளிச்சத்தை இடையுறாமல் காட்டினால் எதுதான் சாத்தியமில்லை!
நேர்மையாக சம்பாதித்து, அன்றாட வாழ்க்கை தவறின்றி நடத்திடும் எளியவர்கள் இந்த சமூகத்தினரால் பாராட்டப்படுவதில்லை. மாறாக வாழத் தெரியாத பைத்தியக்காரர்கள் என்றல்லவா வர்ணிக்கப்படும் கொடுமை?
(தொடரும்)