எய்ட்ஸ் நோயைவிட கொடுமையானது பார்ப்பனிய இந்து மதக் கருத்தியல்;
அந்த கருத்தியல்தான் இந்திய சமுகத்தை அழித்துக்கொண்டிருக்கும் பெரும் நோய்!
‘‘உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று”
– திருவள்ளுவர்
கணவன் மனைவியாக இருந்தாலும், உறவினர்களாக, நண்பர்களாக, சகோதரர்களாக, குழந்தைகளாக, சமூகமாக இருந்தாலும் உடன்பட்டு இசைந்து வாழாதவர்களுடைய வாழ்க்கை என்பது குடத்திற்குள் இருக்கும் பாம்புடன் வாழ்வதற்கு ஒப்பாகும் என்று இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன் திருவள்ளுவர் எழுதியிருக்கிறார்.
அந்தக் காலத்தில் மட்டுமல்ல. இன்றும் திருவள்ளுவர் எழுதியது பொருத்தமாகத்தான் இருக்கிறது. பார்ப்பனிய இந்து மதக் கருத்தியல் மேலாதிக்கம் நிறைந்த இந்திய சமூ கத்தில் தலித்துகள் வாழ்வது என்பதுபாம்புடன் வாழ்வதை விடவும் கொடூரமானது.
பார்ப்பனியக் கருத்தியல் மேலாதிக்கம் எல்லாத்துறைகளிலும், எல்லா இடங்களிலும் செயல்படுகிறது
பார்ப்பனியக் கருத்தியல் மேலாதிக்கம் கண்ணுக்குத் தெரிந்தும், தெரியாமலும் எல்லாத்துறைகளிலும், எல்லா இடங்களிலும் செயல்படுகிறது. காற்றைப் போல அது எல்லா இடத்திலும் இருக்கிறது. இந்து மதம் என்ற பெயரால் பார்ப்பனியம் உருவாக்கிய மேலாதிக்கக் கருத்தியலைப் பாதுகாப்பது இடைநிலை ஜாதியினர். கருத்தியலை உரு வாக்கியவர்களைவிட, அதை பாதுகாப்பவர்கள்தான் குற்றவாளி என்பது குறித்து, மேலாதிக்கத்தை எதிர்த்து வெளியேறுதல் (அம்பேத்கர் புத்தமதத்தை தழுவியது, கிருத்துவர்களாக, முஸ்லீம்களாக மாறுவது) அடங்கிப் போவது, அடங்க மறுத்தல் என்பது குறித்து நான் பேசப் போவதில்லை. தலித்துகளின் சிறுசிறு முனகல்கள்கூட சமூகச் சீர்குலைவாகச் சித்தரிக்கப்படுவது, தலித்துகள் அடங்கிப்போவதுதான் சமூக அமைதிக்கு உகந்தது என்ற போதனை குறித்தும் நான் பேசப் போவதில்லை.
பார்ப்பனியக் கருத்தியலை ஒழிக்காமல் அதனுடைய மேலாதிக்கத்தை ஒழிக்க முடியாது. அதனால் அடங்க மறு, அத்து மீறு என்று புரட்சிகர வசனம் பேசப் போவதில்லை. AIIMS, JIPMER போன்ற நிறுவனங்களில் NEET தேர்வு ஏன் கொண்டு வரப்படவில்லை. IIT, IIM போன்ற கல்வி நிறு வனங்களின் உலகத்தரம் எப்படி இடஒதுக்கீட்டின் மூலம் தாழ்ந்துவிடும், இந்தியா வல்லரசாவதற்கு இடஒதுக்கீட்டு முறை எப்படி தடையாக இருக்க முடியும்? நீங்கள் உருவாக்க விரும்பும் வல்லரசு யாருக்கானது, என்ற கேள்விகளை எல்லாம் நான் கேட்கப் போவதில்லை.
மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை நீக்கி பொதுப்பட்டியலுக்குக் கொண்டுவந்து இந்தியா முழுவதும் தரப் படுத்தப்பட்ட ஒற்றைக் கல்வி முறையை அதுவும் இந்தி வழியாக உருவாக்குவோம் என்று சொல்வதுஅநீதியல்லவா என்று கேட்கப்போவதில்லை.அதேமாதிரி முற்றும் துறந்து சந்நியாசியானவர்கள் எல்லாம் எம்.எல்.ஏ., எம்.பி. ஒன்றிய அமைச்சர், மாநில அமைச்சர், முதலமைச்சர் ஆவது பற்றியும், சந்நியாசிகள் எல்லாம் வங்கிக்கிளைகள் மாதிரி நாட்டுக்கு நாடு தியானக் கிளைகளும் சொத்துகள் வைத்திருப்பதைப் பற்றியும் நான் எதுவும் பேசப்போவதில்லை.
தென்னிந்தியாவில் இருப்பவர்கள் கருப்பாக இருக்கிறார்களா, பார்ப்பனிய இந்து மதம் அவர்களை கருப்பாக சித்தரிக்கிறதா?
‘‘இந்தியாவில் நிறவெறி கிடையாது. தென்னிந்தியாவில் இருக்கும் கருப்பர்களுடன்தான் வாழ்ந்துகொண்டு இருக்கி றோம்” என்று பி.ஜே.பி.யின் மேனாள் எம்.பி. தருண் விஜய் கூறியிருக்கிறார். தென்னிந்தியாவில் இருப்பவர்கள் கருப்பாக இருக்கிறார்களா, பார்ப்பனிய இந்து மதம் அவர்களை கருப்பாக சித்தரிக்கிறதா, பார்ப்பனிய இந்துமத கருத்தியல் அவர்களை இருட்டுக்குள் வைத்திருப்பதால் அவர்கள் கருப்பாகத் தெரிகிறார்களா என்று நான் கேட்க போவதில்லை.
ஜாதியை, ஜாதிய மேலாதிக்கத்தை உருவாக்கியவர்கள் ஜாதியை, ஜாதிய மேலாதிக்கத்தை பாதுகாப்பதற்கான கருவிகளை, அடிப்படைகளை உருவாக்கியவர்கள், பாது காப்பவர்கள் யார், ஜாதிய மேலாதிக்கத்தின் தன்மைகள் என்ன, ஜாதியைக் காப்பாற்றும் சினிமா குறித்தெல்லாம் நான் பேசப்போவதில்லை.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஊர்வலத்தில் கலந்து கொண்டு, பொதுக்கூட்டத்திலும் பேசிவிட்டு வீட்டிற்குச் சென்று தந்தையின் கரும காரிய சடங்குகளை பார்ப்பனரை வைத்து செய்பவர் குறித்து, தீண்டாமை ஒழிப்பு முன்னணி யில் முதல் கட்டத் தலைவர்களாக இருப்பவர்கள், தீண்டாமை ஒழிப்பு மாநாட்டிற்கு சிறப்புவிருந்தினர்களாக வருபவர்கள் எல்லாம் தங்களுடைய பெயருக்குப் பின்னால் இருக்கும் ஜாதி அடைமொழியை ஏன் நீக்காமல், நீக்க விரும்பாமல் இருக்கிறார்கள் என்பது குறித்து, இடதுசாரி இயக்கத்தின் வேட்பாளராக ஏழுமுறை தேர்தலில் நின்று வென்றவர், ஒருமுறை மக்களவையின் சபாநாயகராக இருந்தவர் தன்னுடைய பேரனுக்குப் பூணூல் அணியும் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடியது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஏனோ இந்த நேரத்தில் ஜோதிபாசு, பட்டாச்சார்யா, ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு போன்ற பல பெயர்கள் நினைவில் வந்து தொலைக்கிறது. அடையாளச் சிக்கல் என்பது அடிப்படையில் ஜாதிய சிக்கல்தான்.
நான் எழுத்தாளன். அதனால் அறிவுத்தளத்தில், இலக்கி யத்தளத்தில் இருக்கிற மேலாதிக்கம் குறித்து மட்டுமே பேச விரும்புகிறேன்.
1980-1990 காலக்கட்டத்தில் கன்னட, மராத்திய மொழியில் எழுதப்பட்ட தன் வரலாற்றுக் கதைகளின் வழியாக தமிழில் தலித் இலக்கியம் குறித்த உரையாடல் தொடங்கியது. அந்த வகையில் கன்னட, மராத்தி தன் வரலாற்றுக் கதைகளுக்கு தமிழ் தலித் இலக்கியம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது.
சித்தலிங்கையா, வசந்த் மூன், பேபி காம்பிளி, சரண்குமார் லிம்பாலே, ஓம்பிரகாஷ் வால்மீகி, அர்ஜுன் டாங்களே, ஊர்மிளா பவார் போன்றவர்களுடைய தன் வரலாற்றுக் கதைகளை விட, லஷ்மண் மானே, லஷ்மண் கெய்க்வாட், கிஷோர் சாந்தா பாய் காலே ஆகியோர் எழுதிய, உபாரா, உச்சாலியா, குலாத்திதான்- தமிழில் அதிகம் பேசப்பட்டு, விவாதிக்கப்பட்டு, கொண்டாடப்பட்டது. இந்த மூன்று தன்வரலாற்றுக் கதைகளும்- தலித் தன்வரலாற்றுக் கதைகள் என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டிக்கிறது. இவைதான் தமிழில் “தலித்” இலக்கியத்திற்குச் சிறந்த முன்னுதாரணங்களாக அடையாளம் காட்டப்பட்டன.
லஷ்மண் மானே, லஷ்மண் கெய்க்வாட், கிஷோர் சாந்தா பாய் காலே மூவரும் நாடோடி பழங்குடியினத்தவர்கள். அவர்கள் எழுதிய உபாரா, உச்சாலியா, குலாத்தி ஆகிய மூன்று தன் வரலாற்றுக் கதைகளும், இரண்டு விதமான கதைகளை சொல்கிறது. முதல் கதை தங்கள் சமூகம் பொதுச் சமூகத்தால் பட்ட அவமானம். இரண்டாவது கதை தங்களுடைய சமூகம் மகர், மங் போன்றவர்களுக்கு ஏற்படுத்திய அவமானம். இந்த மூன்று நூல்களையும் படிக்கிற மனசாட்சியுள்ள எவரும் இவை தலித் தன்வரலாற்றுக் கதைகள் அல்ல என்று சொல்வார்கள். ஆனால் தமிழ், இந்திய அறிவுலகம் – தலித் தன்வரலாற்றுக் கதைதான் என்று கொண்டாடியது. இது எப்படி, ஏன், எதனால் நிகழ்ந்தது என்று கேட்பதும், அறிவு ஜீவிகளுக்கும், இலக்கியவாதிகளுக்கும், இவற்றை மொழிப் பெயர்த்தவர்களுக்கும், வெளியிட்டவர்களுக்கும் இவை தலித் தன்வரலாற்றுக் கதைகள் அல்ல என்பது தெரியுமா, தெரியாதா என்று கேட்பதும் குற்றமாக இருக்காது என்று நம்புகிறேன். (இவற்றைப் பேசக்கூடாது என்று அர்ஜுன் டாங்களேவும், ஜனநாயக சக்திகள் என்பவர்களும் சொல்கிறார்கள். அதாவது உள் ஜாதி முரணைப் பேசக்கூடாது என்று. நாடோடி பழங்குடியினத்தவரும், மகர், மங்கும் ஒன்றல்ல. உண்மையை எழுதியவர்கள் என்ற முறையில் லஷ்மண் மானே, லஷ்மண் கெய்க்வாட், கிஷோர் சாந்தாபாய் காலே மீது பெரும் மதிப்பு எனக்குண்டு.)
மராத்தியிலிருந்தும், கன்னடத்திலிருந்தும் வந்த தன் வரலாற்றுக் கதைகளின் மூலமாக தமிழிலும் தன் வரலாற்றுக்கதை எழுதும் முயற்சிகள் நடைபெற்றன. அந்த முயற்சிகள் தன்னெழுச்சியாக நடக்கவில்லை. மாறாக தூண்டப்பட்டன. கெட்ட வார்த்தை போட்டு எழுத வேண்டும். அப்படி எழுதுவதுதான் ”தலித்” இலக்கியம் என்ற இலக்கிய வரையறையும் தரப்பட்டது. கெட்டவார்த்தை போட்டு எழுத மாட்டேன் என்று சொன்னவர்கள், நான் எழுதுவது இலக்கியம்-தலித் இலக்கியம் அல்ல என்று சொன்னவர்கள் மீது “தலித் பார்ப்பனன்’’ ‘பார்ப்பன அடிவருடி’ என்று முத்திரைக் குத்தப்பட்டது. (தமிழ்நாட்டில் மட்டும்தான் நான் தலித் எழுத்தாளன் அல்ல என்று அறிவித்த நிலை இருந்தது. பிற மாநிலத்தில் அப்படி இல்லை.) இந்த முத்திரை குத்தும் செயலில் ஈடுபட்டவர்கள் அறிவுஜீவிகளும், இலக்கியவாதிகளும்தான்.
பிற ஜாதி எழுத்தாளர்களிடம்
இதுவரை கேட்கப்படவில்லை!
முன்பெல்லாம் “தலித்’’ எழுத்தாளர்களிடம் பேட்டி எடுக்கும்போது “தலித் இலக்கியம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்பார்கள். இப்போது ‘‘தலித் இலக்கியம் தேக்கமடைந்ததற்கு காரணமாக எதை நினைக்கிறீர்கள்?” என்று கேட்கிறார்கள்.இந்த இரண்டு கேள்விகளும் தலித் எழுத்தாளர்களிடம் மட்டுமே கேட்கப்படுகிற, அவர்கள் மட்டுமே பதிலளிக்க வேண்டிய, அவர்களுக்கென்று மட்டுமே ஒதுக்கப்பட்டவைகளாக இருக்கின்றன. இந்தக் கேள்விகள் பிற ஜாதி எழுத்தா ளர்களிடம் இதுவரை கேட்கப்படவில்லை.
பிற ஜாதி எழுத்தாளர்களிடம் கேட்பதற்கென்றே அதி உன்னத தூய இலக்கியப் பத்திரிக்கையாளர்கள் பிரத்தியேகமான கேள்விகளை வைத்திருக்கிறார்கள். பிற ஜாதி எழுத்தாளர்களிடம் ‘‘தமிழ், இந்திய, உலக இலக்கியச் சூழல் எப்படியிருக்கிறது? இன்றைய இலக்கியப் போக்கு எப்படியிருக்கிறது?, இலக்கியம் ஏன் எழுதப்பட வேண்டும், ஏன் படிக்கப்பட வேண்டும்? இலக்கியத்திற்கும், வாழ்க்கைக்குமான உறவு என்ன? கல்விக்கும் இலக்கியத்திற்குமான உறவென்ன? இலக்கிய செயல்பாட்டில் மொழியின் செயல்பாடு எந்த அளவிற்கு முக்கியமானது?” என்பன போன்ற கேள்விகளையே கேட்பார்கள்.
தலித் எழுத்தாளரிடம் கேட்கும் போது ‘‘உங்களுடைய இளமைக் காலம் எப்படியிருந்தது? பள்ளிக்கு எப்படி சென்றீர்கள்? பள்ளி, கல்லூரியில் சந்தித்த இழிவுகள் என்ன? இளமைக்காலத்தில் சந்தித்த கொடூரங்கள் என்ன? உங்களுடைய படைப்புகள்-உங்களுடைய வாழ்க்கை யில் நடந்த உண்மை சம்பவங்களா?” என்பது போன்ற கேள்விகளையே கேட்பார்கள். கேள்வி கேட்பவரின் உள்நோக்கத்தை, கேட்கப்படும் கேள்விகளின் தன்மையை அறியாமல், தலித் எழுத்தாளர்கள்
‘‘என்னுடைய இளமைக்காலம் பன்றிக்குடிசை போன்றிருந்த ஒரு வீட்டில் கழிந்தது. இடமில்லாமல் தெருவில் படுத்திருப்போம். எங்களோடு பன்றிகளும்படுத்திருக்கும். பன்றிகளோடுதான் விளையாடுவோம். எங்கள் வீட்டின் வாசல்முன் சாக்கடை இருக்கும். அதில் கொசுக்கள் இருக்கும். அதில் குதித்துகுதித்து விளையாடுவோம். எப்போதும் எங்கள் தெருவில் சண்டையும் சச்சரவுமாக இருக்கும். கெட்டகெட்ட வார்த்தைகளைச் சொல்லித் திட்டிக்கொள்வார்கள். செத்த மாட்டை என் அப்பா தூக்கி வரும்போதும், மாட்டை அறுக்கும்போதும் நான் காக்கைகளை ஓட்டிக்கொண்டிருப்பேன். என் அப்பா பறைமேளம் அடித்துக்கொண்டு போகும்போது நானும் கூடவே போவேன். இரவில் சோறே இருக்காது. பட்டினிதான் கிடந்தோம். பள்ளியில், கல்லூரியில் என்னை ஒதுக்கி வைத்தார்கள். கோட்டா பையன்கள் என்று கிண்டலடித்தார்கள். என்னுடைய எழுத்து என்பது என்னுடைய வாழ்க்கைதான். அதில் பொய்க்கலப்பில்லை.தலித் இலக்கியம் என்று வந்த பிறகுதான் என்னுடைய எழுத்துகள் சமூக அங்கீகாரம் பெற்றன.” என்று வாக்குமூலம் கொடுத்து சாட்சியமளிப்பார்கள்.
“அய்யோ பாவம்” என்ற அளவில் கழிவிரக்கத்தைத் தூண்டக்கூடிய வாக்குமூலத்தைதான் தலித் இலக்கியம் என்று தமிழிலும், ஆங்கிலத்திலும் போட்டியிட்டு வெளியிட்டு உலகச்சந்தைக்கு கொண்டு சென்றது அறிவுலகம், இலக்கிய உலகம். சிறப்பு மலர்கள் வெளி யிட்டது. நாங்கள் செய்த கொடுமைகளை எல்லாம் மறக்காமல் நினைவில் வைத்திருந்தது மட்டுமல்ல. அதை அழியாத ஆவணமாக்கியதற்காக மகிழ்வதோடு, உன்னைப் பாராட்டுகிறோம் என்றும் சொன்னது. அந்தப் பாராட்டுதலும், அங்கீகாரமும் எத்தனை ஆண்டுகள் நீடித்தன? பத்து பதினைந்து ஆண்டுகள் கூட ஆகவில்லை அதற்குள் பொது சமூகத்தின் பரிவுணர்ச்சி மிச்சமில்லாமல் வடிந்து போனது ஆச்சரியம்.
தலித்களின் தன் வரலாற்றுக் கதைகளையும், பிற படைப்புகளையும் படித்துவிட்டு பொது சமூகம் காட்டியது பரிவுணர்ச்சி. நீதி உணர்ச்சி அல்ல. பரிவுணர்ச்சி வேறு. நீதி உணர்ச்சி வேறு. பரிவுணர்ச்சி என்பது தன்னை மேலான நிலையில் வைத்துக்கொண்டு மேலிருந்து கீழே பார்ப்பது. நீதி உணர்ச்சி என்பது தன்னையே சுய விமர்சனம் செய்துக்கொள்வது. தலித்துகள் தங்கள் மீது செலுத்தப்பட்ட மேலாதிக்கம் குறித்து எழுதியபோது குற்ற உணர்ச்சி அடையாமல் பொது சமூகம் பரிதாப உணர்ச்சியை மட்டுமே காட்டியது. தலித் இலக்கியங்கள் இதுவரை உருவாக்கியது பரிதாப உணர்ச்சியை மட்டும்தான். குற்ற உணர்ச்சியை அல்ல. நீதி உணர்ச்சியை அல்ல. அற உணர்ச்சியை அல்ல. இலக்கியப் படைப்பின் அடிப்படை நோக்கம் அழகியலை உருவாக்கிக் காட்டுவதல்ல. சமூக அறத்தை உருவாக்குவதுதான்.
தலித் இலக்கிய சிறப்பிதழ்களை யாரும் இப்போது வெளியிடுவதில்லை. தலித் எழுத்தாளர்களின் நூல்கள் மொழிப்பெயர்க்கப்படுவதில்லை. தலித் இலக்கியத்திற்கு சந்தை மதிப்பு போய்விட்டது. திடீரென்று பொது சமூ கத்திற்கு ஊற்றெடுத்த கருணையின் ஊற்றுக்கண் அடைப்பட்டுவிட்டது. நினைவுகளை எழுதுதல், பாலியத்தை எழுதுதல் என்று அரசியல் நீக்கம் செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட தலித்துகள் எழுதிய தன் வரலாற்றுக் கதைக்கு கொடுத்த முன்னுரிமையை அவர்கள் எழுதிய நாவல், சிறுகதை, கவிதைக்கு கொடுக்கவில்லை. கன்னடத்திலும், மராத்தியத்திலிருந்தும் தன்வரலாற்றுக் கதைகள் மட்டுமே மொழிப்பெயர்க்கப்பட்டன. இதன் மூலமாக பொதுசமூகம் உருவாக்கிக்காட்ட விரும்பிய இயல்புகள், சித்தரிக்க விரும்பிய தலித் இலக்கியம் எப்படிப்பட்டது? M.Phil, Ph.D. ஆய்வுக்கான தலைப்பாக தலித் இலக்கியத்தை எடுக்கிற, விரும்பிப்படிக்கிற மாணவர்கள் விடுதிக்கு வந்ததும், கோட்டாப் பையன்கள் என்றும், இட ஒதுக்கீட்டால்தான் கல்வி நிறுவனங்களின் தரமும், தங்களுடைய வாழ்க்கையும் போய்விட்டதாக சொல்கிறார்கள். இவைகளெல்லாம் என்னுடைய கேள்விகள் அல்ல. எனக்கிருக்கும் சந்தேகங்கள்.
உலகிலுள்ள எல்லா எழுத்தாளர்களுமே தாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை, பார்த்ததை. அனுபவித்ததை, சந்தித்ததை, தன்னைச் சுற்றியுள்ள சமூக வாழ்க்கையைத்தான் படைப்பிலக்கியமாக மாற்றுகிறார்கள் என்பதை எல்லா எழுத்தாளர்களும் ஒத்துக்கொள்கிறார்கள். அதன்படி ஒவ்வொருவரும் அவரவருடைய சமூகவாழ்க்கையை அதாவது ஜாதி வாழ்க்கையைத்தான் எழுதியிருக்கிறார்கள்.
பார்ப்பனன்- பார்ப்பன சமூக வாழ்க்கையை எழுதி யிருக்கிறார். செட்டியார் – செட்டியார் சமூக வாழ்க்கையை, பிள்ளைமார்- பிள்ளைமார் சமூக வாழ்க்கையை எழுதி யிருக்கிறார். வன்னியர், கவுண்டர், முதலியார் எல்லாம் அவரவர் சமூக வாழ்க்கையைத்தான் எழுதியிருக்கிறர்கள் அப்படியென்றால், பார்ப்பன இலக்கியம், பிள்ளைமார், செட்டியார், கவுண்டர், முதலியார், வன்னியர் இலக்கி யம் என்று ஜாதிய அடையாளத்துடன் தானே இருக்க வேண்டும். நிஜத்தில் அப்படி இல்லை.பிற சமூகத்தினர் எழுதுவது ஜாதி இலக்கியமாக அல்லாமல்- இலக்கியமாக மாறும்போது -தலித் எழுதுவது மட்டும் எப்படி – இலக்கியமாக மாறாமல் தலித் இலக்கியமாக மாறுகிறது? இந்த மண்ணின் பூர்வக்குடி நான்தான் என்றால், இந்த மொழி என்னுடையதுதான் என்றால் – அது நீச பாஷையாக இருந்தாலும் நான் எழுதுவது தானே தமிழ் இலக்கியமாக இருக்க முடியும்?சித்தலிங்கையா எழுதியது கன்னட இலக்கியமாக இல்லாமல் கன்னட தலித் இலக்கியமானதும், வசந்த் மூன், பேபி காம்பிளி, சரண்குமார் லிம்பாலே, ஓம்பிரகாஷ் வால்மீகி, அர்ஜுன் டாங்களே, ஊர்மிளா பவார், லஷ்மண் மானே, லஷ்மண் கெய்க்வாட், கிஷோர்சாந்தா பாய் காலே போன்றவர்கள் எழுதியதுமராத்திய இலக்கியமாக இல்லாமல் மராத்திய தலித் இலக்கியமானதும் வேடிக்கை.
பார்ப்பனர், முதலியார், செட்டியார், பிள்ளைமார், கவுண்டர், வன்னியர் எழுத்தாளர்களிடம் சென்று பேட்டி காணுகின்ற பத்திரிகையாளர்கள் “உங்களுடைய ஜாதி இலக்கியம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?” என்றோ “உங்களுடைய ஜாதி இலக்கியம் தேக்கமடைந்ததற்கான காரணமாக எதை கருதுகிறீர்கள்” என்றோ கேட்பதில்லை. அப்படி கேட்காமல் தடுப்பது எது? தலித் எழுத்தாளரை ‘‘தலித்” எழுத்தாளர் என்றும் அவர் எழுதியதை ‘‘தலித்” இலக்கியம் என்றும் பகிரங்கமாகச் சொல்ல முடியும். அப்படி சொல்வதினால் சமூக சீர்குலைவு எதுவும் நிகழாது.
யார் எழுதுவதுதான்
தமிழ் இலக்கியம்?
தலித்துகளே அந்த அடையாளத்தை, முத்திரை குத்துதலை விரும்பி ஏற்றுக்கொள்வார்கள். அந்த அங்கீ காரமே பெரிது என்று மகிழ்வார்கள். ஆனால் இடைநிலை ஜாதியினர் அப்படி இருக்க மாட்டார்கள். அதனால் பார்ப்பனிய மேலாதிக்க கருத்தியல்-இடைநிலை ஜாதியினருக்கு ஜாதி அடையாளத்திற்குப் பதிலாக- நிலவியல் சார்ந்த அடையாளத்தை வழங்கியது. கொங்குநாட்டு இலக்கியம், நாஞ்சில் நாட்டு இலக்கியம், கரிசல்காட்டு இலக்கியம். இடதுசாரிகள் எழுதினால் அதற்கு முற்போக்கு முத்திரை. அப்படியென்றால் யார் எழுதுவதுதான் தமிழ் இலக்கியம்?
நாஞ்சில் நாட்டில் வாழும் பார்ப்பனர் எழுதுவது நாஞ்சில்நாட்டு இலக்கியமல்ல. தமிழ் இலக்கியம். கொங்கு நாட்டில் வாழும் பார்ப்பனர் எழுதுவது கொங்கு இலக்கிய மல்ல. தமிழ் இலக்கியம். கரிசல்காட்டில் வாழ்கிற பார்ப்பனர் எழுதுவது- கரிசல்காட்டு இலக்கியமல்ல. தமிழ் இலக்கியம். அதுமட்டுமல்ல. தஞ்சாவூர், கும்பகோணம், சிதம்பரம், நாகர்கோவில், சென்னை மட்டுமல்ல. கேரளா, மும்பை, தில்லி மட்டுமல்ல. உலகின் எந்த மூலையிலிருந்து பார்ப்பனர் எழுதினாலும் -அது தமிழ் இலக்கியம். இதுதான் இந்துமத பார்ப்பனிய மேலாதிக்கத்தின் உண்மையான முகம். எய்ட்ஸ் நோயைவிட கொடுமையானது பார்ப்பனிய இந்துமத கருத்தியல். அந்த கருத்தியல்தான் இந்திய சமூகத்தை அழித்துக்கொண்டிருக்கும் பெரும் நோய்.
கிராமத்திலிருக்கும் மனிதர்கள் செய்கிற ஜாதி சார்ந்த பாகுபாட்டை, ஒதுக்கலை, அவமதிப்பை புரிந்துகொள்ள முடிகிறது. ஜாதி சங்கத் தலைவர்களின், ஜாதிக் கட்சித் தலைவர்களின் செயல்பாடுகளை புரிந்துகொள்ள முடிகிறது. ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. போன்ற வகையறாக்களின், அதன் கிளை அமைப்புகளின் செயல்பாடுகளை புரிந்துகொள்ள முடிகிறது. இவர்கள் எல்லாம் கண்முன் நிற்கும் எதிரிகள். நாங்கள் இப்படித்தான், எங்களுடைய நிலைப்பாடு இதுதான் என்று எதிரிகள் வெளிப்படையாக அறிவித்து விடுகிறார்கள்.
உடனுறையும் பாம்புகள் யார்? எது?
ஆனால் அறிவு ஜீவிகளை, இலக்கியவாதிகளை, படித்தவர்களை, முற்போக்காளர்களை, ஜாதி பார்க்க மாட்டேன் நான் வித்தியாசமானவன் என்று சொல்பவர்களை, புரட்சி பேசுபவர்களை, இடதுசாரித் தோழர்களை, தீண்டாமை ஒழிப்பு முன்னணியில் இருப்பவர்களை எப்படி புரிந்து கொள்வது? பார்ப்பனிய உட்செரித்தலையும், பார்த்தொ ழுகும் நோயிலிருந்தும், போலச் செய்தல் நோயிலிருந்தும் விடுபடுவது எப்படி? உடனுறையும் பாம்புகள் யார்? எது?
அறிவுலகத்தைச் சேர்ந்தவர்கள் முற்று முழுதாக மார்க்சிய விழுமியங்களை, ஜனநாயக பண்புகளை கொண்டவர்களோ, அவற்றை நடைமுறை வாழ்வில் பின்பற்றுபவர்களோ அல்ல. அறிவுலகம் இலக்கியத்தின், கலையின் நோக்கத்தையும் அதன் உன்னதத்தையும் எவ்வளவு உயர்வாக பேசினாலும், மதித்தாலும் போற்றி னாலும் பயன்பாட்டு நிலையில் அது நிர்க்கதியான நிலை யில்தான் இருக்கிறது.
ஜாதி பார்த்து முகநூல் குழுக்கள், வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப்படுகின்றன!
ரயில் வந்தபோது, தொழிற்சாலைகள் உருவானபோது, சினிமா தியேட்டர்கள், பேருந்துகள் பெருகியபோது, கல்வி, பொருளாதாரம் மேம்பாடு அடைந்தபோது தீண்டாமை ஒழிந்துவிடும் என்று சொல்லப்பட்டது. எப்படிப்பட்ட நவீன மாற்றங்கள் நிகழ்ந்தாலும் அதற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் சக்தியை ஜாதி கொண்டிருக்கிறது என்பதை அறியாமல் சொல்லப்பட்டது. இப்போது சமூக ஊடகங்கள் என்று வர்ணிக்கப்படுகிற முகநூல், வாட்ஸ்அப் மூலமாகவும் ஜாதி வளர்க்கப்படுகிறது. ‘என் ஜாதிப் பெண்ணை காதலித்தால் வெட்டுவேன்’ என்று அரிவாளோடு முகநூலில் போஸ் கொடுக்கிறார்கள். ஜாதி பார்த்து முகநூல் குழுக்கள், வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப்படுகின்றன. எப்படிப்பட்ட நவீனத்து வத்தை யும், எல்லாவிதமான நவீனத்துவத்தையும் சாதாரணமாக உள்வாங்கி செரிக்கும் வல்லமை பார்ப்பனிய இந்து மதம் உருவாக்கிய ஜாதிக்கு உண்டு.
“கிராமங்களைக் காலி செய்யுங்கள்” என்று
அம்பேத்கர் அறைகூவல்
விடுத்தது ஏன்?
ஜாதிய தன்மைகளை அதிகமாக பாதுகாக்கிற இடமாக கிராமங்கள் இருக்கின்றன என்ற எண்ணத்தில் அம்பேத்கர் “கிராமங்களைக் காலி செய்யுங்கள்” என்று அறைகூவல் விடுத்தார். நவீன கல்வி, வேலை வாய்ப்புகளின் மூலம் கிராமத்திலிருந்து நகரத்தில் குடியேறுகிற வாய்ப்புகளை தலித்துகள் பெற்றிருக்கிறார்கள். அதே நேரத்தில் நகர விரிவாக்கம், நகரை அழகுபடுத்தல், நகரின் அழகை சேரிகள் கெடுக்கின்றன என்று காரணம் சொல்லி நகரத்தில் பூர்வ குடிகளாக வசித்து வரும் தலித்துகளை நகரத்தைவிட்டு அப்புறப்படுத்துகிற செயலும் இப்போது வேகமாக நடைபெறுகிறது.
நகர மயம், நவீனமயம் என்பது பெரு முதலாளிகளுக்காக உருவாக்கப்படுகிற செயல்பாடு. பார்ப்பனியம் உருவாக்கிய இந்துமத மேலாதிக்கத்தை எதிர்க்கொள்வதோடு,புதிதாக உருவாகிவரும்- நவீனம், நகரமயம் என்ற பெயரில் வரும் புதிய மேலாதிக்கங்களையும் எதிர்க்கொள்ள வேண்டிய நிலை. மேலாதிக்கம் என்பது பல தனித்துவங்களைஅழித்து ஒற்றை அதிகாரத்தை நிறுவக்கூடியது.
அறிவுஜீவிகளும் இலக்கியவாதிகளும்கூட பார்ப்பனிய இந்து மதம் கட்டமைத்த ‘புனித’த்தைக் காப்பாற்றுபவர்களே!
நமது கடவுள் ஜாதிய மேலாதிக்கத்தைக் காப்பாற்றும் கடவுள். நமது மதம் ஜாதிய மேலாதிக்கத்தைக் காப்பாற்றும் மதம். நமது மொழி ஜாதிய மேலாதிக்கத்தைக் காப்பாற்றும் மொழி. நமது அரசு ஜாதிய மேலாதிக்கத்தைக் காப்பாற்றும் அரசு. நமது கலை, இலக்கியம் ஜாதிய மேலாதிக்கத்தைக் காப்பாற்றும் கலை, இலக்கியம். நமது அறிவு ஜாதிய மேலாதிக்கத்தைக் காப்பாற்றும் அறிவு. நமது சினிமா ஜாதிய மேலாதிக்கத்தைக் காப்பாற்றும் சினிமா. நமது அறிவுஜீவிகளும் இலக்கியவாதிகளும்கூட பார்ப்பனிய இந்து மதம் கட்டமைத்த ‘புனித’த்தைக் காப்பாற்றுபவர்களே!
நன்றி: ‘முரசொலி’, 24.9.2025