மத விழாக்களை பி.ஜே.பி. அரசு முன்னின்று நடத்துவது கண்டிக்கத்தக்கது!

5 Min Read

தசரா விழாவை முஸ்லிம் பெண் எழுத்தாளர் தொடங்கி வைக்கக் கூடாதா?
மதச் சார்பின்மை என்பது அரசியலமைப்புச் சட்டம் வகுத்த நெறி!
பி.ஜே.பி.மூலம் தொடுக்கப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

பெங்களூருவில் தசரா விழாவைத் தொடங்கி வைப்பவர் இஸ்லாம் மதத்தைச் சார்ந்த பெண் எழுத்தாளர் என்பதால்,  இந்து மதப் பண்டிகையைத் தொடங்கி வைப்பதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:

மோடி கொடுத்த வாக்குறுதிகள் என்னாயிற்று?

இந்திய நாட்டு மக்களிடையே நிலவி வருகின்ற வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை போன்றவற்றை முன்னிறுத்தி, ‘‘சப்கா சாத், சப்கா விகாஸ்’’ என்று கூறினார் பிரதமர் மோடி.

  1. ‘‘நாட்டில், ஒவ்வொரு குடிமகன் – மகள் வங்கிக் கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் பொத்தென்று வந்து விழும்!’’
  2. ‘‘ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்புத் தரப்படும்’’

என்ற பொய்யான வாக்குறுதிகளைக் கூறி, ஒன்றிய ஆட்சியைப் பிடித்து, பிறகு அவர்களே அதை ‘‘ஜூம்லா’’ என்று மழுப்பிப் பேசினர்.

அதனோடு பலவிதமான ‘‘வித்தைகளாலும்’’, தேர்தல் ஆணையத்தின் துணையோடும் ஆட்சியைப் பிடித்து, கடந்த 11 ஆண்டுகளாக ஒன்றிய அரசைத் தக்க வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். ஆணைப்படி,
பி.ஜே.பி. அரசு, அதன் உண்மை முகத்தை, முகமூடி யைக் காட்டும் வகையில் படிப்படியாகச் செய்து வருகிறது.

‘Hidden Agenda’ என்ற மறைத்து வைக்கப்பட்ட  திட்டங்கள் வெளிப்படையாக செயலுக்கு வருகின்றன.

அதில் ஒன்று, அரசியலமைப்புச் சட்டப்படி அமை யும் எந்த ஆட்சியும், அதன் முகப்புரை (Preamble) என்ற அடிக்கட்டுமானத்தை மாற்றிட முடியாது என உச்சநீதிமன்றம் போன்றவை பல தீர்ப்புகளில் கூறி யும்கூட, அவற்றைப் புறந்தள்ளி, தங்களது திட்டங்களை – கொள்கைகளை ஒன்றிய அரசு திணித்து வருகிறது.

அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற்ற மதச்சார்பின்மை அடிக்கட்டுமானத்தை நீக்கி விளம்பரம் செய்வதா?

‘மதச்சார்பின்மை’ (Secularism) என்ற சொல்லை நீக்கிவிட்டு, குடியரசு நாள் விளம்பரத்திலேயே பகிரங்க அறிவிப்பு வெளியிடுகிறது!

உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டு (பா.ஜ.க.வி னர்), அதனை உச்சநீதிமன்றம் நிராகரித்து, அடுத்து வந்த திருத்தமாக இருந்தாலும்கூட, அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளபடிதான் குறிப்பிடவேண்டும், ஆட்சியும் அப்படித்தான் அமையவேண்டும் என்று தக்க விளக்கம் தந்துள்ளது.

வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் மீண்டும் மீண்டும் அந்த மதச்சார்பின்மையை எதிர்த்துப் பல நடவடிக்கைகள்மூலம் மறைமுகமாக ஹிந்துராஷ்டி ரம்தான் எங்களது ஆட்சியில் – இந்தியாவில் என்று காட்டி வருகிறார்கள்.

அரசுத் தலைமையே, அயோத்தியில் இராமன் கோவில் திறப்பில் பங்கேற்பது, கும்பமேளாவை அரசே நடத்துதல் முதல் ஜி.எஸ்.டி. வரிச் சலுகை அறிவிப்பு என்றாலும்  அது ஹிந்து பண்டிகைகளான நவராத்திரிப் பரிசு, தீபாவளி பரிசு என்று பிரதமர் முதல் நிதியமைச்சர் வரை கூறுவது, இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது!

ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி – தங்களிடம் சிக்கிய அதிகாரத்தைக் கொண்டு மதச்சார்பின்மையைக் குழிதோண்டிப் புதைப்பதற்கான நடவடிக்கைகளைச் செய்துவருகிறது.

தசரா விழாவில் இஸ்லாமியர்
பங்கேற்கக் கூடாதா?

அண்மையில், பெங்களூருவில் மைசூர் தசரா விழாவினைப் பெண் ஆற்றலாளர், ‘புக்கர்’ பரிசு பெற்ற பிரபல எழுத்தாளர் பானு முஷ்டாக் அம்மையாரைக் கொண்டு தொடங்க, கருநாடக முதலமைச்சர் சித்தரா மையா அரசு முடிவெடுத்து ஏற்பாடு செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் பி.ஜே.பி.யைச் சேர்ந்த ஒருவர்மூலம் வழக்கைப் போட வைத்து, அவர் கலந்துகொள்வதற்குத் தடை கோரினர்.

கன்னட எழுத்தாளர் பானு முஷ்டாக் இஸ்லாம் மார்க்கத்தைச் சேர்ந்தவர்; வழக்குரைஞர். அவர் எழுதிய சிறுகதைகளில் சில தொகுக்கப்பட்டு, “ஹார்ட் லேம்ப்” என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. அந்த நூல் 2025 ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசை வென்றுள்ளது. பத்திரிகையாளராகவும் சில காலம் பணியாற்றியுள்ள பானு முஷ்டாக் அம்மையார், அடிப்படைவாதத்திற்கும், சமூக அநீதிகளுக்கும் எதிராக 1980களிலிருந்து தொடர்ந்து போராடக் கூடியவர். இஸ்லாம் பெண்கள் உரிமை உள்பட பலவற்றுக்காகவும் போராடியவர். குடும்பத்துடன் சமூக ஒதுக்குதலையும் சந்தித்தவர்.

வழக்குத் தள்ளுபடி

பேசப்படாத பல்வேறு செய்திகளையும் பேசியுள்ள அவரது படைப்புகள் உலகப் புகழ்பெற்ற ‘புக்கர்’ பரிசின் மூலம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்த நிகழ்ச்சிக்கு அவரை அழைத்ததால் எதிர்ப்பு எழுந்த போதே, தசரா என்பது மதச்சார்பற்ற, மதம் தொடர்பற்ற விழா என்று கூறி, அந்த எதிர்ப்பைப் புறம் தள்ளியிருந்தார் கருநாடக முதலமைச்சர் சித்தராமையா.

அந்த வழக்கை செப்டம்பர் 19 ஆம் தேதி விசாரித்த மாண்பமை நீதிபதிகள் ஜஸ்டிஸ் விக்ரம் சேத், ஜஸ்டிஸ் சந்தீப் மேனன் ஆகியோர் அமர்வு, வழக்கைத் தள்ளுபடி செய்தது.

‘‘மதச்சார்பின்மை என்பது அரசியலமைப்புச் சட்டம் வகுத்த நெறி. அதனைப் புறந்தள்ள முடியாது; கூடாது’’ என்று ஆணியடித்ததுபோல் கூறியுள்ளனர்!

‘‘ஓர் அரசு அனைத்து மக்களுக்குமானதாகும். பொதுவானதாகவே நடக்கவேண்டும் – குறிப்பிட்ட ஒரு மதம் பக்கம் சாய்ந்துவிடக் கூடாது’’ என்று கூறி, ‘மனுதாரர், நீங்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்பு ரையைப் படித்துள்ளீர்களா?’ என்று கேட்டனர் நீதிபதிகள்.

‘ஹிந்து மதத்தைச் சார்ந்த ஒரு பெரிய மனிதர் தசராவைத் தொடங்கி வைக்கவேண்டும்’ என்ற வாதத்தை ஏற்காமல் புறந்தள்ளினர்.

‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதுதான்
சரியான அணுகுமுறை!

‘‘தசரா விழா, மத விழா அல்ல; மதச்சார்பற்ற பொது  அரசு விழா. எனவே, எவரும் தொடங்கி வைக்கலாம்’’ என்று துணிந்து கூறி,  இந்த அம்மையாரை அழைத்து விழா வைச் சிறப்பாக  நடத்தியும், உச்சநீதிமன்றத் தீர்ப்பி னையும் பெற்ற கருநாடக முதலமைச்சர் மாண்புமிகு சித்தராமையா அவர்களுக்கு நமது பாராட்டுகள்!

பன்மதங்கள், பல கலாச்சாரம், பல மொழிகள் உள்ள ஒரு நாட்டில், ‘‘வேற்றுமையில் ஒற்றுமை’’ (Unity in Diversity) என்பதுதானே சரியான அணுகுமுறை!

இந்திய அரசியலமைப்புச் சட்டம் – வெறும் ‘ஏட்டுச் சுரைக்காய்தானா?’ அல்லது செல்லரிக்கப்பட்ட புத்தகம்போல் ஆக்கப்பட்டுவிட்டதா?

ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வின் ஹிந்து மதவெறியை இதைவிட தெளிவாக நீதிமன்றங்கள் கூற முடியாது!

தமிழ்நாட்டில் அடாவடி அரசியல் செய்ய ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கிளையாக ராஜ்பவனைப் பயன்படுத்தும் ஆர்.என்.ரவி என்ற ஆளுநர், நவராத்திரி கொலு வைத்துக் கொண்டாடுவதற்கு, அனைத்து மக்களின் வரிப் பணத்தைக் கொடுப்பதா? இது போன்றவற்றைச் செய்வதற்குத்தான் ஊதியம் தந்து அரசு அவருக்கு அந்த பொறுப்பினைத் தந்துள்ளதா?

2026 தேர்தலில் பாடம் கற்பிப்பீர்!

மதச்சார்பின்மையைக் கடைப்பிடிக்காமல் செய்து வருகின்ற, இத்தகைய அடாவடித்தனம், அதிகார ஒருதலைப்போக்குக்கு முற்றுப்புள்ளி வைத்தே ஆகவேண்டும்.

அதற்கு வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறப் போகும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் பதில் கூறுவர்!

 

 

தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
24.9.2025       

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *