மின்சாரம்
1929 பிப்ரவரி 17,18 ஞாயிறு, திங்கள் கிழமைகளில் செங்கல்பட்டில் முதல் தமிழ் மாகாண மாநாடு நடைபெற்றது.
அதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் (1925) சுயமரியாதை இயக்கத்தை தந்தை பெரியார் தோற்றுவித்தார்.
அந்த இயக்கத்தின் பெரும் வீச்சுதான் செங்கல்பட்டு மாநாடு.
மாநாட்டு உலகில் அதற்குத் தனிப் பெரும் மகுடம் உண்டு. சொன்னால் வியப்பின் விளிம்புக்கே தள்ளப்பட்டு விடுவோம்.
சென்னையிலிருந்து செங்கல்பட்டுக் குப் பேரணியாம் – வாகனப் பேரணியாம். 36 மைல் பேரணி என்றால் நம்ப முடிகிறதா? நடந்தது உண்மை என்பதால் நம்பத்தானே வேண்டும்!
மதுரையிலிருந்து தனி இரயிலில், மாநாட்டுத் தலைவர் இராமநாதபுரம் மாவட்ட ஜில்லா போர்டு தலைவரும், 750 தோழர்களும் செங்கல்பட்டு மாநாட்டுக்கு வருகை தந்தனர்.
அந்த மாநாட்டுக்கு வருகை தர வேண்டும் என்ற ஓர் அரிய கட்டுரையை கைவல்யம் அவர்கள் தீட்டினார்.
‘‘கை எப்பொழுதும் உடம்பில் நோயுள்ள இடத்தைப் போய் தீண்டுவது போலவே, நம்முடைய கருத்து முழுவதும் செங்கல்பட்டு மாநாட்டை நோக்கியே செல்லுகிறது. பல நூற்றாண்டுகளாக நாம் வாயை மூடிக் கொண்டு அவமானப்பட்டதெல்லாம் ஒன்று சேர்ந்து கடைசியில் சுயமரியாதை மாநாடாகப் பரிணமித்திருக்கிறது’’ என்று எவ்வளவு அழகாக நம் நிலையைச் சித்திரமாகத் தீட்டியுள்ளார் கைவல்யம் என்றால், அவர் ஒரு தனிப் பாணிதான்.
1929இல் நடைபெற்ற மாநாட்டிற்காக அவர் அப்படி எழுதி இருந்தாலும், ஒரு நூற்றாண்டு சுயமரியாதை இயக்கத்தால் தந்தை பெரியார் ஊட்டிய எழுச்சியால் சில மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பினும், இன்னும் இழிவுகள் சட்ட ரீதியாக நமது கழுத்தைப் பிடித்து நெரித்துக் கொண்டு தானே இருக்கின்றன.
இந்திய அரசமைப்புச் சட்டப்படி, பார்ப்பனர் அல்லாத மக்கள் மதப் பாதுகாப்புப் பிரிவின்கீழ் சூத்திரர்கள் தானே – வேசி மக்கள்தானே!
‘‘ஆகமங்களை முறையாக படித்து, தேர்ச்சி பெற்று இருந்தாலும் பார்ப்பனர் அல்லாதவர்கள் கோயில் கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்ய அருகதை கிடையாது – அப்படி சென்றால் கருவறை தீட்டுப்பட்டு விடும் – ஏன் இன்னும் ஒருபடி மேலே சென்று சாமியே செத்துப் போய் விடும் என்று வைகனாச ஆகமத்தை எடுத்துக்காட்டி உச்சநீதிமன்றத்தில் பராசரன் போன்ற மூத்தப் பார்ப்பன வக்கீல்கள் வாதாடுகிறார்களே! அதற்குத் தலையாட்டும் நீதிபதிகளும் இருக்கத் தானே செய்கிறார்கள்.
இந்தக் கேவலமான இழி நிலையை வீழ்த்திட, ஒவ்வொரு பார்ப்பனரல் லாதவனும் – எந்தக் கட்சித் தமிழனாக இருந்தாலும் கிளர்ந்து எழ வேண்டாமா? இந்த இழிவை எல்லாம் ‘வேரோடு கெல்லி எறிய’ திராவிடர் கழகத்தின் தலையில் மட்டும்தான் விடிந்திருக்கிறதா?
‘சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா? ஜாதி இருக்கும் நாட்டில் சுதந்திரம் இருக்குமா?’ என்று தந்தை பெரியார் எழுப்பிய கேள்விக்கு எந்த மே(ல்) தாவிகள் இதுவரை பதில் கூறியிருக்கிறார்கள்?
சுயமரியாதை இயக்க நூற்றாண்டுக் காலத்திலும் இந்தக் கேள்வியை எழுப்ப வேண்டிய நிலையில் தானே இருக்கிறோம்?
வரும் அக்டோபர் 4ஆம் தேதி செங்கல்பட்டு அருகில் உள்ள (தாம்பரத் திற்கும் – செங்கற்பட்டுக்கும் நடுவில்) மறைமலைநகரில், திராவிடர் கழகத்தின் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவும், திராவிடர் கழக மாநில மாநாடும் இன இழிவை ஒழிக்கும் மாநாடாகவும், அது சமூகநீதியில் வெறும் எச்சங்களாகவே இருக்கும் நிலையை நிர்மூலமாக்கி முழு அளவில் இட ஒதுக் கீட்டை ஈட்டுவதற்கான ஈட்டி முனை மாநாடாகவும் இருக்கும் – இருக்கவும் போகிறது!
ஜாதி ஆணவக் கொலையை எந்த வகையிலும் அனுமதிக்கவே முடியாது.
1929 செங்கல்பட்டு சுயமரியாதைக்கான மாநாட்டில் ஜாதிப் படங்களைத் துறக்கக் கோரும் தீர்மானத்தை நிறைவேற்றிய தோடு நிற்கவில்லை. அம்மாநாட்டிலேயே முக்கிய தலைவர்களே தங்கள் பெய ருக்குப் பின்னால் ஒட்டிக் கொண்டிருந்த அந்த ஜாதி வாலை நறுக்கி எறிந்தனர்.
இப்பொழுது ஜாதி சங்கங்களை நடத்திக் கொண்டு இருக்கும் தலைவர் களேகூட தங்கள் – பெயருக்குப் பின் ஜாதிப் பட்டத்தைப் போட்டுக் கொள்ள வெட்கப்படும் நிலையை உருவாக்கியுள்ளோம்! இது ஒரு புரட்சிதான் – அதில் ஒன்றும் அய்யமில்லை.
செங்கல்பட்டு மாநாட்டில் நிறைவேற் றப்பட்ட மாநாட்டுத் தீர்மானங்கள் அன்றாடம் பேசு பொருளாகவே உள்ளன.
குறிப்பாக அம்மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட பெண்கள் குறித்த தீர் மானங்கள், தொடர்ந்து நடைபெறும் திராவிட இயக்க ஆட்சியில், குறிப்பாக முத்தமிழ் அறிஞர் கலைஞர், சமூகநீதிக் கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் ‘திராவிட மாடல்’ அரசின் நாயகர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஆட்சியில் இதுவரை காணாத வகையில் புதிய புதிய சிகரங்களைத் தொட்டுக் கொண்டுள்ளன.
சட்டமன்றங்கள், நாடாளுமன்றங்களில் பெண்களுக்கான 33 விழுக்காடு சட்டம் உறை பனியில் உறங்கிக் கொண்டு இருக் கிறது.
‘‘பெண்கள் படித்து விட்டால் கணவன் சொல்லைக் கேட்பதில்லை; அத்தகைய பெண்களை விவாகரத்து செய்திட வேண்டும்’’ என்கிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்.
மதச் சார்பின்மை, சோசலிசம் என்ற சொற்களையே இந்திய அரசமைப்புச் சட்டத்தின் இருப்பிலிருந்து தூக்கி எறிய வேண்டும் என்று பச்சையாகச் சொல்லும் பாசிச ஆட்சி ஒன்றியத்தில் –
விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்கிறது – இந்திய அரசமைப்புச் சட்டம் (51A-h). ஆனால் ஒன்றிய பிஜேபி அரசோ, 450 ஆண்டு வரலாறு படைத்த பாபர் மசூதியை இடித்து விட்டு, ராமன் கோயிலைக் கட்டி அதில் பிரதமரோ தலைமைப் பூசாரிபோல பாவனை காட்டுகிறார் – அடுத்து சீதைக்குக் கோயிலாம்!
சாணியை சாப்பிடச் சொல்லுகிறார்கள். மூத்திரத்தைக் குடிக்கச் சொல்லுகிறார்கள்.
இப்பொழுது ஒரு சித்தாந்தப்போர் நடந்து கொண்டு இருக்கிறது. தந்தை பெரியார் ‘நாட்டில் நடப்பது ஆரியர் – திராவிடர் போராட்டமே’ என்றார். அதனை நேராகவே பார்த்துக் கொண்டு இருக்கிறோம். ஆளுநர் மாளிகையும், அய்.அய்.டி.யும் ஆர்.எஸ்.எஸ். முகாம்களாக செயல்படுகின்றன.
இந்தக் கால கட்டத்தில் நாட்டு மக்களுக்கும் வழி காட்டும் வகையிலும், புத்தெழுச்சியை உண்டாக்கும் திசையிலும் மக்களை வார்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு திராவிடர் கழகத்திற்கும் முற்போக்குச் சிந்தனையாளர்களுக்கும் நிச்சயம் இருக்கிறது.
எப்பொழுதுமே இது போன்ற சித்தாந்தப் போரில் வழிகாட்டும் ஒளிக் கோளமாக சுயமரியாதை இயக்கமான திராவிடர் கழகம் இருந்து வந்திருக்கிறது. இந்தக் கால கட்டத்தில் அதன் கடமை அதிகரித்துள்ளது. மறைமலைநகர் மாநாடு அதன் வலிமையைக் காட்டும் – கூட்டும்!
இந்த மாநாட்டுக்கு ஒரு சிறப்பு அம்சம் உண்டு; செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாகாண மாநாட்டைத் திறந்து வைத்தவர் அன்றைய முதலமைச்சர் டாக்டர் சுப்பராயன்.
செங்கல்பட்டு மாநாட்டின் 80ஆம் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சங்கநாதம் செய்தவர் மானமிகு சுயமரியாதைக்காரரான முத்தமிழ் அறிஞர் கலைஞர் (18.2.2008)
இப்பொழுது மறைமலை நகரில் அக்டோபர் 4இல் நடைபெறவிருக்கும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, திராவிடர் கழக மாநில மாநாடுகளுக்கு தலைமை விருந்தினராகப் பங்கேற்று நிறைவுப் பேருரையை நிகழ்த்த இருப்ப வரும் முதலமைச்சர் தான்! ஆம், தமிழ்நாட்டின் ‘திராவிட மாடல்’ ஆட்சியை இந்தியாவே மூக்கின் மேல் விரலை வைத்து நோக்கும் வகையில் சாதனை வாகை சூடும். மானமிகு மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்தான் லண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் படத்தினை திறந்து வைத்து அகிலத்தின் கண்களையே பார்க்க வைத்த கையோடு, நமது மாநாடுகளிலும் பங்கேற்று சுயமரியாதை இயக்கத்தின் திராவிடர் கழகத்தின் சித்தாந்தத்தை சீரிய முறையில் முரசு கொட்ட இருக்கிறார்.
மறைமலைநகர் எங்கிருக்கிறது என்று தெரியாதவர்கள் எல்லாம் தெரிந்து கொள்ளப் போகிறார்கள். ஹிந்தி எதிர்ப்புப் மாநாட்டில் 1937 மற்றும் 1948 களில் தந்தை பெரியாரோடு பங்கேற்ற பெருமகனார் மறைமலை அடிகள் ஆவார்.
மறைமலை அடிகளாரின் ‘அறிவுரைக் சொத்துகள்’ என்ற நூலை சென்னைப் பல்கலைக் கழகம் தடை செய்தபோது, அதனை எதிர்த்துக் குரல் கொடுத்தவர் தந்தை பெரியார் ஆவார்.
அந்த வகையிலும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாடும், திரா விடர் கழக மாநாடும் மறைமலை நகரில் நடைபெறுவது மிக மிகப் பொருத்தமே!
மாநாட்டுப் பணிகளில் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் மானமிகு
வீ. பன்னீர்செல்வம் தலைமையில் முழு நேரப் பணிகளாக தோளின்மீது கை போட்டுக் கொண்டு அதே பணியில் மூழ்கி இருக்கிறார்கள். நாள் முழுவதும் சுற்றிச் சுழன்று பணியாற்றுகிறார்கள் கருஞ்சட்டைத் தோழர்கள். சுற்று வட்டார பகுதிகளிலும், கிராமங்களிலும் மாநாட்டை விளக்கி தோழர் கலைவாணன் முத்துக்கூத்தனின் பொம்மலாட்டம் பிரச் சாரம் ஓகோ என்று கடந்த ஒரு மாதமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.
பொது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கிறது. நன்கொடைகளைத் தந்து உற்சாகம் ஊட்டுகின்றனர்.
பெரும்பாலும் இளைஞர்களும், நடுத்தர வயதுடையோரும் கடந்த 15 நாட்களாக தேனீக்களாகப் பறந்து பறந்து பணியாற்றுகிறார்.
நமது மானமிகு ஆ. இராசா எம்.பி., (தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர்) மாநாட்டுத் திறப்பாளர் – என்ன பொருத்தம்! என்ன பொருத்தம்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் திருமாவளவன் ‘உலகத் தலைவர் தந்தை பெரியார்’ (12ஆம் தொகுப்பு – இறுதியானது) நூலை வெளியிட்டு, அவருக்கே உரித்தான முறையில் ஆர்ப்பரித்து உரை நிகழ்த்துவார். பெரியார் விருது பெற்ற மானமிகு கனிமொழி கருணாநிதி பங்கேற்று உரையாற்றுகிறார்.
எப்பொழுதும் நமக்கு உறுதுணையாக இருக்கும் அமைச்சர் மாண்புமிகு தா.மோ. அன்பரசன் கண்காட்சியைத் திறந்து வைத்து உரை நிகழ்த்துவார். தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்த நாள் ‘விடுதலை’ மலரை இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் தோழர் மு. வீரபாண்டியனின் உரை வீச்சு உண்டு.
படத்திறப்புகள், கருத்தரங்கம், பட்டி மன்றம் முதலிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பெரியார் சமூகக் காப்பு அணியின் மரியாதையை ஏற்று, கழகக் கொடியைக் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு
கி. வீரமணி அவர்கள் உயர்த்துகிறார். மாலை பேரணி உண்டு.
இடைவெளியில்லா முழு நாள் மாநாடு. கழகத் தோழர்களே, தமிழின உணர் வாளர்களே குடும்பம் குடும்பமாக தமிழ் மண்ணின் உணர்வை பாசிசக் கும்பலுக்கு உணர்த்திட, உறுத்திட வாரீர்! வாரீர்!!
இம்மாநாட்டின் எழுச்சியும், முழக்கமும் காலத்தை வென்று நிற்கும் கல்வெட்டாக ஒளிரும். மறைமலைநகர் மாநாட்டில் எங்கள் தந்தையார், எங்கள் தாத்தா, எங்கள் மாமா, அத்தைகள், அண்ணன்கள் பங்கேற்றனர் என்று அடுத்த தலைமுறை மார்த்தட்டிச் சொல்ல வேண்டாமா?
வாரீர்! வாரீர்!! வங்கக் கடல் பெருக்கெடுத்ததோ என்று எண்ணும் வண்ணம் கருஞ்சட்டை கடலே வருக!
உங்கள் வருகையை உற்சாகத்தோடு காண தமிழர் தலைவர் காத்திருக்கிறார்!
உங்கள் பெருந்திரள் அவர் வயதை வளமையாக்கும் சரிதானா? மாநாட்டுக்கு வரத் தயாராகி விட்டீர்களா?